Sri Lanka

மஹிந்த குடும்பம் மாலைதீவுக்குத் தப்பியோடத் திட்டம்?

$12 மில்லியன் செலவில் 24,000 சதுர அடி வீடு வாங்கப்பட்டுள்ளது. உதவியாளருக்காகத் தனியாக $3 மில்லியன் வீடு!

மஹிந்த ராஜபக்சவையும் அவரது குடும்பத்தினரையும் இலங்கையிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றி மாலைதீவில் குடியேற்றுவதற்கு அந் நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் மொஹாமெட் நஷீத் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக ‘மாலைதீவு ஜேர்ணல்’ என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சென்ற வாரம் இலங்கை வந்திருந்த மொஹாமெட் நஷீத் இலங்கைக்கான உலக நிவாரணங்களைப் பெறுவதற்கான தூதுவராகப் பணியாற்றுவதற்கு முன்வந்தமையைத் தொடர்ந்து பிரதமர் விக்கிரமசிங்க அவரை அப்பதவிக்கு நியமித்திருந்தார். இந்த வாரம் மீண்டு இலங்கை வந்த நஷீத் ராஜபக்ச குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களுக்கு அபயமளிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

US$ 12 மில்லியன் பங்களா

மஹிந்த பதவி விலகியதும் மாலைதீவு ஜனாதிபதி நஷீத்தை அழைத்து, இலங்கையில் நிலைமை சீரடையும் வரை தனது குடும்பத்தினருக்குப் பாதுகாப்புத் தரும்படி கேட்டுக்கொண்டதற்கிணங்க நஷீத் இலங்கை வந்து உயரதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக மாலைதீவு ஜேர்ணல் தெரிவித்துள்ளது.

மஹிந்தவுக்கு மிக நெருக்கமான மாலைதீவு சுற்றுலா வியாபாரி சம்பா முஹாமெட் மூசா என்பவரின் விடுமுறை இல்லமொன்றில் மஹிந்தவின் குடும்பம் தங்குவதற்கு முதலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாயினும் மூசாவை நம்ப முடியாது எனக்கூறி நஷீத் அதற்கு உடன்படவில்லை எனவும் அதற்கு மாற்றீடாக சொனேவா ஃபுயூஷி என்னுமிடத்தில் இருக்கும் பங்களா ஒன்றைச் சொந்தமாக வாங்கும்படி நஷீத் ஆலோசனை கூறியதாகவும் தெரிகிறது. இந்த பங்களா நஷீத்துக்கு நெருக்கமான இந்தியரான சோனு சிவ்தசானிக்குச் சொந்தமானது. இந்திய ஆளும் கட்சியான பா.ஜ.க. வுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கும் சிவ்தசானி மாலைதீவின் முந்தைய ஜனாதிபதி அப்துல்லா யமீமின் கட்சிக்கு பண உதவி செய்தவர் என மா.ஜேர்ணல் மேலும் தெரிவிக்கிறது.

சிவ்தசானிக்குச் சொந்தமான, ஆறு படுக்கையறைகளைக் கொண்ட, 24,000 ச.அடி. பங்களாவை US$ 12 மில்லியனுக்கு மஹிந்த ராஜபக்ச வாங்குவதற்கு இணங்கியுள்ளதாகவும், இத்துடன் US$ 3 மில்லியன் பெறுமதியான இன்னுமொரு பங்களாவை மஹிந்த குடும்பத்தின் வேலைக்கார மற்றும் பாதுகாப்பாளர்களுக்காக வாங்குவதற்கு உத்தேசித்துள்ளதாகவும் தெரிகிறது. மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தில் தற்போது ஆறு குழந்தைகள் உட்படப் 18 பேர் இருக்கிறார்கள். இந்த பங்களாவில் நீச்சல் தடாகம் உட்பட , ஜிம், சோனா மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன.


மாலைதீவில் மஹிந்த ராஜபக்ச வாங்கியுள்ள வீடுகள்

நஷீத்தின் கபட நோக்கம்?

மஹிந்தவின் அழைப்பின் பேரில் சென்ற வாரம் இலங்கை வந்த நஷீத் பிரதமர் ரணிலைச் சந்தித்து சர்வதேச நிவாரண உதவிகளைப் பெற்றுத்தருவதற்குத் தான் உதவிசெய்வதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து ரணிலும் அவரை அதற்குப் பொறுப்பாக நியமிப்பதாக அறிவித்திருந்தார். அதே வேளை நஷீத் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ச மற்றும் ராஜபக்ச நண்பர்களையும் சந்தித்திருந்தார். அவரது ஆரம்ப முயற்சிகள் சர்வதேச நிவாரணங்களைப் பெற்றுத் தருவதாக இருந்தாலும் அதில் அவர் அதிக கவனத்தைச் செலுதாது, ராஜபக்சக்களைக் காப்பாற்றும் முயற்சியின்பொருட்டு பல முக்கிய புள்ளிகளைச் சந்திப்பதில் கவனம் செலுத்திவருகிறார் எனக் கூறப்படுகிறது. சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பைத் தொடர்ந்து நஷீத் வெளியிட்ட ருவீட் குறுஞ்செய்தியில் சஜித் பிரேமதாசவைப் பற்றி அதீதமாகப் புளுகி இருந்தார். பழிவாங்குதலை விட்டுவிட்டு நாட்டில் சமாதானம் நிலவ வேண்டுமென்பதற்காக சகல தரப்பினரும் புரிந்துணர்வுடன் செயற்படவேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துமிருக்கிறார்.

இதே வேளை சர்வதேச நிவாரண உதவி பெற்றுத் தருவதாக நஷீத் அளித்த உறுதி குறித்தும் பல கேள்விகள் எழுந்துள்ளன. அவர் இப்படியான முயற்சிகள் எதிலும் இதுவரை ஈடுபட்டு வெற்றி பெற்றதற்கான ஆதாரம் எதுவுமில்லை. அவரது ஆட்சிக் காலத்தின்போது பல மில்லியன் முதலீடுகளைக் கொண்டுவருவதாக அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவுல்லை. அவரது ஆட்சிக் காலத்தில் அரச உடமைகள் பல வெளிநாடுகளுக்கு மிக மலிவான விலையில் விற்கப்பட்டதும் உண்டு. 2008 இல் ஆட்சிக்கு வந்தபோது அவர் வாக்குறுதியளித்த $300 மில்லியன் இன்னும் வந்த பாடில்லை. 2012 இல் அவர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். தற்போது அவரது கட்சியே ஆட்சியில் இருந்தாலும் அரசு இன்னும் வெளிநாட்டுக் கடன்களிலேயே தங்கி வருகிறது. இந்த நிலையில் அவர் இலங்கைக்கு நிவாரணம் பெற்றுத் தருவதாக வாக்களித்திருப்பது மிகவும் சந்தேகத்துக்குரியது எனக் கருதப்படுகிறது.

ராஜபக்சக்களுடனான நஷீத்தின் உறவு நீண்ட காலமானது. அவரைப் பதவியில் இருத்துவதற்கு ராஜபக்சவின் உதவியே முக்கியமாக இருந்ததெனக் கருதப்படுகிறது. 2004 இல் மஹிந்த பிரதமராக வந்ததிலிருந்து அவரது உதவி நஷீத்துக்கு கிடைத்து வருகிறது. 2008 இல் நஷீத்தைப் பதவியில் இருத்தியமைக்கு ராஜபக்சக்களே காரணம் என்ற வதந்திகளும் உண்டு. இதற்கு அவாண்ட் கார்ட் சேனாதிபதியின் உதவி முக்கியமானது என அப்போது கூறப்பட்டது. பல முன்னாள் மாலைதீவு அரசியல்வாதிகள் இலங்கையில் வீடுகளும், வியாபாரங்களும் வைத்திருக்கிறார்கள். அவர்களுடன் ராஜபக்சக்களுக்கு நெருங்கிய உறவு உண்டு.

ராஜபக்ச குடும்பத்தினரைப் போலவே மாலைதீவிலும் ஆளும் கட்சியில் நஷீத்தின் குடும்பம் பெரும்பான்மையாக உள்ளது. ஊழல், அரச சொத்துக்களை விற்பனை செய்தல், நெருங்கியவர்களைப் பதவிகளில் அமர்த்துதல் போன்றவற்றில் இரண்டு குடும்பங்களும் ஒன்றுக்கொன்று நிகரானவை.

மஹிந்தவின் பயணச் சீட்டு பறிமுதல்

இதே வேளை நீதி மன்ற உத்தரவின் பேரில் மஹிந்தவின் பயணச் சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் நஷீத்தின் இம் முயற்சிகளின் பின்னால் கபட நோக்கம் இருக்கலாமெனவும் தென்னிலங்கை ஊடகங்கள் சந்தேகம் தெரிவிக்கின்றன. தனது குடும்பத்தைப் பாதுகாப்பாக வெளியேற்றினால் நஷீத்தின் அரசியல் நடவடிக்கைகளுக்குத் தான் பண உதவி செய்வதாக மஹிந்த உறுதியளித்துள்ளாரென இவ்வூடகங்கள் சந்தேகம் தெரிவித்துள்ளன. நஷீத்துக்கு இப் பதவியை வழங்கியதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவும் இவ் விடயத்தில் ராஜபக்சக்களுக்கு உதவியாகச் செயற்பட்டு வருகிறாரா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. (மாலைதீவு ஜேர்ணல், டெய்லி மிரர்)