மலையகம்: அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் 50-ஏக்கர் நீர்வழங்கும் திட்டம் திறந்துவைக்கப்பட்டது
இலங்கை மலையகத் தமிழர்களின் வாழ்வாதார முன்னெடுப்புகளில் நீண்ட காலமாகச் செயற்பட்டுவரும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO-USA) பிரித்தானியாவைச் சேர்ந்த சொலிஹல் (Solihull) அமைப்புடன் இணைந்து ஆரம்பித்த மஸ்கேலியா நகரில் 50-ஏக்கர் நீர் வழங்கும் திட்டம் நவம்பர் 9, 2023 அன்று மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.
அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் மஸ்கேலியா திட்டப் பணிப்பாளர் திரு. கந்தையா விக்னேஸ்வரன் மற்றும் அ.ம.ந.அமைப்பின் மலையக கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு. எம்.பி.சந்திரசேகரன் ஆகியோர் இவ்வைபவத்தை ஆரம்பித்து வைத்தார்கள். இதர அ.ம.ந. அமைப்பின் பணியாளர்கள், தோட்ட முகாமையாளர் மற்றும் ஊர் மக்கள் இதில் கலந்துகொண்டிருந்தார்கள். 29 குடும்பங்களைச் சேர்ந்த 180 பேர் இந் நீர் வழங்கும் திட்டத்தால் பலன் பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.
ரூ. 900,000 செலவில் ஆரம்பிக்கப்பட்ட இப்பணி அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (அமெரிக்கா) மற்றும் சொலிஹல் (பிரித்தானியா) ஆகிய அமைப்புக்களினதும் அவற்றின் கொடையாளர்களினதும் உளமார்ந்த உதவிகளுக்கு என்றும் சாட்சியாக விளங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 23, 2023 இல் அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்திருந்த அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் பொருளாளர் திரு. முரளி ராமலிங்கம் அவர்களின் இறுக்கமான திட்டமிடலின் பிரகாரம் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. வெற்றிகரமாக இத்திட்டம் நிறைவேறுவதற்கு அவரது அர்ப்பணிப்புடன் கூடவே அ.ம.ந. அமைப்பு (அமெரிக்கா) மற்றும் சொலிஹல் (பிரித்தானியா) ஆகியவற்றின் பேராதரவும் காரணமாகும்.





