Sri Lanka

மஹிந்த ராஜபக்ச குடும்பம் திருகோணமலை கடற்படைத் தளத்தில் அடைக்கலம்? – வெளியே மக்கள் ஆர்ப்பாட்டம்

நாமல் ராஜபக்ச குடும்பம் வெளியேறுகிறது

மஹிந்த ராஜபக்ச தனது கும்பத்தாருடன் திருகோணமலை கடற்படைத் தளத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர் என்ற சந்தேகத்தில் தளவாயிலுக்கு வெளியே பொதுமக்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுவருவதாக ‘நியூஸ்வயர்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அலரி மாளிஅகியில் நேற்று நடைபெற்ற சம்பவங்களைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் ராஜபக்ச தனது பதவியைத் துறந்துவிட்டு தனது உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையிலிருந்து குடும்பத்துடன் வெளியேறியிருந்தார். அதே வேளை அவரது பிரத்தியேக இல்லமும் கலகக்காரர்களது தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. இந்த நிலையில் அவர் பாதுகாப்பு கருதி தற்போது திருகோணமலை கடற்படைத் தளத்தில் இன்று காலை தஞ்சம் கொண்டுள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து மக்கள் இத் தளத்திற்கு முன்னால் குழுமியிருப்பதாக அறியப்படுகிறது.

நேற்று நடைபெற்ற கலவரத்தின்போது பொதுமக்கள் அலரிமாளிகையைத் தாக்கி உள்ளே புக முயற்சித்ததாகவும் அவ்வேளை பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்துவிட்டு, இன்று காலை விசேட பொலிஸ் நடவடிக்கைகளின் துணையோடு மஹிந்த குடும்பத்தினரைப் பாதுகாப்பாக வெளியே கொண்டுவந்திருந்ததாகவும் கூறப்பட்டது. இக்கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தின்போது கண்ணீர்ப்புகைக்குண்டு ஒன்று வெடித்ததில் 24 வயதுடைய சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் காயமுற்றுப் பின்னர் மருத்துவமனையில் காலமாகியிருந்தார்.

அதே வேளை, நாமல் ராஜபக்சவின் குடும்பத்தை உலங்கு வானூர்தி மூலம் பாதுகாப்பாக வெளியேற்றும் நடவ்டிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.