மாகாணசபைத் தேர்தல்களைப் பின்போட முடியாது – இவ்விடயத்தில் ராஜாங்க அமைச்சர் தவறிழைத்திருக்கலாம் – தேர்தல் ஆணையத் தலைவர்
மாகாணசபைத் தேர்தல்கள் விடயத்தில் தலையிட அமைச்சரவைக்கு அதிகாரமில்லை. எனவே அவற்றைப் பின்போடுவது பற்றி மாகாண மற்றும் உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சர் றொஷான் ரணசிங்க தெரிவித்த கருத்தில் தவறிருக்கலாமென தேர்தல் ஆணையத் தலைவரும் சட்டத்தரணியுமான நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
மாகாணசபை, உள்ளூராட்சி மற்றும் பிரதேச சபைத் தேர்தல்கள் அனைத்தையும் பின்போடுவதற்காகத் தான் அமைச்சரவைக்கு விண்ணப்பித்திருப்பதகாவும் அத் தீர்மானம் கிடைத்தவுடன் தேர்தல் ஆணையத்துக்கு அறிவிக்கவுள்ளதாகவும் சில நாட்களின் முன் ராஜாங்க அமைச்சர் உள்ளுராட்சி உறுப்பினர்களுக்குத் தெரிவித்திருந்தமை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில் தேர்தல் ஆணையத் தலைவர் மேற்படி தெர்வித்துள்ளார்.
“எச் சந்தர்ப்பத்திலும், மாகாணசபைத் தேர்தல்களைப் பின்போடக் கோரும் அதிகாரம் அமைச்சரவைக்குக் கிடையாது. உள்ளூராட்சி (மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை) மீதான அதிகாரம் மட்டுமே அமைச்சரவைக்கு உண்டு” என நேற்று (16) ஆணையத் தலைவர் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
கடந்த உள்ளூராட்சித் தேர்தல்கள் பெப். 10, 2018 இல் நடத்தப்பட்டு மார்ச் 20, 2018 இல் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. எனவே மார்ச் 20 2022 இற்கு முதல் அத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அதே வேளை உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பாக தேர்தல் சீர்திருத்தங்களை ஆராய பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று பணியாற்றிக்கொண்டிருந்தது. இத் தேர்தல்களை நடத்துவதற்கான தயாரிப்பு வேலைகளுக்கு குறைந்தது நான்கு மாதங்களாவது தேர்தல் ஆணையத்துக்குத் தேவை. இந் நிலையில் அவை பின்போடப்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு எனவும் ஆனால் இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்குக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் தேர்தல் ஆணையாளர் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தற்போதைய அதிகாரங்களின்படி மார்ச் 2022 இல் தேர்தல்கள் நடைபெறுவதானால் ஜனவரி 2022 இல் அதற்கான அறிவித்தல் விடப்படவேண்டும்.
அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா தலைமையில் இயங்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் நிமால் சிறிபால டி சில்வா, ஜி.எல்.பீரீஸ், பவித்திராதேவி வன்னியாராய்ச்சி, டக்ளஸ் தேவாநந்தா, விமல் வீரவன்ச, பசில் ராஜபக்ச, அலி சப்றி, ஜீவன் தொண்டமான், ராவுஃப் ஹக்கீம், அனுர குமார திசநாயக்கா, காபிர் ஹாஷிம், ரஞ்சித் மட்டும பண்டார, மனோ கணேசன், எம்.ஏ.சுமந்திரன், மதுரா விதானகே, சாகர காரியவாசம் ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள். பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டிருந்தாலும் தேர்தல் சீர்திருத்த முயற்சிகளை இப் பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்ந்தும் மேற்கொள்ளுமென அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான அதிகாரங்கள் இந்தோ – சிறீலங்கா ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்ட ஒன்று. கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் (மாகாணசபைத் தேர்தல் சட்டத் திருத்தம் இல. 17, 2017) இத் தேர்தல்கள் பின்போடப்பட்டன. இதனால் அவற்றை நடத்துவதற்கான சட்டபூர்வமான அதிகாரம் இப்போது இல்லை. ஆனால் உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான அதிகாரங்களை முன்வைக்கும் சட்டம் இப்போதும் நடைமுறையில் இருக்கிறது. எனவே ராஜாங்க அமைச்சரின் அறிக்கையில் தவறிருக்கிறது என நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தற்போதய தேர்தல் ஆணையர்களாக நிமால் புஞ்சிஹேவா, எஸ்.பி.திவரட்ண, எம்.எம்.மொஹாமெட், கே.பி.பி.பத்திரான மற்றும் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் கடமையாற்றுகிறார்கள். (தி ஐலண்ட்)