News & AnalysisSri Lanka

மாகாணசபை முறைமையைத் தக்கவைக்க இந்தியாவின் உதவியை நாடுவோம் – த.தே.கூட்டமைப்பு

அரசாங்கம் மாகாணசபை முறைமையை இல்லாதொழிக்க முயற்சித்தால் அதைத் தடுத்து நிறுத்த நாங்கள் இந்தியாவின் உதவியை நாடுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பா.உ. எம்.ஏ. சுமந்திரன் வியாழனன்று, யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

இருப்பினும், மாகாணசபை முறைமையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க ஏதாவது திருத்தங்களை அரசியலமைப்பில் அரசாங்கம் மேற்கொள்ளுமானால் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவும் எமது கட்சி தயாராகவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

வடமராட்சி தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின்போது ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படவேண்டுமா எனப் பாரியதொரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. புத்த பிக்குகள் இதனை எதிர்க்கிறார்கள். அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். எப்படியாயினும், மாகாணசபை முறைமையை மாற்றுவதற்கு எவருக்கும் நாம் அனுமதியளிக்க மாட்டோம். அப்படியாக எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியையும், இந்தியாவின் உதவியுடன் நாம் முறியடிப்போம்.

மாகாணசபை முறைமையில் திருத்தங்கள் செய்யப்படவேண்டுமென்பதை த.தே.கூ. ஏற்றுக்கொள்கிறது. வடக்கும் கிழக்கும் இணைக்கப்படவேண்டுமென்பதோடு முழுமையான அதிகாரங்கள் அவற்றுக்கு வழங்கப்படவேண்டுமென்பதையும் த.தே.கூ. வற்புறுத்துகிறது. ஆனால் மாகாணசபைத் தேர்தல்களைப் பின்போடுவதற்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். தேர்தலை விரைவில் நடத்தவேண்டுமென அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம்” என சுமந்திரன் தெரிவித்தார்.