World

மலேசியா | வி.புலிகளை விடுவித்த சட்டமா அதிபர் ரொம்மி தோமஸ் பதவி விலகினார்!

கோலாலம்பூர்: மார்ச் 4, 2020

நாட்டின் அரசியல் தலைமையில் மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தான் பதவியிலிருந்து விலகுவதாக சட்டமா அதிபர் ரொம்மி தோமஸ் அறிவித்துள்ளார். பிரித்தானியா மற்றும் மூத்த ஜனநாயக நாடுகளில் இதுவே நடைமுறை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது பதவி, முனாள் பிரதமர் துன் டாக்டர் மகதிர் மொஹமட்டினால் செய்யப்பட்ட அரசியல் நியமனம் எனவும் அவர் பதவி விலகும்போது தானும் விலகுவதே முறை என தோமஸ் ஊடகமொன்றுத் தெரிவித்திருக்கிறார்.

தான் பதவியிலிருந்து விலகுவதன் மூலம், புதிய பிரதமர் தனக்கு விரும்பிய சட்டமா அதிபரை நியமித்துக் கொள்ளலாமென அவர் தெரிவித்திருக்கிறார். தனது இறுதி நாள் வரை, அநீதியைத் தடுத்து, நீதியை நிலைநாடுவதன் மூலம் நாட்டிற்குத் தனது சேவையை வழங்க முடிந்ததெனவும் அச்சந்தர்ப்பத்தைத் தந்ததற்காக டாக்டர் மகதிருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



தோமஸ் தநது பதவி விலகல் கடிதத்தை பெப்ரவரி 28 அன்று டாக்டர் மகதிரிடம் கையளித்திருந்தார்.

2018 இல் நடைபெற்ற நாட்டின் 14 வது பொதுத் தேர்தலில் பகதன் ஹரப்பன் கட்சி வெற்றியீட்டியதைத் தொடர்ந்து அவர் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டு, தொடர்ந்து 21 மாதங்கள் அவர் சேவையாற்றியிருந்தார். அவரது இரண்டு வருட ஒப்பந்தம் எதிர்வரும் ஜூன் மாதம் காலாவதியாகவிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் பலரைப், பதியப்பட்ட வழக்குகளிலிருந்து விடுதலை செய்தமைக்காக அவரைப் பதவி விலகும்படி எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வந்திருந்தமை தெரிந்ததே.