‘மாத்தி யோசித்த’ தமிழ்ப் பட இயக்குனர்கள் – பாகம் 4
தமிழ் சினிமா வரலாறு / மாயமான்
16. புலன் விசாரணை(1990): ஆர்.கே.செல்வமணியின் இயக்கியிருந்த இப்படத்தில் விஜயகாந்த் பொலிஸ் அதிகாரியாக நடித்திருப்பார். தொடர் கொலையாளி ஆட்டோ ஷங்கரது கதையைத் தழுவியது. தமிழில் இதுவரை வெளிவந்த படங்களில் சிறந்த crime thriller படமாக இன்றுவரை இருக்கிறது. இதைப் போலவே ஆர்.கே செல்வமணி விஜயகாந்தை வைத்து, சந்தனக் கட்டை வீரப்பனின் கதையைத் தழுவி எடுத்த கப்டன் பிரபாகரன் படமும் ஒரு சிறந்த திரில்லர் வகையான ஒன்று.
17. மகளிர் மட்டும் (1994): ஹொலிவூட் படம் 9-5 ஐத் தழுவி சிங்கீதம் சிறிநிவாசராவின் இயக்கத்தில் வெளிவந்திருந்தது இப்படம். வேலைத்தலங்களில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் துன்புறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் பலவிதமான பாரபட்ச நடைமுறைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசவைத்த வெகுசில தமிழ்ப்படங்களில் முதன்மையானது இதுவெனலாம். மூன்று வித்தியாசமான சமூக, சாதிப் பின்னணிகளைக் கொண்ட மூன்று பெண்கள் (ரேவதி, ஊர்வசி, ரோஹினி) வேலைத்தலத்தில் அவர்களது முதலாளியால் (நாசர்) மிகவும் கேவலமாக நடத்தப்படுவது இப் படத்தின் மையக் கதை. சீரியசான ஒரு கருத்தை முன்வைக்கும் ஒரு சமூக சீர்திருத்தப் படமானாலும் அதை மிதமான நகைச்சுவையுடன் நகர்த்தியிருப்பது படத்தை எக்காலமும் பார்க்கக்கூடிய ஒன்றாக ஆகிவிடுகிறது.
18. காதலன் (1994): சங்கர் இயக்கிய romantic thriller வகையான இப்படம் அதன் இசைக்காக இப்போதும் முன்வரிசையில் நிற்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் ஏ.ஆர்.ரஹ்மான் ரோஜா மூலமாக தமிழ்த் திரையுலகில் அதிரடிப் பிரவேசம் செய்திருந்தார். பிரபு தேவாவும் நக்மாவும் முன்னணிப் பாத்திரங்களாகத் தோன்றிய காதலன் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென, தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கென அவதாரமெடுத்த கடவுளாகிப் போனார். இப் படத்தை இந்த வரிசையில் சேர்ப்பதற்குரிய கதையொன்றையும் இப் படம் கொண்டிருக்கவில்லையெனினும் பிரபு தேவாவின் அசத்தும் நடனமும், ஏ.ஆர்.ரஹ்மானின் இஅசையும் சேர்ந்து இப்படத்தை உச்சத்துக்குக் கொண்டுபோயிருந்தன. ‘முக்காலா முக்காப்லா‘ பாடல் இன்றுவரை நாடுதழுவிய ரீதியில் நடன ரசிகர்களால் இசைக்கப்படும் ஒன்றாகிவிட்டிருக்கிறது.
19. சதி லீலாவதி (1995): பாலு மஹேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் ‘மேய்ந்து திரியும்’ தனது கணவனைத் திருப்பி வீட்டுக்குக் கொண்டுவர மனைவி திட்டமிடுவதைக் கதையாகக்கொண்ட் ஒரு comedy வகையைச் சேர்ந்தது எனலாம். இப்படியான கதைகள் நிஜ வாழ்விலும், தமிழ்ச்சினிமாவிலும் நிரம்பி வழிகின்ற ஒன்றாக இருப்பினும், அவற்றில் வரும் பெண்களைப் போல இப்படத்தின் நாயகியான லீலாவதி (கல்பனா) ஒன்றும் தன்னைத் தியாகம் செய்யும் பெண்ணல்ல. கணவனுடன் ‘சம்பந்தப்படும்’ மற்றப் பெண்ணை, அக்காலத்தில் போல ஒரு ‘வில்லியாகக் காண்பிக்காமல்’ அவருக்கும் உரிய கெளரவத்தைக் கொடுத்து ஒரு சமூகப் புரட்சியைச் செய்திருந்தது இப்படம். ரமேஷ் அரவிந்த், கமல் ஹாசன் மற்றும் கோவை சரளா ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.
20. குருதிப்புனல் (1995): இந்திப்படமான ட்றோகால் படத்தின் தமிழாக்கமான இப்படத்தை பீ.சீ.சிறீராம் இயக்கியிருந்தார். பெரும்பாலாக கல்லூரிக் காதல்களே தமிழ்த் திரையுலகை நிறைத்திருந்த இக் காலகட்டத்தில் இரண்டு பொலிஸ்காரர்கள் (கமல் ஹாசன், அர்ஜுன் சர்ஜா) பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்குவது, அப்போதைக்குப் புதுமையானதாகவே இருந்தது. எந்தவித பாடல்களுமே இல்லாமல், முதல் முதலாக டொல்பி இசையைப் புகுத்தியிருந்த தமிழ்ப்படமிது என்ற பெருமையை இது பெறுகிறது. இப் படத்தில் சந்தேக நபர்களை விசாரணை செய்யும் முறை பின்னால் பல தமிழ்ப் படங்களில் பின்பற்றப்பட்டது.