Arts & Entertainmentமாயமான்

‘மாத்தி யோசித்த’ தமிழ்ப் பட இயக்குனர்கள்

‘மாத்தி யோசித்த’ தமிழ்ப் பட இயக்குனர்கள்

தமிழ் சினிமா வரலாறு / மாயமான் – பாகம் 3

11. பேசும் படம் (1987): சங்கீதம் சிறினிவாசராவினால் இயக்கப்பட்ட ஓசையற்ற (பேசாத) இப் படத்தில் கமல்ஹாசன் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தியாவில் நாடுதழுவிய ரீதியில் திரையிடக்கூடியதான (Mr.Bean வகையிலான) திட்டத்துடன் தயாரிக்கப்பட்ட ஆரம்ப முயற்சிகளில் ஒன்றான இப்படத்தில் கதைவசனம் என்று எதுவும் இல்லை. இக் காரணத்தால் கமல்ஹாசனோடு, அமலா, தின்னு ஆனந்த், ஃபரீடா ஜலால், பிரதாப் போத்தன் ஆகிய இதர மாநில நடிகர்ர்களையும் உள்ளடக்கி சங்கீதம் இப் படத்தினை உருவாக்கியிருந்தார். வருவாயில் படம் அள்ளி வாரியிருந்தது.



12. நாயகன் (1987): The Godfather படத்தினால் உந்தப்பட்டு மும்பாய் பாதாள உலக நாயகன் வரதராஜன் முதலியாரது கதையை வைத்து மணிரத்னம் இப் படத்தை உருவாக்கியிருந்தார். வேலு என்றொரு அனாதைக் குழந்தை கடத்தல் தொழிலில் நுழைந்து பின்னர் பாதாள உலக நாயகனாக உருவாகுவது தான் கதை. இப்படத்தில் கமல்ஹாசன் பிரதான பாத்திரத்தை ஏற்றிருந்தார்; அதற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. தமிழ் சினிமாவில் பிறரையும் ஊக்குவிக்கும் பட வகைகளில் இன்றும் பேசப்படும் அபட்மாக நாயகன் இருக்கிறது.

13. மைக்கேல் மதன காம ராஜன் (1990): சங்கீதம் சிறிநிவாசின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கமல் ஹாசன் நான்கு வெவ்வேறு வேடங்களை ஏற்று நடித்திருக்கிறார். தமிழ்நாட்டின் நான்கு வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பாத்திரங்களாக நடித்த அவர் அந்தந்த மாவட்ட பேச்சு வழக்கு, உரையாடல் முறை, உடலசைவு மற்றும் மனிதப்பண்பு ஆகியவற்றை வெளிப்படுத்துதுவதற்காகத் தன்னையே மாற்றி மாற்றி நடித்ததன் மூலம் இயல்பான நகைச்சுவையைப் படத்தில் திணித்திருப்பார். அந்த வகையில் இதுவரை வந்த தமிழ்ப்படங்களில் கதையோட்டத்தோடு இணைந்து ஓடிய நகைச்சுவையுடனான வகையறாக்களில் இது முதலிடத்தைப் பெறுகிறது. ஒந்றாகப் பிறந்த நான்கு குழந்தைகள் பிறப்பின்போது பிரிக்கப்பட்டு வெவ்வேறு மாவட்டங்களில் வளர்வதுதான் கதை. ஊர்வசி, ரூபிணி, குஷ்பு ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

14. கேளடி கண்மணி (1990): வசந்தின் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ராதிகா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருந்தார்கள். இளையோரை மையப்படுத்த்தும் விதத்தில் தமிழ் சினிமா நகர்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் மத்தியதர வயதுள்ள இருவரிடையே மலரும் காதலை முன்வைத்து எழுதப்பட்டது இப் படத்தின் கதை. அதில் ஒருவர் ஒற்றைப் பெற்றோர் (single parent) வகையைச் சேர்ந்தவர். தமிழ்க் கலாச்சாரத்துக்குள் இன்னமும் முழுமையாக வரவேற்கப்படாத ஒரு அம்சம். அத்தோடு இப்படத்தில் வரும் ‘மண்ணில் இந்த காதல்’ என்ற பாட்டை எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரே மூச்சில் பாடியிருப்பது, இன்று வரை முதலும் கடைசியுமானது. அந்த வகையில் இதுவும் வரலாற்றில் இடம்பெறும் படமாகிறது.

மண்ணில் இந்த…எஸ்.பி.பாலா (கேளடி கண்மணி (1990))


15. அஞ்சலி (1990): இது மணிரத்னத்தினால் இயக்கப்பட்டது. குடும்பங்களில் எதிர்பாராத விதமாகச் சம்பவிக்கும் மன நோய், விருத்திக்குறைவு ஆகிய விடயங்களை மிகவும் இளகிய மனதோடு அணுகும் மனப்பாங்கைத் தமிழ்க் கலாச்சாரத்திற்குள் புகுத்த முயற்சிக்கிறது இப்படம். குழந்தை ஷாமிலியின் பெற்றோராக ரேவதியும், ரகுவரனும் நடிக்கிறார்கள். திருமணம், பிள்ளை வளர்ப்பு ஆகியவற்றில் நவீன, மேற்கத்தைய அணுகுமுறையைப் பிரயோகித்து சுமைகளைப் பகிர்ந்துகொள்ளும் கலாச்சாரத்தைத் தமிழுக்குள் புகுத்திய முதல் படம். இப் படம் மூன்று தேசிய விருதுகளைப் பெற்றிருந்தது.