EntertainmentUS & Canadaமாயமான்

மார்க்கம் காட்டிய மார்க்கம்: புல்லரித்துப்போன ஏ.ஆர்.ரஹ்மான்!

மாயமான்

ஏ.ஆர்.ரஹ்மான் தொழில் நித்தமாக சமீபத்தில் கனடா வந்தபோது அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. மார்க்கம் நகரின் மேயர் ஃபிராங்க் ஸ்கார்ப்பிட்டி வீதியில்லாத வீதியொன்றுக்கு அவரது பெயரைச் சூட்டி மகிழ்ந்தமை ரஹ்மானைப் புல்லரிக்க வைத்திருக்கிறது.

எங்கோ ஒரு திக்குத் தெரியாத முன்னாள் காடொன்றின் மத்தியில் ‘ஏ.ஆர். ரஹ்மான்’ என்று பச்சை நிறத்தில் பெயர் பொறித்த பலகையொன்றை வைத்து படமொன்றை எடுத்துக் காட்டியிருக்கிறார். வயல்களையும், காடுகளையும் அழித்து நாடாக்கும் கனடாவில் வீதிகளுக்குப் பஞ்சமில்லை. ரஹ்மான் போன்ற நல்ல பெயர்களுக்குத்தான் பஞ்சம்.

குறிப்பாக மார்க்கம் நகரில் தமிழர்கள், இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் போன்றோர் கலந்து வாழ்கிறார்கள். இங்கு சில வட்டாரங்களில் கவுன்சிலர்களாகப் போட்டியிடுபவர்களில் இம் மூன்று நாட்டவரும் பொதுவாக மோதிக் கொள்வதுண்டு. அவ்வப்போ தமது உணர்ச்சி வசப்பட்ட மகாஜனங்களைப் புல்லரிக்க வைத்து வாக்குகளைப் பெறுவதற்காக வீதிகளுக்குப் பட்டை தீட்டுவது வழக்கம். அப்படிப் பிறந்த சில வீதிகள் ‘வன்னி வீதி’, ‘கராச்சி வீதி’, ‘நியூ டெல்ஹி வீதி’ (இது ஆரம்பத்தில் ‘நியூ டெஹ்லி’ என்று பெயரிடப்பட்டிருந்தது) ஆகும். வேறு நாட்டவர்கள் இவ்விடயத்தில் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. இது பெரும்பாலும் ஒரு இந்திய துணைக்கண்ட விவகாரம்.

City of Markham honours AR Rahman by naming a street after him. I never imagined this ever in my life. I am very grateful to all of you, the Mayor of Markham, Canada (Frank Scarpitti) and counsellors, Indian Consulate General (Apoorva Srivastava) and the people of Canada

A.R.Rahman

கடந்த வாரம் இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் அவரது உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாக ரொறோண்டோவில் நிகழ்ச்சியொன்றை நடத்த அழைக்கப்பட்டிருந்தார். அப்போது ஃப்ராங்க் ஸ்கார்ப்பிட்டி அவரைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு ஒரு திக்குத் தெரியாத காட்டில் ஒரு கம்பத்தை வைத்து அதற்கு ‘ஏ.ஆர்.ரஹ்மான்’ எனப் பச்சை குத்தி பரிவாரங்களுடன் படமெடுத்து மகிழ்ந்திருக்கிறார். வழக்கமான, அதிகாரிகள் புடைசூழ ஊடகங்கள் ஓடித்திரிய, ‘திரைச்சீலை நீக்கத்துடன்’ சம்பிரதாயபூர்வமாக இது நடைபெறவில்லை. ஏதோ அவசரம் அவசரமாகச் செய்த, குழந்தைப்பிள்ளைகளின் விளையாட்டுத்தனமான ஒன்றாக, எவரையோ திருப்திப்படுத்த மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையாகவே இது பார்க்கப்படும். உலகப் பிரபலமான, ஒஸ்கார் விருது பெற்ற ஒரு மாபெரும் கலைஞனை இப்படியும் அவமானப்படுத்தலாம் என்பது துணைக்கண்டக்காரருக்கு மட்டுமே தெரியும்.

சரி, போகட்டும். “இவ் விடயம் தன்னை இளைப்பாறாமல் தொடர்ந்து இயங்குவதற்கு ஊக்கம் தந்திருக்கிறது” என இசைப்புயல் ருவிட்டரில் உருகித்தள்ளியிருப்பதாக இந்திய ஊடகங்கள் ஊதித் தள்ளுகின்றன. 30 வருடங்கள் கலைத்துறையில் பயணித்து உச்சியை அடைந்திருக்கும் ஒரு கலைஞன் உருகிப் போவதற்கு இப்படி ஒரு அற்பமான விடயம் தேவையில்லை. சில அரசியல்வாதிகள் தமது வாக்குகளுக்காக ஒரு நமது அற்புதமான கலைஞனை அவமானப்படுத்திருப்பதாகவே இதைப் பார்க்கவேண்டியிருக்கிறது. வேண்டுமானால் உண்மையான வீதியொன்றுக்கு உத்தியோகபூர்வமாக பெயர் சூட்டும் வைபமொன்றை ஒழுங்குசெய்து அதற்கு ரஹ்மானை அழைத்துக் கெளரவித்திருக்கலாம்.

இந் நிகழ்வு குறித்து ரஹ்மான் மார்க்கம் மேயர் ஸ்கார்ப்பிட்டி, கவுன்சிலர்கள், இந்திய உதவி தூதர் அபூர்வா சிறிவஸ்தாவா மற்றும் கனடிய மக்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்லாது தனது பெயர் பற்றி இப்படிக் கூறியிருக்கிறார்: “ரஹ்மான் என்பது என்னுடைய பெயர் அல்ல. ‘இரக்கமுள்ள’ என்ற அர்த்தத்தை அது கொண்டது. கடவுளின் இயல்பு அதி இருக்கிறது. அது கனடாவுக்கு அமைதியயும் செழிப்பையும் கொண்டுவரும் என நான் நம்புகிறேன்”. அவரது விருப்பம் நிறைவேற வேண்டுகிறோம்.

ஆனால் அவர் தொடர்ந்து தெரிவித்த கருத்து கொஞ்சம் ஓவர். “என் பெயரைச் சூட்டியதன் மூலம் எனது தோள்களில் பெரும் பொறுப்பொன்று சுமத்தப்பட்டிருக்கிறது. தொடர்ந்தும் செயலாற்றுவதன் மூலம் மக்களை ஊக்கப்படுத்துவதுடன், ஓய்வு பற்றிச் சிந்திக்காது அயராது செய்லாற்றவேண்டும் என்ற எண்ணத்தைத் தருவதாகவும் இருக்கிறது” என்று கூறிப் புளகாங்கிதமடைந்திருக்கிறார்.

ஒரு வீதிக்குப் பெயர் சூட்டுவதன் மூலம் ஒரு உலகத்தரக் கலைஞனை இப்படி உசுப்பேத்தமுடியுமானால் உலகம் இதைக் ‘கொப்பி’ பண்ணிவிடுமோ எனப் பயமாக இருக்கிறது.

பிற்சேர்க்கை (செப்டம்பர் 01, 2022)

[ஏ.ஆர். ரஹ்மான் பெயரில் மார்க்கம் நகரில் வீதிக்குப் பெயரிட்டது தொடர்பாக வந்த செய்தி தொடர்பாக ஒன்ராறியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் திரு லோகன் கணபதி அவர்களது அலுவலகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல் இங்கு முழுமையாகப் பிரசுரமாகிறது]

MPP Logan Kanapathi யின் ஏற்பாட்டில்ஒன்ட்டாரியோ மாகாண சட்டசபையில் “இசை புயல்” எ. ஆர். ரஹ்மான் அவர்களுக்கு அரச கெளரவம் அளிக்கப்பட்டது.

கடந்த வாரம் கனடாவிற்கான இசைப்பயணம் மேற்கொண்டு வருகை தந்த இசைத்துறையில் இமாலய சாதனைகள் படைத்த இசைபுயல் எ. ஆர். ரஹ்மான் அவர்களுக்கு திங்கள் கிழமை 29ம் திகதி ஒன்ட்டாரியோ பாராரள மன்றத்தில், சமூக மற்றும் சமூகசேவைகள்,பிள்ளைகள் சமந்தமான அமைச்சின் பாராளமன்ற உதவியாளரும் (PA to the Ministry of Children, Community and Social services) மார்க்ஹம் தொர்ந்ஹில் பாராளமன்ற உறுப்பினருமாகிய MPP லோகன் கணபதி அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பான அரச கெளரவம் அளிக்கப்பட்டது.

இதன் பொழுது Minister Michel Douglas Ford MPP (Minister of citizenship and multiculturalism) அவர்கள் ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கு ஒண்டாரியோ அரசின் வாழ்த்து மடலை வழங்கி கௌரவித்தார்.

இதனை தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக ஒன்ட்டாரியோ முதல்வர் Dough Ford அவர்களுக்கு MPP Logan Kanapathi அவர்களினால் அறிமுகம் செய்யப்பட்ட எ.ஆர்.ரஹ்மான் அவர்களை முதல்வர் தனது உத்தியோகபூர்வ இருக்கையில் மகிழ்ச்சியுடன் அமரச்செய்து கௌரம் அளித்து வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்வித்தார்.

இதனை தொடர்ந்து சட்ட சபை கேள்வி நேரத்தின் போது கலரிக்கு அழைத்து செல்லப்பட்ட எ.ஆர்.ரஹ்மான் சபாநாயகர், மாகாண பாராள மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் MPP Logan Kanapathi அவர்களினால் அறிமுகம் செய்து உரை ஆற்றிய பொழுது எல்லோரும் எழுந்து நின்று கரகோஷம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். எ.ஆர் ரஹமான் பற்றிய அறிமுக உரையில் மேலும் பேசிய MPP லோகன் கணபதி “பல உயரிய விருதுகளை வென்ற இசை புயல் தமிழ் மொழியின் அடையாளம், தனது சிறப்பான அரிய இசையால் நாம் வாழும் காலத்தில் பல மில்லியன் மக்களின் மக்களின் மனதை கொள்ளை கொண்ட இசைக்கலைஞ்சன் மட்டுமன்றி தனது இசை மூலம் தமிழனத்தின் அடையாளமான தமிழை உலகமெல்லாம் எடுத்துசெல்கின்ற மாபெரும் இசைக்கலைஞ்சன்” என்று புகழாரம் சூட்டினார்.

MPPLogan Kanapathi அவர்களினால் இசை புயலுக்கு வாழ்த்து மடல் வழங்கப்பட்டத்தை தொடர்ந்து CMR Ram Pirasanna அவர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த எ. ஆர. ரஹ்மான் கனடா வாழ் அனைத்து தமிழர்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு, தமது இரத்தமும் தமிழ் தான், தமிழ் தான் எம்மை எல்லாம் மேன்மைப்படுத்துகிறது, ஒற்றுமைப்படுத்துகிறது “தமிழ் வாழ்க” என்று குறிப்பிட்டார்.