மாதவிடாய் வறுமை (?)
அகத்தியன்
தலைப்பு ஒரு மாதிரி இருக்கிறதா? Period Poverty என்பதற்கு இதை விட நல்ல மொழி பெயர்ப்பு இருந்தால் சொல்லுங்கள். இலங்கையில், பெண்கள், குறிப்பாகப் பருவப் பெண்கள், கல்லூரி மாணவிகள் எதிர்கொள்ளும் சுகாதார சவால்களில் முக்கியமானதெனக் கருதப்படும் மாதவிடாய்க்காலச் சுகாதாரப் பராமரிப்பு தொடர்பாக அனைத்துலக மருத்துவ நல அமைப்பு ஒரு திட்டமொன்றை முன்னெடுக்கவிருக்கின்றது. அதாவது கல்லூரி, பல்கலைக்கழகம், அலுவலகப் பணிகள் போன்றவற்றிற்குச் செல்லும் பெண்கள் மாதவிடாய்க் காலங்களில் உரிய சுகாதாரப் பொருட்களின்றி அவதிப்படுகின்றனர். சந்தைகளில் விற்கப்படும் பெண்-சுகாதாரப் பொருட்களின் விலைகள் அடிப்படை வருமானமுள்ள குடும்பங்களிலிருந்து வரும் பெண்களுக்கு மிக உயர்வாக இருப்பதனால் இப்பெண்கள் மிகுந்த சிரமங்களுக்கும், சங்கடங்களுக்கும் உள்ளாகிறார்கள். இதை நிவர்த்தி செய்யும் பொருட்டு சுகாதாரப் பட்டைகள் (sanitary pads) சுகாதார அணையாடைகள் (sanitary napkins) போன்றவற்றைத் தயாரித்து இப்பெண்களுக்கு இலவசமாக வழங்க அனைத்துல மருத்துவ நல அமைப்பு (IMHO-USA) ஒரு திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளது. இதற்கான இயந்திரங்கள், தளபாடங்கள் மற்றும் மூலப்பொருட்கள் ஏற்கெனவே மலையகத்திலுள்ள மஸ்கேலியா நகரை வந்தடைந்து விட்டன.
இலங்கையில் 4.2 மில்லியன் பெண்கள் மாதவிடாய் செயற்பாட்டுக்குள்ளாகிறார்கள். ஆயினும் இவர்களில் 30% மானவர்கள் மட்டுமே ஒரு-தடவை பாவிக்கும் (disposable) மாதவிடாய் சுகாதாரப் பொருட்களை வாங்குமளவுக்கு வசதி படைத்தவர்கள். ஏனையோர் இயலாமை காரணமாக சுகாதாரமற்ற மாற்று வழிகளை நோக்கித் தள்ளப்படுகிறார்கள். இதையே ‘மாதவிடாய் வறுமை’ (Period Poverty) என இங்கு நாம் அழைக்கிறோம்.
தற்போது இலங்கையில் ‘மாதவிடாய் வறுமை’ 50% மாக இருக்கிறது. 50% மான வீடுகளில் மாதவிடாய் சுகாதாரப் பொருட்களை வாங்குவதற்கு இயலாத நிலை உண்டு. இதனால் பெண்களும், பருவப்பெண்களும் தமக்குள் குமுறிக்கொள்கிறார்கள். இந்நிலை குறித்து அரசும் அதிகாரிகளும் அறிந்திருந்தும் எதுவும் நடைபெறுவதாகவில்லை. ‘மாதவிடாய் வறுமையால்’ பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை செல்லும் மாணவிகள். மாதவிடாய்க் காலத்தில் தொடர்ந்து பல மணித்தியாலங்கள் வகுப்பு ஆசனங்களில் இருக்கும்போது ஏற்படும் அசெளகரியம் சொல்லி மாளாது. வறுமைப்பட்ட குடும்பங்களிலிருந்து வரும் பெண்கள் பலர் பாடசாலை போவதைத் தவிர்த்துக்கொள்ளும் நிலையும் ஏற்படுகிறது. பாடசாலை நிர்வாகத்தினதும், பெற்றோரினதும் மாதவிடாய் பற்றிய கலாச்சாரப் பழமைவாதப் புரிதல்கள் இப்பிரச்சினையை சுகாதார ரீதியில் அணுகுவதைத் தடுக்கின்றன. சிலவருடங்களின் முன்னர் ஏற்பட்ட நாட்டின் பொருளாதார முடக்க காலத்திற்கு முன்பு மாதவிடாய் காரணமாக 37% மான மாணவிகள் ஓரிரு நாட்கள் பாடசாலை செல்வதைத் தவிர்த்திருந்தார்கள் என்கிறது புள்ளி விபரம். உரிய சுகாதார அணையாடைகள் இல்லாமையால் ஏற்படும் அவமானத்தைத் தாங்கமுடியாதென்பதற்காகவே இம்மாணவிகள் பாடசாலைகளைத் தவிர்க்கவேண்டி ஏற்பட்டது. பொருளாதார முடக்க காலத்திற்குப் பின்பு இவ்விலக்கம் 50% த்திற்கும் மேலாக அதிகரித்திருக்கிறது.




‘மாதவிடாய் வறுமை’யால் பெண்களின் சுகாதாரமும் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. சுகாதார அணையாடைகள் மற்றும் பஞ்சுத் தக்கைகள் போன்றவற்றை வாங்க முடியாமையால் சுத்தம் குறைந்த துணிகளையும் ஆடைத் துண்டுகளையும் பெண்கள் பாவிக்க முற்படுகிறார்கள். இத்துணிகளைத் துவைப்பதற்குப் பாவிக்கும் நீரும் அசுத்தமாக இருப்பின் இடைப் புற்றுநோய் (cervical cancer) போன்ற நோய்கள் பற்றுவதற்குக் காரணமாகவும் அமைந்துவிடலாம். இலங்கையில் வாழும் பெண்களின் புற்றுநோய்களில் இடைப் புற்றுநோய் இரண்டாமிடத்தில் இருக்கிறது. அது மட்டுமல்லாது ‘மாதவிடாய் வறுமையால்’ பாதிக்கப்படும் பெண்கள் உளவியல் ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
மேற்குலக நாடுகளில் பாடசாலைகளில் இலவச அல்லது மலிவான பஞ்சுத்தக்கைகளைப் பெறுவதற்கான இயந்திரங்களை (vending machines) கழிப்பறைகளில் வைத்திருக்கிறர்கள். அதே வேளை பெண்களுக்கு மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வுக் கல்வியையும் போதிக்கிறார்கள்
அனைத்துலக மருத்துவநல அமைப்பின் இந்நன்முயற்சிக்கு உதவ விரும்புபவர்கள் இத்தொடுப்பின் மூலம் அமைப்பின் இணையத்தளத்திற்குச் சென்று தமது பங்களிப்பை வழங்கிக்கொள்ள முடியும்.(Image Credit: Stayfree)
