‘மல்வான மாளிகை’ விவகாரம்: பசில், நடேசன் மீதான வழக்கை மீளப்பெற சட்டமா அதிபர் யோசனை – சாட்சியைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம்!
250 மில்லியன் ரூபாய் செலவில் மல்வானவில் கட்டப்பட்ட மாளிகை தொடர்பாக பசில் ராஜபக்ச மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோர் மீது 2018 இல் பதியப்பட்ட வழக்கை, போதிய ஆதாரங்கள் இல்லாமையால், மீளப்பெறுவதற்கு சட்டமா அதிபர் தயாராகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நீச்சல் குளம், பண்ணை ஆகியவற்றுடன் கூடியதாக அமைக்கப்பட்ட இம் மாளிகையின் நிர்மாணத்திற்கெனச் செலவான பணம் சட்டவிரோத முறைகளில் பெறப்பட்ட அரசுக்குச் சொந்தமான பணம் என முன்னர் பொலிஸ் விசாரணையின்போது சாட்சியமளித்த இக் கட்டிடத்தின் வடிவமைப்பாளர் முடித் ஜயக்கொடி கூறியிருந்தார். இவ்விசாரணைகள் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியிலிருந்தபோது மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஆனால், தற்போது இவ்வழக்கு திரும்பவும் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது முன்னர் பொலிஸ் விசாரணைகளில் சொல்லப்பட்ட விடயங்கள் எதிலும் உண்மையில்லை என ஜயக்கொடி வாக்குமூலமளித்துள்ளார்.
இருப்பினும், ஜயக்கொடியிடமிருந்து போதுமான ஆதாரங்களைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதால் இவ் வழக்கை மீளப்பெறவுள்ளதாக சட்டமாஅதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அரச தரப்பு சாட்சியான கட்டிட வடிவமைப்பாளர் முடித் ஜயக்கொடி, ஆரமபத்திலிருந்தே ஸ்திரமான போக்குடையவரல்லவெனவும், இந்தத் தடவை ராஜபக்ச தரப்பைப் பாதுகாக்க அவர் கட்சிமாறிவிட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ் வழக்கு ஜயக்கொடியின் சாட்சியத்தின் காரணமாகவே முன்னெடுக்கப்பட்டது எனவும் அவரது ஸ்திரமற்ற தந்மை மற்றும் வேறு சாட்சியங்கள் எதுவுமில்லாமையால் வழக்கைத் தள்ளுபடி செய்ய சட்டமா அதிபர் அலுவலகம் தீர்மானித்துள்ளதென அறியப்படுகிறது.
ராஜபக்சவுக்கு எதிராக முந்தைய அரசாங்கத்தினால் பதியப்பட்ட பல வழக்குகளில் இறுதியானது இது எனவும், மற்றைய வழக்குகள் அனைத்தும் நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன எனவும் கூறப்படுகிறது.