மலையகத் தமிழர்களுக்கு மேலும் 10,000 வீடுகள்
இந்திய வீட்டுத் திட்டம் – நான்காம் கட்டம் ஆரம்பம்
இந்திய வீட்டுத் திட்டத்தின் நான்காம் கட்டமாக மலையக தோட்டத்தொழிலாளர்களுக்கென 10,000 மேலதிக வீடுகளை நிர்மாணிக்க இந்திய அரசு முன்வந்துள்ளது. இந்திய பூர்வீகத் தமிழர்களின் இலங்கை வரவு 200 ஆணுகளைப் பூர்த்தி செய்வதன் நினைவாக ‘நாம் 200’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்வுக்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது.
இத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் 4,000 வீடுகளில் 3,700 வீடுகள் ஏற்கெனவே நிர்மாணிக்கப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டிருப்பதைப் பாராட்டியதுடன் நான்காம் கட்ட ஆரம்பத்தையும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.
இந்திய பூர்வீகத் தமிழர்களின் நால்வாழ்வுக்காக இந்திய அரசு முன்னெடுத்துவரும் உதவித்திட்டங்கள் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான உறவு பலப்படுத்தப்படுமெனத் தான் நம்புவதாக அமைச்சர் சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.
ஜூன் 2010 இல் அறிவிக்கப்பட்ட இலங்கை ரூ 33 பில்லியன் பரீட்சார்த்த திட்டத்தின் கீழ் 10,000 வீடுகளை நிர்மாணிக்கவிருப்பதாக இந்தியா அறிவித்திருந்தது. இதன் பிரகாரம் நவம்பர் 2010 இல் ஆரம்பிக்கப்பட்ட 1,000 வீடுகளிந் நிர்மாணம் ஜூலை 2012 இல் நிறைவேறியிருந்தது. அக்டோபர் 02, 2012 இல் காந்தி பிறந்த தினத்தன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் 45,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு 2018 டிசம்பரில் நிறைவேறியிருந்தது. மூன்றாம் கட்டமாக 4,000 வீடுகள் மலையகத் தமிழருக்காக ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அக்டோபர் 2016 இல் ஆரம்பிக்கப்பட்டது. 12 மே 2017 இல் இலங்கை வருகை தந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நான்காம் கட்டமாக 10,000 வீடுகளை மலையகத் தமிழருக்காக நிர்மாணிக்கப்படுமென அறிவித்திருந்தார்.