News & AnalysisSri Lanka

மலையகக் குழந்தைகளை இனிமேல் வீட்டு வேலைகளுக்கென அமர்த்த முடியாது – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளை இனிமேல் வீட்டுப் பணியாளராக அமர்த்திக்கொள்ள முடியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக கட்டமைப்பு ராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார். இதற்கான சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் தாம் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

றிஷாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து சமீபத்தில் எரி காயங்களுடன் மருத்துவமனையில் அநுமதிக்கப்பட்டு மரணமான 16 வயது ஹிஷாலினி சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போதுள்ள உள்ளக மற்றும் வெளிநாட்டுப் பணியாட்களை வேலைக்கமர்த்தல் தொடர்பான சட்டங்கள் மீளாய்வு செய்யப்படுகின்றன.

“தற்போது எமது நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் தொழிலாளர் சட்டங்கள் 100 வருடங்களுக்கும் மேலான பழமையானவை. இச்சட்ட மாற்றங்களின்போது, தமது பிள்ளைகளை உரிய வயதை அடைவதற்குள் வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களைத் தண்டிப்பதற்கான சட்டத் திருத்தங்களும் மேற்கொள்ளப்படும். பல தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களில் பொருளாதாரப் பிரச்சினை உண்டு என்பதை நானறிவேன், இருப்பினும் அதற்கு குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது தீர்வாகாது” என அமைச்சர் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பாடசாலைக் கல்வியை முடிக்காமல் இடையில் நிறுத்தப்பட்ட குழந்தைகளின் விபரங்கள், பணிக்குப் பிள்ளைகளைப் பிடித்துக் கொடுக்கும் தரகர்கள் பற்றிய விபரங்கள் ஆகியவற்றைச் சேகரிக்கத் தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் திங்களன்று இப்பணி ஆரம்பிக்குமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளப்படவேண்டுமென இன்று பலரும் பொலிசாருக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். இது நல்ல விடயம் தான். ஆனால் சிலர் இதைத் தமது அரசியல் இலாபத்துக்காகப் பயன்படுத்தவும் முயற்சிக்கின்றனர். தோட்டக் குழந்தைகளின் கல்வித் தரத்தை அதிகரிப்பதற்கான பல திட்டங்களை நாம் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளோம்” எந அமைச்சர் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அதே வேளை ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமெனக் கோரி, கொட்டகல, ஹட்டனில் தோட்டத் தொழிலாளர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளனர். மலையகம் முழுவதிலும் பல குழந்தைகள் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படுவதைத் தடுக்கவும் ஏற்கெனவே பணிபுரிந்து கொண்டிருப்பவர்களைத் திரும்பி அழைக்கவும் உடனடியாகச் சட்டமியற்றவேண்டுமெனக் கோரி பலதரப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மலையகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.