Sri Lanka

மார்க்கப் பள்ளிகளையும், முழு உடற் கவசங்களையும் உடனடியாகத் தடை செய்ய வேண்டும் – ரத்தன தேரர்


மார்க்கப்பள்ளிகளையும் (madrasas), முழுவுடற் கவசங்களையும் (burkha), காதி நீதினம்றங்களையும் (kathi courts) அரசாங்கம் ஒரு வாரத்துக்குள் தடை செய்யாவிட்டால், தான் முஸ்லிம்களின் வியாபார நிலையங்களைப் பகிஷ்கரிக்கக்கோரி நாடு தழுவிய இயக்கமொன்றை ஆரம்பிக்கவிருப்பதாக ‘அப்பே ஜன பல’ கட்சியின் தலைவர் அத்துரலிய ரத்தன தேரர் நேற்று அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ரத்தன தேரர், “முஸ்லிம் சமூகத்திலுள்ள சில சக்திகள் இனவாதத்தை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதை அரசாங்கம் புரிந்துகொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். சில முஸ்லிம்கள் சம்பத் வங்கியைப் புறக்கணிக்கும்படி மக்களைத் தூண்டி வருவதும், சில முஸ்லிம் வியாபார நிலையங்கள் பகிரங்கமாகத் தமது கடைகளில் இது பற்றிய பதாகைகளை வைத்திருப்பதும் தொடர்பாகவே ரத்தன தேரர் இந் நடவடிக்கையை ஆரம்பிக்கவிருப்பதாக அறியப்படுகிறது.

“ஜமியாத்துல் உலாமா சங்கம் உட்பட்ட பல முஸ்லிம் அமைப்புக்கள் இந்த இனவாத பிரச்சாரத்தை மேற்கொள்ளும் தீவிரவாத முஸ்லிம்களுக்கு எதிராக அறிக்கை எதுவும் விடாது மெளனமாக இருக்கின்றன. இப்படியான நடவடிக்கைகளை இந் நாட்டில் அனுமதிக்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

முழுக் கவசம், மார்க்கப்பள்ளிகள், காதி நீதிமன்றங்கள் போன்றவற்றை அரசாங்கம் உடனடியாகத் தடை செய்ய வேண்டுமெனவும், இது பற்றி கொழும்பிலுள்ள புத்த மஹாசங்கம் கலந்துரையாட வேண்டுமெனவும் ரத்தன தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.