Columns

மஹிந்த ராஜபக்ச: இலங்கையின் துரும்பர்?

சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாடு நேற்று கொழும்பில் நடந்து முடிந்திருக்கிறது. சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற கட்சியின் இரண்டாவது மாநாடு ராஜபக்ச குடும்பம் அதே வலுவுடன் தான் இருக்கிறது. என்னதான் இருந்தாலும் இலங்கையில் பகுத்தறிவுக்கு இன்னும் பஞ்சம் தான்.

கொழும்பில் கார்ப்பெட் ரோட்டைக் கிண்டி கட்சியின் கொடிக்கம்பம் நாட்டுவதற்கு நாட்டின் அரசாங்கம் அனுமதித்திருக்கிறதென்றால் ராஜபக்ச நாட்டாண்மை எங்கேயும் போய்விடவில்லை என்றுதான் தோன்றுகிறது. வகுப்புகளில் விஞ்ஞானத்தை ஒதுக்கிவிட்டு மகாவம்சத்தைக் கற்பித்ததன் விளைவு இன்னும் பலநூறு ஆண்டுகளுக்கு இருக்கப்போகிறது. மோட்டார் பூட்டிய ராஜபக்சக்களின் நாக்குகள் வார்த்தைகளைக் கடித்துத் துப்பியதை மாநாட்டு கைதட்டாளர் வெகுவாக ரசித்தார்கள். நாங்கள் தான் பாவம் செய்தவர்கள்.

78 வயதுள்ள மகிந்தர் மீண்டும் தலைவராக ஏகமனதாக இருத்தபட்டுவிட்டார். அதில் ஆச்சரியமில்லை. அமெரிக்க வெள்ளை மாளிகையைக் கொள்ளையடித்த ‘ஜனவரி 6’ கொள்ளைக்கூட்டத்தை மன்னிக்கப்போவதாக வெருட்டிக்கொண்டிருக்கும் துரும்பரைப் போலவே மே 09, 2022 அன்று அரகாலயாவால் தாக்கப்பட்ட ‘கொள்ளைக்காரருக்கும்’ பரிகாரம் செய்வேன் என மகிந்தர் உறுதியளித்துள்ளார். அமெரிக்காவின் றோபோ ஜனாதிபதி போல் விழுந்தெழும்பாது, வெதமாத்தயாவின் வைத்தியத்தினால் மகிந்த நிமிந்தபடியே தான் நிற்கிறார். சும்மா சொல்லக்கூடாது கட்டை உறுதியாகத்தான் இருக்கிறது.

“நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ‘தூய்மையான அரசியலைச்’ செய்யக்கூடியவர்கள் என்னோடு இணைந்துகொள்ளுங்கள்” என்று கொள்ளைக்காரர் முன் அறைகூவல் விடுக்கிறார். மேடையில் அவர் பின்னால் அதூய அரசியல்வாதிகள் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள். அமைச்சர் தேவானந்தர், ஜீவன் தொண்டமான் முதல் தற்போதைய அரசாங்கத்தின் மந்திரி பிரதானிகள் அனைவரும் பக்தி பரவசப்பட்டுக்கொள்கிறார்கள்.

“நாங்கள் சிங்கங்கள். புலிகளிடமிருந்தும், கோவிட்டிலிருந்தும் எமது தாய்நாட்டைக் காப்பற்றியவர்கள். எல்லோரையும் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்” என்று கர்ச்சிக்கிறார் சகோதர சிங்கம் பசிலர். எல்லாம் காலம்.

ராஜபக்ச குடும்பம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. துர்ப்பாக்கியமாக அவர்கள் கைகளில் ‘முள்ளிவாய்க்கால்’ கேடயம் இருக்கிறது. அதில் மயங்கும் மந்தைகளும் இருக்கின்றன. நம்ம பக்கத்தில் இருக்கும் ‘முள்ளிவாய்க்கால்’ இரத்தம் அதற்கு இணையாகாது. எனவே ராஜபக்ச பரம்பரை வாழும்வரை அவர்கள் தான் ஆட்சி.

பாவம் எதிர்க்கட்சிகள். ஜே.வி.பி. கடற்கரையில் வைத்த உல்லாச ஊர்வலத்திற்குத் திரண்டவர்கள் வாக்களிப்பு நிலையங்களில் திரளவில்லை. ‘டிசைனர்’ ஆடைகள் அணியும் தலைவரைப் போலவே அவர்களும் போலி இடதுசாரிகள். பிரேமதாசவில் தகப்பனின் இரத்தம் கொஞ்சம்கூட ஓடவில்லை. ரணில், ராஜபக்சக்களின் caretaker மட்டுமே.

அமெரிக்காவின் ஜூலி ச்சங்க் நினைத்தால் இன்னுமொரு ‘அரகாலயாவை’ உருவாக்கலாம். வயிறுகள் பசிக்கும்போதுதான் சிங்கள மக்களின் மூளைகள் வேலைசெய்யும். அதற்கான மருந்து அமெரிக்காவிடம் மட்டுமே இருக்கிறது. இந்தியா பாவம். நபும்சகம் அதற்கு இயற்கையாக வரும். அல்லாதுபோனால் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைச் சீனரிடம் கோட்டை விட்டிருக்காது.

ராஜபக்சக்கள் சொல்வதுபோல இலங்கையில் இப்போது இருக்கும் பலமான அரசியல் கட்சி பொதுஜன பெரமுன மட்டும்தான். இலங்கையின் மக்களுக்கேற்ற கட்சி அது. உள்ளூராட்சித் தேர்தல்களுக்காக அக்கட்சி தயாராகிறது. நாடு பொருளாதார ரீதியாக சீராக்கப்படும்வரை ரணில் தான் காபந்து அரசர். அவருக்கும் இது இறுதித் தவணை என்பதனால் நாட்டை வங்குறோத்து நிலையிலிருந்து மீட்டு ராஜபக்ச குடும்பத்திடம் திறப்பைக் கொடுத்துவிட்டு அதற்கான சன்மானத்தை வாங்கிக்கொண்டு மாளிகையில் ஒதுங்கிவிடுவதே அவரது திட்டம். எப்படியோ சாதியில் குறைந்த சஜித் பிரேமதாசவின் கைகளில் திறப்பு போகக்கூடாது என்ற அவரது நோக்கம் நிறைவேறும்.

அப்போ ‘இமாலயப் பிரகடனத்துக்கு’ என்ன நடக்கும் எனக் கேட்கிறீர்கள். ராஜபக்சக்களின் மீள்வருகையை முறியடிக்க மேற்கு போடும் திட்டத்தின் முதற்படியாக இது இருக்கலாமோ என்ற சந்தேகமே எனக்கு எழுகிறது. ‘இமாலயப் பிரகடனம்’ பற்றி இந்தியா சாதிக்கும் அசுர மெளனம் சந்தேகிக்க வைக்கிறது. இந்தியா என்னதான் சமைத்துக் கொட்டியிருந்தாலும் இலங்கைக்கு அது வேண்டாத பெண்டாட்டிதான். இந்த வேளையில் கையைக் காலைப் போட அது விரும்பாது.

‘உள்ளூராட்சித் தேர்தல்களை உடனே நடத்து’ என்ற குரல்கள் இனிமேல் ஆரம்பிக்கும். பெற்றோல் நிலைய வரிசைகளில் நின்ற அதே மக்கள் இனிமேல் ‘மொட்டுக் கொடிகளுடன்’ வீதிக்கு வரப்போகிறார்கள். எதிர்க்கட்சிகளும் அதையேதான் விரும்புகின்றன. தேர்தல்கள் ஒரு பரீட்சைக்களமென அவர்கள் நினைத்தாலும் நாக்குகளையும் வாக்குகளையும் புரட்டும் வல்லமை அவர்களிடம் இல்லை. உள்ளூராட்சித் தேர்தல்களில் ராஜபக்சக்கள் பெறப்போகும் பெரு வெற்றி ரணிலுக்கு அடுத்ததாக ராஜபக்ச ஒருவரைக் கொண்டுவரும். அதுவரை ரணில் அவர்களுக்குத் தேவையானவர்.

போர் முடிந்த கையோடு ராஜபக்சக்களின் கைகளில் தமிழரின் இரத்தம் உலர்வதற்கு முன்னரே மாதுலுவாவே சோபித தேரர் மூலம் 2015 இல் நல்லாட்சியைக் கொண்டுவந்தது இந்தியா உட்பட்ட வெளிநாடுகளின் கூட்டணி. அரகாலயா அவர்களின் இரண்டாவது முயற்சி. அதுவும் வெற்றிகண்டது. ‘இமாலயப் பிரகடனம்’ அவர்களது மூன்றாவது முயற்சி. அதற்கு எதிராக எவ்வளவுக்கு எவ்வளவு தமிழர்கள் கொடிகளைப் பிடிக்கிறார்களோ அந்தளவுக்கு அது வெற்றிபெறக்கூடிய சாத்தியம் இருக்கிறது. உரல் ஒன்றுதான் உலக்கைகள் பல. குத்தட்டும்.

ராஜபக்சக்களுக்கு எதிரான ஒரு உள்ளார்ந்த சிங்கள மக்களின் கிளர்ச்சி ஒன்று மட்டுமே தமிழருக்கு நிவாரணத்தைத் தரும். தீர்வைத் தருமென்று நான் சொல்லவில்லை. ‘போர் வீரன்’ கோதாபயவை ஊரைவிட்டுக் கோவணத்துடன் துரத்திய மக்களுக்கு இது புதிதல்ல. ஆனால் அதைச் செய்யும் பலமோ வளமோ , தற்போதைக்குத், தமிழரிடம் இல்லை. கூழங்கைச் சக்கரவர்த்தியிலிருந்து சங்கியன்வரை யாழ்ப்பாண நாட்டிலிருந்து சிங்களவரைத் துரத்த அயலகப் படைகளையே நம்பியிருந்தனர். புலம் பெயர்ந்தோர் படையால் அதைச்சாதிக்கலாமோ?

என்னவோ உலகம் போதைக்கு அடிமையாகியிருக்கிறது போலும். அமெரிக்காவில் பைடனின் முட்டாள்தனம் தூக்கிவீசப்பட்ட துரும்பரை மீண்டும் சிமாசனத்தில் இருத்தப்போகிறது. இலங்கையிலும் எதிர்க்கட்சிகளின் கையாலாகாத்தனம் ராஜபக்சக்களை மீண்டும் அரசகட்டில் ஏற்றப்போகிறது.

முயற்சி தெருவினையாக்கினால் மக்கள் மீண்டும் வீதிக்கு வருவார்கள். அதை இன்னுமொரு அரகாலயவாக மாற்றுவதற்கு நாம் துணைநிற்கவேண்டும்.