Sri Lanka

மற்றய நாடுகளின் உள்ளக விவகாரங்களில் ஐ.நா.சபை தலையிடுவதைத் தவிர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் – ஜனாதிபதி ராஜபக்ச


செப்டம்பர் 21, 2020: ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது வருட பூர்த்தியை நினைவுகொள்ளும் முகமாக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச வெளியிட்ட பதிவுசெய்யப்பட்ட செய்தியில், “ஐ.நா. சபை, மற்றய நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பதில் கவனம் செலுத்துமென நாம் எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

“நிகரற்ற ஆபத்தை உலகம் எதிர்கொண்டிருக்கும் இவ் வேளையில், “எமக்குத் தேவையான ஐ.நா.” நாடுகளின் இறையாண்மைச் சமத்துவம், பிரதேச ஒருமைப்பாடு ஆகியற்றை மதித்தல், உள்ளக விவகாரங்களில் தலையிடாமை ஆகிய விடயங்களில் கவனம் செலுத்துமென நான் உறுதியாக நம்புகிறேன்” என அவரது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

சில நாடுகளின் நன்மைக்காக எந்தவொரு நாடும் பணயம் வைக்கப்பட முடியாத நிலைதான், ஐ.நா. சபையும், அதன் அங்கத்துவ நாடுகளும் வளர்த்திருக்கும் கூட்டாண்மையின் சிறப்பை உறுதி செய்கிறது என்பதைத் தான் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

‘எமக்கு விருப்பமான எதிர் காலம், எமக்குத் தேவையான ஐ.நா.: பல்தரப்புக்கான கூட்டான அர்ப்பணிப்பை மீள உறுதிசெய்தல் (The Future We Want, the UN We Need: Reaffirming our Collective Commitment to Multilateralism)’ என்ற தலைப்பில் திங்களன்று (செப் 21, 2020), ஐ.நா. சபையின் 75 வருடப் பூர்த்தியைக் கொண்டாடும் நிகழ்வு, ஐ.நா. பொதுச் சபையில் இடம்பெற்றிருந்தது.

பொதுச் சபையின் தலைவர் வோல்கன் பொஸ்கிர் அவர்களின் தொடக்கவுரையுடன் நடைபெற்ற இந் நிகழ்வில் 180 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கெடுத்திருந்தார்கள்.