மலையகத் தமிழர்களுக்கு 1,000 வீடுகளை இந்தியா கையளித்தது

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டி, இலங்கையிலுள்ள மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கு 1,000 வீடுகளை வழங்கி இந்தியா கொண்டாடியிருக்கிறது.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கு 60,000 வீடுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் இந்தியா இவ் வீடுகளைக் கட்டியிருந்தது.

ஜனவரி 15 அன்று நடைபெற்ற இவ் வைபவத்தில் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இலங்கை அபிவிருத்தி, ஒன்றிணைப்பு, அவதானிப்பு அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இவ் வைபவத்தில் பேசிய உயர் ஸ்தானிகர் ” இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் இந்திய மக்களுக்குமிடையில் உறவுப்பிணைப்பு இருக்கிறதெனவும், பொங்கல் கொண்டாட்டம் அதற்கு உதாரணம் எனவும், இம் மக்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவிசெய்யும்” எனவும் தெரிவித்துள்ளார்.

‘பகத்சிங்புரம்’ -இந்திய நிதியுதவியுடன் மலையகத்தில் கட்டப்பட்ட வீடுகள்

இந்த 1,000 வீடுகளுடன் இந்தியா இதுவரை 4,000 வீடுகளைக் கட்டிக் கையளித்திருக்கிறது. அதே வேளை வடக்கு கிழக்கில் புதியதும், திருத்தப்பட்டதுமான 46,000 வீடுகளை இந்தியா நிர்மாணித்தோ அல்லது திருத்தியோ கொடுத்திருக்கிறது. மீதி 10,000 வீடுகளும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தோடு டிக்கோயாவில் 150 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனையொன்றையும் கட்டிக் கொடுத்திருப்பதுடன் கல்வி, சுகாதாரம், உட்கட்டுமானப் பணிகளுக்காக US$ 3.5 பில்லியன்களை இந்தியா இதுவரை வழங்கியிருக்கிறது.