Sri Lanka

மாகாண சபை முறைமைக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எதிர்ப்பு!


நாட்டின் சகல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு தீர்வே நடைமுறைக்குச் சாத்தியமானது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட பல தமிழ்க் கட்சிகளினாலும் முன்வைக்கப்படும் மாகாணசபை முறைமைக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய முன்னணி எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையை மாகாணசபைகள் தீர்த்துவைக்கப் போவதில்லை எனவும், இலங்கை என்ற நாட்டின் அளவுக்கு மாகாணசபைகள் பொருத்தமற்றவை எனவும் இக் காரணங்களுக்காகத் தாம் அம் முறைமைக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பா.உ. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் விருப்பத்துக்கிணங்கவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அது அமையுமென்று அப்போதைய இந்திய அரசாங்கம் எண்ணியபடியால் தான் மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன எனவும் அதனால் தமிழ் மக்களுக்கு எந்தவித தீர்வையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார். மாகாணசபை முறைமை சில உள்ளார்ந்த பிரச்சினைகளைக் கொண்டிருந்தமை காரணமாக அதன் அதிகாரம் பலவீனப்படுத்தப்பட்டிருந்தது எனவும் சில சந்தர்ப்பங்களில் அவை வெளிக்காட்டப்பட்டிருந்தன எனவும் பொன்னம்பலம் சுட்டிக் கட்டினார். இக் காரணங்களுக்காக மாகாணசபை முறைமைக்கு எதிராகத் தான் பிரசாரம் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



மாகாணசபை முறைமையில் நாட்டின் பெரும்பான்மையினர் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர விரும்பமாட்டார்கள். மகாசங்கங்களின் தலைமையிலான புத்த வாதிகளுக்கு எதிராகத் தென்னிலங்கை ஆட்சியாளர் ஒருபோதும் இயங்கப் போவதில்லை. எனவே மாகாணசபை வெற்றிகரமான நிர்வாக முறைமையாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை. நாட்டின் சகல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு தீர்வே நடைமுறைக்குச் சாத்தியமானது என அவர் தெரிவித்தார்.

உருவாக்க்கப்படவிருக்கும் புதிய அரசியலமைப்புக்கான அரசாங்கத்தினால் கோரப்பட்ட ஆலோசனகளுக்கிணங்க தமிழ்த் தேசிய முன்னணி தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்திருக்கிறது எனவும் அதில் தற்போதுள்ள மாகாணசபை முறைமை தோல்வியுற்ற ஒரு விடயமெனத் தமது கட்சி குறிப்பிட்டுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.