MoreTamil HistoryWorld

‘மலேசியாவில் தெல்லிப்பளை’ – யாழ்ப்பாணத் தமிழர் வரலாறு

சிவானந்திரம் அழகேந்திரம்

1800 களில் பிரித்தானிய காலனித்துவக் காலகட்டத்தில் வேலை நிமித்தம் இலங்கையிலிருந்து பல தமிழர் கொண்டுவரப்பட்டார்கள். அப்போது மலேசியாவின் நுழைவாயில் எனக் கருதப்பட்ட கிளாங்க் துறைமுகமே இப் புதிய குடிவரவாளர்களின் இறங்குதுறையாகவிருந்தது. இப்படியாக கிளாங்க் துறைமுக நகரைத் தமது வாழிடமாக்கிக்கொண்ட ‘யஃப்னீஸ்’ என அழைக்கப்பட்ட யாழ்ப்பாணத் தமிழர் வரலாறு பற்றிச் சுருக்கமாகச் சொல்கிறது இக்கட்டுரை – ஆசிரியர்

கோலாலம்பூரிலிருந்து சுமார் 38 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் துறைமுக நகர் இது. கிளாங்க் துறைமுகம் (Port Klang) என்றும், பின்னர் சுவெற்றென்ஹாம் துறைமுகம் (Port Swettenham) எனவும் அழைக்கப்பட்டது. தற்போது, கொள்கலன் கையாள்தலில் உலகில் 12 ஆவது இடத்தில் இருக்கிறது கிளாங்க் துறைமுகம். இத் துறைமுகத்திலிருந்து கோலாலம்பூருக்குச் செல்வதற்காக பிரித்தானியரால் அமைக்கப்பட்ட பாரிய ரயில்வே நிலையம் இங்குள்ளது.

கிளாங்கில் (Klang) யாழ்ப்பாணத்தவ சமூகத்தின் வாழ்வியல் மாற்றம் (1900 – 1950)

‘ரெலொக் புளை’, தெல்லிப்பளை என்ற யாழ்ப்பாணக் கிராமத்தின் திரிபடைந்த பெயர் எனப் பலர் கூறுவதுண்டு.

19ம் நூற்றாண்டில் யாழ்ப்பாண விவசாய பின்புலத்தோடு கிளாங்கில் வந்திறங்கிய யாழ்ப்பாணத்தவர் சமூகம் 1950 களில் ஒரு செல்வந்த மத்தியதரக் குடிமக்களாக மாற்றமடைந்தனர். ஒரு சமூகமாக ஏற்பட்ட இம்மாற்றம் பாராட்டப்பட வேண்டியது.

கிளாங்க் ஆற்றங்கரையில் இதந்தரும் சூழலில் அமைந்த இத் துறைமுக நகரம் 1800 களில் பிரித்தானியரின் முடிக்குரிய நகரமெனப் பெயர் பெற்றது. சிலாங்கூர் மாகாணத்தின் தலைநகராக இது விளங்கியது. கோலாலம்பூர் பின்னர் தலைநகராக மாற்றப்படும்வரை கிளாங்க் தான் மலேசியாவின் தலைநகர்.

பின்னர் நிர்வாகத் தேவைகளின் நிமித்தம் கோலாலம்பூர் தலைநகரமாக மாற்றப்பட்டது. ஆனாலும் கிளாங்க் தனது முக்கியத்துவத்தை இழக்கவில்லை. இங்கிருந்து மாடுகள், எருமைகள் பூட்டப்பட்ட வண்டிகளிலேயே மக்கள் கோலாலம்பூருக்குச் செல்லவேண்டியிருந்தது. இக் குறையைப் போக்க இரு நகரங்களுக்குமிடையே ரயில்வே தண்டவாளம் போடப்பட்டது. இதன் மூலம் கிளாங்க் மிகப்பெரிய ரயில்வே நிலையத்தின் இருப்பிடமாகியது

கிளாங்கின் வளர்ச்சி, அதையும் ஒரு நிர்வாக மையமாக ஆக்கியது. 20ம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் இங்கு பணிபுரிவதற்கென பெருமளவிலான வெளிநாட்டுக்காரர்கள் கொண்டுவரப்பட்டார்கள். இதன் காரணமாகவே பெருந்தொகையான யாழ்ப்பாணச் சமூகம் மலேசியாவில் குடியேறியது. அப்போது அவர்களது நோக்கம் உழைத்துச் சேமித்துக்கொண்டு, ஓய்வூதியத்தையும் பெற்றுக்கொண்டு ஊருக்குத் திரும்புவது. பெரும்பாலானவர்கள் தமது ஓய்வுக்காலத்திற்காக யாழ்ப்பாணத்தில் தமது கிராமங்களில் வீடுகள், நிலங்கள், கட்டிடங்கள் என வாங்கத் தொடங்கினார்கள்.

இரண்டாம் உலக யுத்தம் அவர்களது திட்டங்களைச் சிதறடித்தது. அவர்களது குழந்தைகள் தாம் பிறந்த பூமியில் ஆழமாக வேர்விடத் தொடங்கினார்கள். அவர்களது பெருக்கம் படிபடியாக அதிகரித்தது. ஆங்கிலம் மூலமான அவர்களது கல்வி ஸ்திரமான வேலைகளில் அவர்களை அமர்த்தியது. கிளாங்கிலும் புற நகர்களிலும் அவர்களது சமூக, பொருளாதார செல்வாக்கும் ஆதிக்கமும் அதிகரித்தது. பெற்றோரின் யாழ்ப்பாணக் கனவு சிறிது சிறிதாகக் கலையத் தொடங்கியது.

யாழ்ப்பாணம் திரும்பும் நோக்கமே இல்லாமல் வளரும் குழந்தைகளோடு பெற்றோரும் தமது கனவுகளை முற்றாகக் கலைத்துக்கொண்டனர். சுகாதாரம், கல்வி, சிறப்பான நகர் வாழ்வு யாழ்ப்பாணத்தைவிட மேன்மையாகவிருந்தது. கிளாங் யாழ்ப்பாணத் தமிழரின் நிரந்தர ஊராகியது.

அப்போது மலேசியாவுக்கு வந்த யாழ்ப்பாணச் சமூகம் விவசாய பின்புலத்தைக் கொண்டிருந்தாலும், கிறிஸ்தவ பாதிரியார்கள், ஆறுமுக நாவலர் போன்றவர்களது முயற்சிகள் தேடிக் கொடுத்த ஆங்கிலக் கல்வி அவர்களுக்கு பெரும் நன்மையை ஈட்டியது. இதன் துணையுடன், மிக வேகமாக வளர்ச்சியடைந்த மலாயாவின் பொருளாதாரத்தில் அவர்களால் தனித்துவமான பங்கைப் பிரித்தெடுக்க முடிந்தது. மலாயாவின் சிறந்த ஆங்கில மொழிக் கல்வியைப் பெற்றதனால் அவர்களது குழந்தைகளும், கிளாங் பள்ளத்தாக்கில் வளர்ந்துவரும் தொழிற்சந்தையில் காத்திரமான இடங்களைத் தக்கவைக்க முடிந்தது. நாட்டின் அதியுயர்ந்த கல்வியறிவையும், மிகக்குறைந்த குற்றச் செயல்களையும் கொண்ட ஒரு சமூகமென யாழ்ப்பாணச் சமூகம் தனது பெயரைத் தக்கவைத்துக் கொண்டது.

 கிளாங்கிலுள்ள ஒவ்வொரு யாழ்ப்பாணப் பெற்றோரும் தமது குழந்தைகள் ஆங்கிலத்தில் கல்வி பெறுவதை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். கிளாங்க் நகருக்கு அருகாமையில் இருந்த தோட்டப் பிரதேசங்களான பாடு டிகா, பாண்டிங் ஆகிய இடங்களிலிருந்து கிளாங்கிலிருந்த பிரபலமான நான்கு ஆங்கில மொழிப் பாடசாலைகளான கொன்வெண்ட், உயர் பாடசாலை, ஆங்கில-சீன பாடசாலை, மெதடிஸ்ட் பெண்கள் பாடசாலை ஆகியவற்றுக்குத் தமது பிள்ளைகளை அனுப்ப முயற்சி செய்தனர்.

உயர் பதவிகள் என்ற ஏணியில் ஏறுவதற்கான சிறப்புச் சலுகைகளோடு பிறக்காத காரணத்தால், தமது முன்னேற்றத்தை உறுதி செய்யும் ஒரே கருவி ஆங்கில மொழிப் பாடசாலைகளில் பெறும் சிறந்த ஆங்கில மொழிக் கல்வியும் ஆங்கில மொழியில் பரீட்சைகளை எழுதுவதுமே என யாழ்ப்பாணச் சமூகம் உணர்ந்திருந்தது. போட்டிகளுக்கு இச்சமூகத்தில் குறைவில்லை. தமது குழந்தைகள் உச்சத்தைத் தொடவேண்டுமென்பதற்காகத் தாய்மார்கள் நிதிரைகளைத் துறந்து பல தியாகங்களைச் செய்தார்கள். கிளாங்க் பாடசாலைகளிலும் பல சிறந்த அர்ப்பணிப்போடு கற்பித்த பல தமிழர்கள் இருந்தார்கள். வி.கே.சின்னையா, கே.அரியநாயகம், வி.கே.ஆறுமுகம், பொன்னையா, நடராஜா, தியாகராஜா, ராஜகாரியர், ஜி.எஸ்.ஆறுமுகம், வீரசிங்கம், திருமதி ஜி.எஸ்.ஆறுமுகம், மேலாண் அன்னை அல்பேர்ட், சகோதரி ஹெலென் எனப் பலர்.

பலர் உயர் கேம்பிரிட்ஜ் பரீட்சைகளில் சித்தியெய்தி சிங்கப்பூரிலுள்ள, ரஃபிள்ஸ் கல்லூரிக்கோ அல்லது கிங்க் எட்வார்ட் VII மருத்துவக் கல்லூரிக்கோ (பின்னர் மலாயா பல்கலைக்கழகம் – சிங்கப்பூர்) சென்றார்கள். மேலும் பல பிரகாசமான மாணவர்கள் இங்கிலாந்தின் கேர்க்பி, பிரின்ஸ்ஃபோர்ட் லொட்ஜ் ஆகிய இடங்களில் ஆசிரிய பயிற்சிக்காக அனுப்பப்பட்டர்கள். ஆசிரிய பயிற்சிக்கெனத் தெரிவுசெய்யப்பட்ட முதற் குழுவான 151 பேரில் கணிசமான இலங்கைத் தமிழர் இருந்தார்கள்.

1920 முதல் 1950 வரை, கிளாங்கிலிருந்த யாழ்ப்பாணச் சமூகத்தின் மாற்றம் அபரிமிதமானது. அவர்களது சனத்தொகையோடு ஒப்பிடும்போது 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அதியுச்ச தொழில் வல்லுனர்களை இச் சமூகம் கொண்டிருந்தது. வேறு சிலர் அரசாங்கத்திலும், தனியார் நிறுவனங்களிலும் எழுதுவினைஞர்களாகத் தொழில்களை ஆரம்பித்துப் படிப்படியாக அனுபவம், கல்வி, முயற்சி ஆகியவற்றால் பதவியுயர்வுகளைப் பெற்றுத் தலைமை ஸ்தானங்களை அடைந்தார்கள். தோட்டங்களில் கள உதவியாளர்களாக ஆரம்பித்து முகாமையாளர்களாக வளர்ந்தார்கள். அலுவலகப் பணியாளர்களாகவும், தொழில்துறைப் பணியாளர்களாகவும் அவர்கள் பிரித்தானிய எஜமானர்களுடன், சமூகமாக, சிறப்பான பணியுறவை உருவாக்கிக் கொண்டார்கள்.

அரசாங்கப் பணிகள் பொருளாதாரப் பாதுகாப்போடு, நல்ல ஓவூதியத்தையும் கொடுத்தன. இவற்றில் தங்கள் குழந்தைகளின் கல்விச் செலவுகள் போகத் தமது எளிமையான வாழ்க்கை மூலம் பணத்தைச் சேமித்து யாழ்ப்பாணத்திலுள்ள உறவினருக்கும் அனுப்பினார்கள். யாழ்ப்பாணத்தில் செம்பாட்டு மண்ணில் வாழ்ந்த உறவினர் கிணற்று நீரையும் வானையும் நம்பியே தனது வாழ்க்கையை ஓட்டினர். மலாயாவில் இவர்களது வாழ்க்கை வேறுவிதமாகவிருந்தது.

பிரித்தானிய துரைமார் வருவார்கள், போவார்கள், பணி மாறுவார்கள், பணியுயர்வார்கள் ஆனால் அவர்களது நிர்வாக யந்திரத்தின் இயங்கு சூத்திரம் யாழ்ப்பாணத்தவரின் மண்டைகளுக்குள்தான் இருந்தது. பணித் தொடர்ச்சிக்கு அது அவசியமாகவிருந்தது. இதனால் பலர் தமது பணியிடங்களில் உயர் பதவிகளை வகிக்கக்கூடியதாகவிருந்தது. பலர் தமது சேவைகளுக்காக பிரித்தானிய முடியின் விருதுகளையும் பெற்றார்கள். 1950 களின் ஆரம்பத்தில், எழுத்திலும், பேச்சிலும் இவர்கள் கொண்டிருந்த ஆங்கில மொழிப் புலமையால் வேறெந்த சமூகத்தவரினாலும் இவர்களது பதவிகளுக்கு அச்சுறுத்தல் வரவில்லை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு யாழ்ப்பாணத்தவரின் பணி நெறியாகவிருந்தது.

இப்படியாக உயர் பதவிகளிலிருந்தவர்கள் பலர் தமது செல்வாக்கின் காரணமாக நாட்டின் ஆட்சி சம்பந்தப்பட்ட கொள்கை உருவாக்கங்களில் பங்குகொண்டனர். ரயில்வே, தொழிலாளர் விடயங்கள், தபால் சேவை, சுங்கம், தொலைத் தொடர்பு, மின்சாரசபை மற்றும் தனியார் துறைகளில் யாழ்ப்பாணத்தவரின் பங்கு பிரித்தானிய எஜமானர்களால் பெரிதும் அங்கீகரிக்கப்பட்டது. இதனால் வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு என்றதும் பிரித்தானிய எஜமானர் யாழ்ப்பாணத் தமிழருக்கே முன்னுரிமை கொடுத்தனர். ரப்பர், பாம் ஒயில் தோட்டங்களில் துரைமார் யாழ்ப்பாணம் மற்றும் கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு உடனடியாகவே கள நடத்துனர் (field conductor), உதவி தொழிற்சாலை மேற்பார்வையாளர் (junior factory hands), மருத்துவமனை உதவியாளர்(hospital assistants) பதவிகளை வழங்கினர்.

கிளாங்க் பள்ளத்தாக்கு ரயில்வேயில் எப்போதும் யாழ்ப்பாணத் தமிழர்களே ஸ்டேசன் மாஸ்டர்களாக இருப்பார்கள். தபால் துறை, தொலைத்தொடர்பு, சுங்கம், பொலிஸ், தொழில்வளம், சமூக நலம், விலங்கு வைத்தியம், பொதுப்பணித்துறை ஆகியவற்றின் மூத்த பதவிகள் எல்லாம் சிறுபான்மைச் சமூகத்தினருக்கே வழங்கப்பட்டது. கிளாங்க், போர்ட் கிளாங்க் ஆகிய நகரங்களில் பணியாற்றிய பல யாழ்ப்பாணத் தமிழர்கள் தமது சுய முயற்சி, கடின உழைப்பு, கல்வி ஆகியவற்றினால் முன்னேறி உயர் பதவிகளை எட்டியவர்களும் இருக்கிறார்கள்.

இப்படியான பதவி உயர்வுகளோடு படிப்படியாக அவர்களது சமூக அந்தஸ்துக்களும் உயர்ந்தன. இதன் மூலம் கிடைத்த செல்வாக்கைப் பாவித்து மூத்த அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும், ஃபோர்ட் ஹில்லிலுள்ள மாவட்ட அதிகாரியின் வீட்டுக்கு அருகே, மேற்கு ஜலான் ராயா பகுதியில் விடுதிகளில் வாழத் தொடங்கினார்கள். யாழ்ப்பாணத் தமிழர், தொகையில் மிகச் சிறிய எண்ணிக்கையினரேயானாலும், கடின உழைப்பாலும், ஊக்கம், சுய முயற்சி, அர்ப்பணிப்பு ஆகியவற்றால், நாட்டின் நான்காவது பெரிய நகரில், தம்மை ஒரு ஆதிக்க சக்தியாகக் காட்டி வந்தார்கள்.

1930 -1950 காலப் பகுதியில், ஒரு சமூகமாக, யாழ்ப்பாணத் தமிழர், ஜலான் டாட்டோ அமார், ஜலான் ராஜா முடா, றிவெர்சைட் ரோட் மற்றும் ரெலொக் புளை ரோட் ஆகிய பகுதிகளில் இருந்த குடியிருப்புக்களில் ஆதிக்கம் செலுத்தினர். ஒப்பீட்டளவில் ரெலொக் புளை ரோட் குடியிருப்பு, இவற்றில் அதிக வளர்ச்சி கண்டிருந்தது. 1945-1955 காலப் பகுதியில் இச் சமூகம், மழையில் வளரும் காளான்களைப் போல அதீத வளர்ச்சியைக் கண்டது. இதனைத் தொடர்ந்து ரெலொக் புளை, கிளாங்கின் ‘சின்ன யாழ்ப்பாணம்’ என அழைக்கப்பட்டது. ‘ரெலொக் புளை’, தெல்லிப்பளை என்ற யாழ்ப்பாணக் கிராமத்தின் திரிபடைந்த பெயர் எனப் பலர் கூறுவதுண்டு. குத்தகையற்ற காணி, சுமாரான வாடகை, உயர்கல்விப் பாடசாலைகள் அருகிலிருந்தமை, கிளாங்க் நரர் மையம், சுப்ரமணியர் கோவில் ஆகியன இவர்களது குடியிருப்பு உருவாகுவதற்கும் வளர்வதற்கும் காரணமாகவிருந்தன. 1900 களின் ஆரம்பத்தில், ரெலொக் புளையில் ரயில் தரிப்பு நிலையம் செயற்பட ஆரம்பித்தது. இதனால் இங்கிருந்து போர்ட் கிளாங்க், கோலாலம்பூர் போன்ற நகரங்களுக்கு பலரும் வேலைக்குப் போவதற்கும் வசதியாக இருந்தது.

1950 களில், எனது பேரனார், ஐயாடுரை சின்னதம்பர், ரெலொக் புளையைத் தனது ஓய்வு பெறுமிடமாக வரித்துக்கொண்டார். கிளாங்க் நகரில், ஏன் மலேசியாவிலேயே, மிகவும் வித்தியாசமான இடமாகத் தெரிவது ரெலொக் புளை என்பார்கள். ரெலொக் புளை சந்தியின் ஆரம்பத்திலிருக்கும் செல்வரட்ணத்தின் வீட்டில் தொடங்கி, சிம்பாங் எம்பற்றுக்கு அருகிலுள்ள ராசையா வாத்தியார் வீடு வரை யாழ்ப்பாணத்தாரின் வீடுகள் நீளூம்.

இந்த சின்ன யாழ்ப்பாணத் தெருவில்தான் சுப்ரமணிய சுவாமி கோவில் இருக்கிறது. ஆரம்ப கால யாழ்ப்பாணத் தமிழரால் கட்டப்பட்ட இக் கோவிலுக்கருகில் தங்கள் பிள்ளைகள தமிழ் கற்கவேண்டுமென்பதற்காய் கட்டப்பட்ட தமிழ்ப் பள்ளியும், கலாச்சார நிகழ்வுகளைக் கொண்டாடுவதற்காகக் கட்டப்பட்ட நாவலர் மண்டபமும் இருக்கின்றன. கோலாலம்பூரில் வாழும் தங்கள் சக யாழ்ப்பாணத் தமிழர்களோடு உறவுகளைப் பேணுவதற்காக டிவைன் லைஃப் சொசையெட்டி (Devine Life Society), யாழ்ப்பாணத்தார் கூட்டுறவுக் கழகம் (Jaffanese Cooperative Society) மற்றும் அதன் வீடு நிர்மாணப் பிரிவு (இதுவே ரெலொக் புளை தெருவில் குடியிருப்புகளைக் கட்டியது) ஆகியவற்றையும் உருவாக்கிக் கொண்டனர்.

இப்படியான நிறுவனங்களும், அமைப்புகளும், ஆரம்பகர்த்தாக்களால் தமது தனித்துவத்தையும், அடையாளத்தையும் பேணுவதற்காகவும் நிலைநிறுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டவை. கோவிலின் மூத்த நிர்வாகிகளால் நாவலர் மண்டபத்தில் நடத்தப்படும் குரு பூஜை போன்ற சமய நிகழ்வுகள் நாட்டிலேயே தனித்துவமானவை மட்டுமல்ல மலாயாவில் இந்து சமயத்தின் வளர்ச்சிக்குக் காரணமானவையுமாகும். கிளாங்க் இந்து இளைஞர் சபையினால் கொண்டாடப்படும் பொன் விழா, தமிழ் பாடசாலை விழாக்கள் கிளாங்க் பள்ளத்தாக்கு யாழ்ப்பாணச் சமூகம், தாம் விட்டு வந்த தாய்நாட்டு உறவுகளோடு தொடர்புகளைப் பேணுவதற்கு உதவுகின்றன.

ஒரு அரை நூற்றாண்டில், கிளாங்க், போர்ட் கிளாங்க் நகரங்களில் இச் சமூகத்தின் மூதாதையர்கள் நாட்டிய அடிக்கல் ஒரு சமூகத்தின் வெற்றிகரமான பயணத்தின் தடங்களைப் பதித்து வைத்திருக்கிறது. அவர்கள் நாணயமும், தூரப்பார்வையும், திறமையும் கொண்ட மனிதர்கள். தமது சமூகத்தைத் தனித்துவமான இனக்குழுமமாகப் பேணவேண்டுமென்பது அவர்களுக்கு மிகவும் முக்கியமாகவிருந்தது. அவர்கள் தமிழை ஒரு வித்தியாசமான உச்சரிப்புடன் பேசுகிறார்கள். தங்கள் கோவிலில் தான் வழிபடுகிறார்கள். முற்றிலும் தனிக் குழுமமாக விலகியிருக்கவே விரும்புகிறார்கள். அவர்களது தீர்க்கமும், விடாமுயற்சியும் தாய்நாட்டில் விட்டுவிட்டு வந்தவர்களைவிட மேல்நோக்கிய பயணத்தையும், தரமான வாழ்வையும் அவர்களுக்குக் கொடுத்துள்ளன. இன்றுகூட, ரெலொக் புளை கிளாங்கில் அவர்களது தனித்துவமான நிறுவனங்கள் அவர்களால் விடப்பட்டு வந்த விழுமியங்களுக்கான சாட்சிகள்.