மாகாணசபைத் தேர்தல்களை நடத்தி 13 ஆவது திருத்தத்தை செயற்படுத்த வேண்டும் – இந்தியா

இலங்கையில் தமிழர்களின் நியாயமான அபிலாட்சைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 49 ஆவது அமர்வின்போது இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் சமத்துவம், நீதி, சமாதானம், சுய மரியாதை ஆகியவற்றுடன் ஒந்றிணைந்த இலங்கைக்குள் வாழ வழிசெய்வது இலங்கைக்கே நன்மை பயக்கும் என ஐ.நா.வின் இந்திய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி இந்திரமணி பாண்டே தெரிவித்துள்ளார்.

“இலங்கை வாழ் தமிழர்களின் பாதுகாப்பு தொடர்பாக அவர்களது தேவைகளைக் கவனிக்கும்படியும், வாக்குறுதிகளை நிறைவேற்றும்படியும் இந்தியா தொடர்ச்சியாக, ஒரு நண்பனாகவும், உடன் அயலகனாகவும் இலங்கையைக் கேட்டு வந்துள்ளது” என ஆணையாளர் மிஷெல் பக்கெலெயின் அறிக்கை தொடர்பாகப் பேசும்போது பாண்டே தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வின் மூலம் இலங்கைத் தமிழர்களின் நீண்டகால அபிலாட்சைகளை நிறைவேற்றுவதில் இலங்கை கவனம் செலுத்த வேண்டுமெனவும், ஆணையாளர் மிஷெல் பக்கெலெயின் அறிக்கையில் சுட்டிக் காட்டிய, இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் ஆகிய விடயங்களில் காணப்படும் முக்கிய கரிசனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும் இப் பேச்சின்போது பாண்டே தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க முயற்சிகள், 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது உட்பட தமிழ் மக்களின் சட்டபூர்வமான அபிலாட்சைகளை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இலங்கையின் சகல இன மக்களுக்கும் அடிப்படை சுதந்திரம், மனித உரிமைகள், பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கவேண்டும் எனவும் மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்தி அதிகாரப் பகிர்வு தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் எனவும் தூதுவர் பாண்டே தெரிவித்துள்ளார்.