Sri Lanka

மஹிந்த ராஜபக்சவின் மின்சாரக் கட்டண நிலுவை ரூ. 722,216. 77

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் விபரங்கள் பெறப்பட்டன

றிஷார்ட் பதியுதீனின் ரூ. 970,128.82; பாதுகாப்பு படைகள், நிறுவனங்கள் ரூ.600 மில்லியன் – நிலுவைகள்!

தகவல் அறியும் உரிமை (RTI) விண்ணப்பத்தின் மூலம் இலங்கை மின்சாரசபையின் கட்டண நிலுவையுள்ளோர் பற்றிச் சேகரித்த தகவல்களின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி / பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பல அமைச்சர்கள், முப்படையினர், பொலிஸ், முக்கிய அரசியல்வாதிகளுக்கு வேண்டப்பட்டவர்கள், பெருவணிக நிறுவனங்கள் எனப் பலதரப் பட்டவர்களும் பெருந்தொகையான கட்டண நிலுவைகளைக் கொண்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. ஜனவரி 03 அன்று பெறப்பட்ட இத் தகவல்களில் ரூ. 500,000 க்கும் மேலாக நிலுவையை வைத்திருப்பவர்கள் பற்றிய விபரங்கள் கோரப்பட்டிருந்தன.

அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடியில் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாமலிருக்கும்போது சாதாரண குடிமக்களது கட்டணங்கள் உயர்த்தப்பட்டது மட்டுமல்லாது கட்டணத்தைத் தாமதமாகச் செலுத்துபவர்களுக்கு ‘சிவப்பு அறிக்கை’ அனுப்பப்படுவதும், சிறிய தொகைகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவதும் பன்மடங்கு உயர்ந்துள்ள வேளையில் நாட்டின் அரசியல் தலைவர்கள், பொறுப்புள்ளவர்கள், தனவந்தர்கள் பெருந்தொகையான நிலுவைகளை வைத்திருப்பது தெரியவந்தமை மக்களுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நவம்பர் 2022 வரை ரூ.722,216,77 நிலுவையை வைத்திருக்கிறார் எனத் தெரியவந்துள்ளது. இத் தகவல்களைப் பெறுவதற்காக வண. ஒமால்பே காசப்ப தேரர் தலைமையில் இயங்கும் ‘துன்ஹெல’ தேசிய அமைப்பு பலமாதங்களாக முயற்சித்தபோதும் “அது தனிப்பட்டவர்களின் பிரத்தியேக தகவல்கள்” எனக்கூறி இலங்கை மின்சாரசபை அவற்றைக் கொடுக்க மறுத்து வந்தது. இறுதியில் தகவல் அறியும் உரிமைக்கான ஆணையத்தின் தலையீட்டினால் அதன் முன்னிலையில் விபரங்கள் கையளிக்கப்பட்டன.

தகவல்கள் வழங்கப்படுவதை மேலும் இழுத்தடிக்க இலங்கை மின்சாரசபை முயற்சி செய்தபோதும் ஜனவரி 03, 2023 அன்று தகவல் அறியும் உரிமை ஆணையர்களான கிஷாலி பின்ரோ-ஜயவர்த்தன, ஜகத் லியானா ஆராச்சி, ஏ.எம். நாஹியா ஆகியோர் ஜனவரி 25, 2023 இற்கு முன்னர் இவ்விபரங்கள் கையளிக்கப்படவேண்டுமென கட்டளையிட்டிருந்ததுடன் தகவல் அறியும் உரிமைக்கான சட்டத்தை மீறியமைக்காக இலங்கை மின்சாரசபைக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.

பெரும்தொகையான நிலுவைகளுள்ள இதர அரசியல்வாதிகள்:

றிஷார்ட் பதியுதீன் (ரூ.970,128.82)

கே.டி.எம்.சீ பண்டார (ரூ. 856,561.01)

ஆர்.எம்.சீ.பி. ரத்நாயக்க (ரூ. 731,405.13)

பீ.ஹரிசன் (ரூ.577,415.12)

ஜனாதிபதியின் செயலாளர் (ரூ.527,755.94)

பிரதமரின் செயலாளர் (ரூ.1,114,127.28)

முப்படைகள், பொலிஸ் மற்றும் நட்பு நிறுவனங்கள் (ரூ. 600 மில்லியன் ரூபாய்கள்)

குளியாப்பிட்டியை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு ‘இன்ஸ்பெக்டர்’ (ரூ.2.4 மில்லியன்)

இதே வேளை பெருந்தொகையான இலாபத்தைச் சம்பாதிக்கும் வணிக நிறுவனங்களான ‘Iconic Development’, Dialog, Nawaloka ஆகியவையும் பெருந்தொகையான கட்டண நிலுவைகளைக் கொண்டிருக்கின்றன எனத் தெரிவந்துள்ளது.

அரசியல்வாதிகளும் அவர்களுக்குத் தேவையானவர்களும் வைத்திருக்கும் நிலுவை மொத்தம் ரூ.60 மில்லியன் எனவும், பாதுகாப்பு படைகள், அரச அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றின் மொத்த நிலுவை ரூ. 600 மில்லியன்களுக்கு மேல் எனவும் தகவல் அறியும் உரிமையின் கீழ் விபரங்களைப் பெற்ற இன்னுமொரு அமைப்பான LECO தெரிவ்த்துள்ளது.

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவரும் வேளையில் தனக்கு வேண்டியவர்களிடமிருந்து நிலுவைகளை அறவிட மறுத்தமைக்காக இலங்கை மின்சாரசபை மீது வழக்குத் தொடர ‘துன்ஹெல’ அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. (Colombo Telegraph)