IndiaLIFE

மஹாராஷ்டிரா மாநிலத்தில் சாதிப் பெயர்களில் உள்ள குடியிருப்புக்களின் பெயர்கள் மாற்றப்படும்

இந்தியாவின் மஹாராஷ்டிர மாநிலத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும்  மக்களின் சாதிப் பெயரை அடையாளமாகக் கொண்டிருக்கின்ற குடியிருப்புக்களின் பெயர்களை மாற்றுவதறகு மாநில அரசு முடிவெடுத்திருக்கிறது. மக்கள் மத்தியில் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வரும்பொருட்டு இத் தீர்மானத்தைத் தாம் எடுத்திருப்பதாக அது கூறுகிறது. 

ஒருவருடைய பெயரின் பின்னாலோ, முன்னாலோ அவரின் சாதியைக் குறிக்கும் அடையாளப் பெயர் இடப்படுவதுபோல் வாழும் இடங்களும் அங்குள்ள சாதியினரின் பெயர்களைக் கொண்டிருக்கின்றன.

சாதிகளின் பெயரால் மக்களைப் பிரித்துவைக்கும் நடைமுறை இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் பிரகாரம், சாதியில் குறைந்தவர்கள் எனக் கருதப்படுபவர்கள் ஊர்கள், கிராமங்களின் எல்லைகளில் வாழத் தள்ளப்படுவதுடன் அவர்களை அடையளப்படுத்துவதற்காக அவர்கள் சார்ந்த் சாதிப் பெயர்களை அவர்கள் வாழும் சேரிகளுக்கும், குடியிருப்புக்களுக்கும் சூட்டுவது வழக்கம். 

சாதியை ஒழிக்கப் போவதாகக் கூறிக்கொள்ளும் ஒரு தேசத்தில் கிராமங்களும், நகரங்களும் சாதிகளின் பெயரில் அழைக்கப்படுவது விரும்பத்தக்கதல்ல என்பதால் மஹாராஷ்டிர மாநில அரசு அதை மாற்றத் தீர்மானித்துள்ளது.

“மாநிலத்தில் சமூக ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் பேணுவது மூலம் நாட்டில் சகல மக்களும் ஒற்றுமையாக வாழ முடியும். அதற்காக, இம் மாநிலத்தில் சாதிப் பெயரிலுள்ள கிராமங்கள், நகரங்கள், குடியிருப்புகளின் பெயர்கள் மாற்றப்படும்” என மாநிலத்தின் சமூக நீதி அமைச்சர் தனஞ்சேய் மண்டே தெரிவித்தார்.

 

 

மஹாராஷ்டிரா மாநிலத்தில் 125 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இம் மாநிலத்திலுள்ள சாதிப் பெயர்களிலுள்ள இடங்கள் இனிமேல் பிரபல சமூக சேவையாளர்கள், உள்ளூர் செயற்பாட்டாளர் ஆகியவர்களின் பெயர்களுக்கு மாற்றப்படுமென மாநில அரசு அறிவித்துள்ளது.

ஒருவரது சாதி என்ன என்று கேட்பது நாகரிகமல்ல என்னுமளவுக்கு இந்தியாவில் நாகரிகம் வளர்ந்துள்ளது என்றாலும், அவரது வாழிடத்தைக் கேட்பதன் மூலம் சாதிய அறிந்து கொள்வது வழக்கமாகிவிட்டது. பல தலித்துகள் தங்கள் சாதிப் பெயர்களை விட்டுவிட்டு முதற் பெயரால் அல்லது தனிப் பெயரால் தம்மை அடையாளப்படுத்துகிறார்கள். 

இருப்பினும் நிறுவனமயப்படுத்தப்பட்ட சாதி அனுசரிப்பு இந்தியாவின் பல சமூக மட்டங்களிலும் இன்னும் இருந்துவருகிறது. உயர் சாதியச் சேர்ந்தவர்களால் தலித்துகள் தாக்கப்படுவதும், தலித் பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்படுவதும் இந்தியாவில் மிகவும் வழமையான சம்பவங்களாகிவிட்டன. 2015 இல் நரேந்திரா ஜாதவ் என்பவர் குடும்பப் பெயர்களை முறாக நீக்கிவிட்டு ஒருவர் தனிப் பெயரால் மட்டுமே அழைக்கப்படவேண்டுமென தனியார் மசோதா ஒன்றைப் பாராளுமன்றத்தில் கொண்டுவந்தார். அது தோற்கடிக்கப்பட்டுவிட்டதைத் தொடர்ந்து அதை அவர் கைவிட்டு விட்டார். 

 

சென்ற மாதம் குஜராத் மாநிலத்தில் தலித் இளைஞர் ஒருவர் சேட்டுப் பொத்தானைத் திறந்துவிட்டதற்காக அவரது சக பணியாளர்களால் தாக்கப்படிருந்தார். சேட்டைத் திறந்து விடுவது உய்ர்சாதிக் காரர்களுக்கு மட்டுமே உரிய விடயம். சென்ற வருடம், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 24 கிராமங்களில் எவரும் தமது குடும்பப் பெயர்களைப் பாவிக்கக்கூடாது எனவும், அதற்குப் பதிலாக அவர்கள் வாழும் கிராமத்தின் பெயரே அவர்களது ‘குடும்பப் பெயராக’ இருக்குமெனச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

சென்னையில், ஸ்நேகா என்றொரு வழக்கறிஞர், கடந்த 35 வருடங்களாக, எந்தவொரு அரசாங்க பத்திரங்களிலும் தனது சாதியைக் குறிப்பிட மறுத்துவந்திருந்தார். இறுதியில், அவர் எந்தச் சாதியிலும் சேராதவர் என அரசாங்கம் அவருக்கு அத்தாட்சிப் பத்திரமொன்றை வழங்கியுள்ளது.