News & AnalysisSri Lanka

மாகாணங்களுக்கிடையேயான நடமாட்டத் தடை – திங்கள் (11) இரவு முதல் நடைமுறைக்கு வருகிறது

அதிகரித்துவரும் கோவிட் நோய்த்தொற்றின் பரவலைத் தடுக்க, மாகாணங்களிடையே மக்கள் நடமாடுவதைத் தடுப்பதற்கான அறிவித்தலொன்றை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.

திங்கள் (11) இரவு அமுலுக்கு வரும் இந்நடவடிக்கையை கோவிட் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவரான இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்திருக்கிறார். இக் கட்டுப்பாடுகள் மே மாதம் 30ம் திகதிவரை நடைமுறையிலிருக்கும்.

தற்போதைக்கு, அத்தியாவசிய சேவைகள் எனப் பட்டியலிடப்பட்டுள்ள சேவைகள் இத் தடை அறிவிப்பினால் பாதிக்கப்படமாட்டாது எனவும் விரைவில், அறிவிக்கப்பட்ட இந் நடமாட்டத்தடை பற்றிய பூரண விபரங்கள் வெளியிடப்படும் என ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட முடியாவிட்டால், மாவட்டங்களுக்கிடையேயான நடமாட்ட முடக்கத்தையும் அரசு அறிவிக்கலாம் என சில்வா மேலும் தெரிவித்தார்.

மகாணங்களுக்கிடையாயன மக்கள் நடமாட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தும்படி சம்பந்தப்பட்ட திணைக்களங்களையும், அதிகாரிகளையும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இதே வேளை, பொது மக்கள் ஒன்றுகூடல்கள், நிகழ்வுகளை உடனடியாக ஒத்திவைக்கும்படியும், வர்த்தக நிலையங்களுக்குச் செல்பவர்கள் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளும்படியும், நோய்த் தொற்றுள்ளதென அறியப்பட்ட பிரதேசங்களுக்கு மக்கள் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளும்படியும் ஜனாதிபதி ராஜபக்ச பணித்திருக்கின்றார்.