NewsSri Lanka

மாகாணசபைத் தேர்தல்களை உடனே நடத்துக – எம்.ஏ.சுமந்திரன்!

தனியார் சட்ட வரைவு ஒன்றைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்

மாகாணசபைத் தேர்தல்களைக் காலந்தாழ்த்தாது, பழைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின்படி நடத்தும்படி யாழ் மாவட்ட கூட்டமைப்பு பா.உ. எம்.ஏ.சுமந்திரன் தனியார் சட்ட வரைவு ஒன்றைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

டெய்லி மிரர் பத்திரிகைக்கு அவர் வழங்கிய செவ்வியின்போது, மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவருவதன் மூலம் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு முயற்சிப்பதாக அவர் கூறினார்.

” தற்போதய மாகாணசபைத் தேர்தல்கள் சட்டம் இல.17 (2017) ஐ பழைய முறைக்குத் திருப்பிக் கொண்டுவருவதே நான் முன்மொழியும் சட்ட வரைவு” என்றார் அவர்.

ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்திருக்கும் இப்போது ஏன் அவசரமாக இச் சட்ட வரைவு என்று கேட்டபோது ‘ஒரு தேர்தல் நடத்தத் திட்டம் போட்டமையால் மற்றொரு தேர்தலைப் பின் போட முடியாது’ என்று பதிலளித்தார் சுமந்திரன்.

முந்தய மாகாணசபைத் தேர்தல் 2017 அரசால் கொண்டுவரப்பட்ட கலப்பு தேர்தல் முறையின் பிரகாரம் நடத்தப்பட்டது. இது, ஒருவருக்கு ஒரு வாக்கு வீதம் அதிக வாக்குகளைப் பெறுபவர் வெற்றி பெறும் முறையும் (First Past the Post System) விகிதாசரப் பிரதிநித்துவ முறையும் (Proportional Representation) கலந்தது. இருப்பினும் தொகுதிகளின் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் குழுவின் அறிக்கை கிடைக்கப்பெறாததால் 8 மாகாணசபைத் தேர்தல்கள் காலவரையின்றி பின்போடப்பட்டிருந்தன.

சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட இத் தனியார் சட்ட வரைவு மாகாணசபைத் தேர்தல்களைப் பழைய முறைப்படியே நடத்தவேண்டுமெனக் கோருகிறது.