World

மலேசியா| 12 விடுதலைப் புலி ஆதரவாளர்கள் விடுதலை!

கோலாலம்பூர், மலேசியா: பெப்ரவரி 21, 2020

விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 12 பேர் மீதான குற்றப்பதிவுகளையும் மலேசிய நாட்டின் சட்டமா அதிபர் மீளப்பெற்றிருக்கிறார்.

மலேசிய சட்டமா அதிபர் தோமஸ்

இப் பன்னிரண்டு பேர் மீது பதியப்பட்டிருக்கும் 34 குற்றங்களில் ஒன்றைத் தானும் முன்னெடுப்பதற்குப் போதுமான காரணங்கள் இல்லை என்ற காரணத்தால், மத்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 145(3) இன் பிரகாரம் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் உடனடியாக மீளப்பெறுவதாக, சட்டமா அதிபர் ரான் சிறி ரொம்மி தோமஸ் தெரிவித்துள்ளார்.

“தங்கள் வழிகாட்டிகளையும், நாயகர்களையும் வழிபடுவது மக்களின் பொதுப்பண்பு. பிரபல பாடகர்கள், விளையாட்டு வீரர், நடிகர்கள் போன்றோர் பகழப்படுகிறார்கள்; வரலாற்றுப் புகழ்மிக்க தலைவர்களும், அரசியல்வாதிகளும் கூட ஆராதிக்கப்படுகிறார்கள். லெனின், ஸ்டாலின், மாவோ சே துங், சே குவேரா போன்ற பலர் உலக மக்களால் கொண்டாடப்படுகிறார்கள்” எனத் தனது நீண்ட அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

“அவர்களது படங்களையோ அல்லது இதர வடிவங்களையோ ஒருவர் தனது கைத் தொலைபேசியிலோ அல்லது முகநூலிலோ வைத்திருப்பதன் மூலம் அவர் பயங்கரவாதியாக மாறிவிடப்போவதில்லை. இந்தத் தலைவர்கள் எல்லாம் தமது நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு பயங்கரவாதத்தைப் பாவித்தார்கள் என்பதற்காக ஒரு ஆதர்ச ஆதரவாளர் பயங்கரவாத நடவடிக்கை ஒன்றுக்குத் தயாராகிறார் என எடுத்துக்கொள்ள முடியாது” என அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

“இப் பன்னிரண்டு விடுதலைப்புலி ஆதரவாளர்களிடமும் காணப்பட்ட பொதுப் பண்பு, இவர்கள் எல்லோரது கைத் தொலைபேசிகளிலும், முகநூற் கணக்குகளிலும், விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகனினதோ அல்லது இலங்கையில் போரில் கொல்லப்பட்ட தலைவர்களினதோ படங்கள் இருந்தமையே. இது ஒரு குற்றமெனக் கருதப்படுமானால் அது சட்டத்தையே கேள்விக்குள்ளாக்கிவிடும்” எனச் சட்டமா அதிபர் இப் பன்னிரண்டு பேரின் விடுதலை குறித்து வெளிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“அப்படித்தான், இப் பன்னிரண்டு விடுதலைப்புலி ஆதரவாளர்களும் தமது தலைவர்களின் படங்களை வைத்திருந்தத்மையோ அல்லது விநியோகித்தமையோ ஒரு ‘பயங்கரவாத நடவடிக்கையெனத்’ தீர்மானிக்கப்பட்டாலும் அது சட்டப்பிரிவு 130B(4) இற்குள் அடங்குகிறது என்பதை நிரூபிப்பதற்குப் போதுமான ஆதாரங்கள் வழக்குத் தொடுநரிடம் இருக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் ‘பாதுகாப்புக் குற்றங்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் 2012 (சொஸ்மா)’ இன் பிரகாரம் இப் பன்னிரண்டு பேர் மீதும், அக்டோபர் 29, 2019 இல் வழக்குத் தொடரப்பட்டு அனைவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில், செரெம்பான் ஜயா சட்டசபை உறுப்பினர் பி.குணசேகரன், கடேக் சட்டசபை உறுப்பினர் ஜி.சாமிநாதன் ஆகியோரும் அடங்குவர்.

தனது அறிக்கையின் ஆரம்பத்தில் தோமஸ், விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்பகால வரலாற்றையும், அவ்வமைப்பு அதன் தலைவர் பிரபாகரனால் மே 1976 இல் ஆரம்பிக்கப்பட்டு இலங்கை அரச் படைகளுக்கெதிரான மோதல்களில் ஈடுபட்டது எனவும், போரின் முடிவில் 11,664 வி.புலிகள் சரணடைந்தது, அதைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்சவின் கீழ் இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றியும், மே 2009 உடன் வி.புலிகளின் நடவடிக்கைகள் முடிவதைந்துவிட்டன எனவும் தோமஸ் அரசாங்கத்திற்குத் (மலேசிய) தெரிவித்திருந்தார்.

2009 உடன் விடுதலைபுலிகளின் நடவடிக்கைகள் முடிவடைந்துவிட்டன என்பதை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம், அமெரிக்க ராஜாங்க அமைச்சு, ஜேன்ஸ் பாதுகாப்பு வார வெளியீடு ஆகிய நம்பத்தகுந்த அமைப்புகளின் வெலீயீடுகள் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது எனவும், வி.புலிகளின் மீது 2006 இல் ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடையை, அக்டோபர் 2014 இல் ஐரோப்பிய நீதிமன்றம் நீக்கியிருந்தது பற்றியும், ஜூலை 2017 இல் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலிலிருந்து அவ்வமைப்பு நீக்கப்படவேண்டுமென ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பளித்தமை பற்றியும் சட்டமா அதிபர் தோமஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“2019 இல் இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களில்உட வி.புலிகள் சம்பந்தப்பட்டிருக்கவில்லை எனவும், அவரகளது வரலாற்றில் ஒருபோதும் மலேசிய மண்ணில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கவில்லை எனவும், சட்டமா அதிபர் என்ற வகையின் தான் நீதியைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், முன்னெடுக்கவும் கடமைப்பட்டவன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.