Sri Lanka

மலையகத் தமிழருக்கு பூரண சமத்துவம் – ஜனாதிபதி விக்கிரமசிங்க

காணி உடமை மற்றும் கல்விக்கான உரிமை ஆகியவற்றை வழங்குவதன் மூலம் மலையகத் தமிழர் ஏனைய இலங்கையரைப் போல் சமத்துவமாக வாழ வழை செய்வேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் இந்திய பூர்வீக தமிழரின் 200 ஆண்டு கால நிறைவை முன்னிட்டு நவம்பர் 02 அன்று கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற ‘நாம் 200’ என்ற நிகழ்வில் பேசும்போது விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘நாம் 200’ கொண்டாட்டத்தின் அங்கமாக திம்புல, கொட்டகலவில் அமைந்திருக்கும் மவுண்ட் வேர்ணன் தோட்டத்தில் இந்திய வீட்டுத் திட்டத்தின் நான்காம் கட்டத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவத்தை ஆரம்பித்து வைக்க இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் இலங்கை வந்திருந்தார்.

1800 களில் பிரித்தானிய காலனித்துவ அரசினால் இலங்கையில் தோட்டங்களில் பணிபுரியவெனக் கொண்டுவரப்பட்ட மலையகத் தமிழர்களின் வாழ்வு கடந்த 200 ஆண்டுகளாகத் தொடர்ந்தும் பரிதாபமான நிலையிலேயே இருந்து வருகிறது. அவர்களைப் பூரணமான இலங்கைப் பிரஜைகளாக இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. தோட்டங்களில் பணிபுரிபவர்கள் வெளியாருடன் தொடர்புகளைப் பேணமுடியாதவாறு அமைக்கப்பட்ட ‘லயன்’ (Line / Row houses) களில் குடியமர்த்தப்பட்டனர். 12 x 12 அடி விஸ்தீரணமுள்ள ஒரு படுக்கையறையை மட்டும் கொண்ட தொடர் வீடுகளில் பல அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்கள் செறிந்து வாழ்ந்துவரும் நிலை இப்போதும் காணப்படுகிறது.

சமீபத்தில் இப்படியானதொரு தோட்டத்தில் வாழும் தொழிலாளரை முகாமையாளர் இம்சைப்படுத்தும் சம்பவத்தில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலையிட்டுத் தீர்த்து வைத்தமை தொடர்பான காணொளி ஒன்று பரவலாகப் பார்க்கப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் தொண்டமான் ” சுமார் 200,000 தோட்டத் தொழிலாளர்களும் அவர்களுடைய 800,000 குடும்பத்தினரும் எந்தவித உரிமைகளுமற்று இரண்டாம் தர பிரஜைகளாக வாழ்கின்றனர்” எனத் தெஹ்ரிவித்திருந்தார்.

இதன் பிரதிபலனாக மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை உட்பட்ட சகல உரிமைகளையும் வழங்கி அவர்களைச் சமத்துவமுள்ள இலங்கைப் பிரஜைகளாக அங்கீகரிப்பேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.