மலேசியா - புலிகள் விவகாரம் | பி.குணசேகரன் விடுதலை -

மலேசியா – புலிகள் விவகாரம் | பி.குணசேகரன் விடுதலை

Spread the love

நவம்பர் 6, 2019

மலேசியா: தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகச் செயற்பட்டார் என்ற குற்றத்துக்காக மலேசியாவின் பாதுகாப்புச் சட்டமான சோஸ்மாவின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பதில் பொது வழக்குத் தொடுநர் அஸ்லினா அஹாத் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி மடிஹா ஹருல்லா முன்னிலையில் இதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தார்.

நெகிரி செம்பிலான் மாவட்ட சட்டமன்ற உறுப்பினராகவும் அதே வேளை DAP கட்சியின் பதில் தலைவராகவும் இருக்கும் குணசேகரன், இரண்டு இடங்களில் விடுதலைப் புலிகள் தொடர்பான பிரச்சாரப் பொருட்களை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். அக்டோபர் 29 இல் அவர் மேலகா செசன்ஸ் நீதிமன்றத்தினாலும், அக்டோபர் 31 இல் கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தினாலும் குற்றவாளியாகப் பிரகடனப்பட்டிருந்தார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 7 வருடங்கள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் கிடைத்திருக்கும்.

குணசேகரன் நீதிமன்றத்தில் நேரடியாகச் சமூகமளிக்கவில்லை. அவர் சார்பில் ஜெலுடோங் பா.உ. ஆர்.எஸ்.என். ராயெர் தலைமையில் நான்கு வழக்கறிஞர்கள் பிரதிநிதிகளாத் தோன்றியிருந்தனர்.

வழக்குத் தொடுநர் குற்றங்களை மீளப்பெற்றுக்கொண்ட படியால்தான் குணசேகரன் விடுதைலை செய்யப்பட்டார். மீளப் பெற்றதற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை.

குணசேகரனைப் போன்று மேலும் பல தமிழர்கள் குற்றஞ்சாட்டப்படுள்ளனர். அவர்களில் பினாங்கு துணை முதல்வர் டாக்டர் ராமசாமி மற்றும் மனித வளத்துறை அமைச்சர் எம்.குலசேகரன் அவர்களும் முக்கியமானவர்கள்.

பினாங்க் துணை முதல்வர் டாக்டர் ராமசாமி

இவர்கள் இருவரும் பிரச்சினைக்குரிய மத போதகர் சாஹிர் நாயக் அவர்களைக் கடுமையாக விமர்சிப்பவர்கள். நாயக் நாடுகடத்தப்பட வேண்டுமென்று எழுதியும் பேசியும் வருபவர்கள். அதே வேளை விடுதலைப் புலிகளின் மாவீரர்நாள் போன்ற நிகழ்வுகளில் பங்குபற்றிப் பேசுபவர்கள்.

நாயக்கின் விடயத்தில் இவர்களது நிலப்பாட்டைத் தீவிர இஸ்லாமிய அமைப்புகள் கண்டித்து வந்தன. இக் கைதுகளுக்கும் அவ்வமைப்புக்களுக்கும் ஏதாவது தொடர்புகள் இருக்கலாமோ என்ர சந்தேகமும் தற்போது தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  உலகின் அதி குள்ள மனிதர் காலமானார்!