Sri Lanka

மலையகம்: கனடிய தமிழர் பேரவையின் உதவித் திட்டம்

கனடிய தமிழர் பேரவையால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றாக மலையக மக்களின் கல்வித் தேவையை மேம்பாடு செய்யும் நோக்கோடு தெஹியோவித்த தமிழ் மகாவித்தியாலயத்திற்கு புதியதொரு விஞ்ஞானகூடத்தை நிறுவித்தர பேரவை முன்வந்துள்ளது.

தெஹியோவித்த தமிழ் மகாவித்தியாலயமானது மண் சரிவு காரணமாக 2016 ஆம் ஆண்டு மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அபாயமான சூழ்நிலையை உருவாக்கியது. இதன் காரணமாக பாடசாலை தொடர்ந்து அதே இடத்தில் இயங்குவதற்கு பாதுகாப்பானது அல்ல என்று தீர்மானிக்கப்பட்டது. அதன் பிறகு இலங்கை அரசாங்கத்தால் குறித்த பாடசாலையின் அமைவிடத்தில் இருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவில் பாதுகாப்பான நிலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலத்தில் அமைக்கப்படவிருக்கும் புதிய கட்டிடத்தின் முதலாவது தள நிர்மாணத்திற்கான நிதியைத் திரட்டிக் கொடுப்பதற்காக செப்டம்பர் 10, 2023 அன்று ரொறோண்டோவில் கனடிய தமிழர் பேரவையினால் நிதிசேர் நடைபவனியொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இத் திட்டத்தின்படி அமையவிருக்கும் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன கட்டிடம், தளபாடங்கள் மற்றும் ஆய்வுகூட உபகரணங்கள் போன்றவற்றிற்கான செலவாக கனடிய டொலர் $100,000 தேவைப்படுகிறது. மனிதாபிமானிகளின் உதவிகளுடன் நிர்மாணிக்கப்படவிருக்கும் இத் திட்டம் உத்தேசமாக பெப்ரவரி 2024 இல் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10.11.2023 வெள்ளிக்கிழமை அன்று தெஹியோவித்த தமிழ் மகாவித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூட கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா கேகாலை மாவட்டத்தில் உள்ள தெஹியோவித்த எனும் இடத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவருமாகிய கெளரவ மனோ கணேசன் , கனடிய தமிழர் பேரவாயின் இலங்கைக்கான மனிதாபிமான திட்டங்களின் இணைப்பாளர் திரு துசியந்தன் துரைரட்ணம் மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்த நிகழ்வின்போது உரையாற்றிய கனடிய தமிழர் பேரவையின் இலங்கைக்கான மனிதாபிமான திட்டங்களின் இணைப்பாளர் திரு துசியந்தன் துரைரட்ணம், இந்த பணிக்காக நன்கொடை வழங்கி உதவிய அனைத்து கனடியர்கள் மற்றும் அமெரிக்க தமிழர்களிற்கு கனடிய தமிழர் பேரவையின் சார்பாக மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தெஹியோவித்த தமிழ் மகாவித்தியாலயத்தில் தரம் 05 தொடக்கம் தரம் 13 வரையிலான வகுப்புகள் இருப்பதோடு 600 மேற்ப்பட்ட மாணவர்களும் கற்றுவருகிறார்கள், உயர்தரத்தில் கலைப்பிரிவை மாத்திரம் கொண்டிருக்கும் இப்பாடசாலையில் உயர் தர விஞ்ஞான ஆய்வுகூடம் இல்லாமையினால், விஞ்ஞான பாடத்தை தெரிவுசெய்ய விரும்பும் மாணவர்கள் கலைப்பீடத்தை மட்டுமே தெரிவு செய்யவேண்டிய கட்டாயத்திலோ அல்லது தமது வசிப்பிடங்களிலிருந்து வெளியிடங்களுக்குச் சென்று பயிலவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கோ தள்ளப்படுகின்றனர்.ரிவுசெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் அல்லது தமது வசிப்பிடங்களில் இருந்து வெளியிடங்களிற்கு சென்று பயில வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்நிலையை கருத்தில் கொண்டே, மேற்ப்படி திட்டத்தை அமுல்படுத்தியிருக்கிறது கனடிய தமிழர் பேரவை.

பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்ட தமிழர்கள் மலையகத்தில் குடியேறி இவ்வாண்டுடன் 200  ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்னமும் பல்வேறுபட்ட அடிப்படை பிரச்சனைகளுடனே அங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அவர்களின் எதிர்காலத்தை மாற்றுவதற்கு கல்வியே இன்றியமையாத தேவைப்பாடுடையது என்பதாலும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்களின் அறிவுரையிற்கு அமையவும் கனடிய தமிழர் பேரவையினரின் இவ்வாண்டிற்கான  நிதிசேர் நடை பயணம் “மலையக தமிழர்களின் கல்விக்காக” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.