EntertainmentIndia

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு ‘பத்ம விபூஷண்’ விருது


மறைந்த பின்னணிப் பாடகர் ‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந், இந்தியாவின் இரண்டாவது அதியுயர் விருதான ‘பத்ம விபூஷண்’ பட்டத்தை அளித்துக் கெளரவித்துள்ளார். ‘பாரத ரத்னா’ இந்தியாவின் அதியுயர் விருதாகும்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், கோவிட்-19 தொற்றுக் காரணமாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சென்னையில் மரணமானார்.

சிறந்த குரல்வளத்தோடு, இசையுலகிலும், திரையுலகிலும் மிகச் சிறந்த மனிதர் எனப் போற்றப்பட்ட எஸ்.பி. பாலா என அன்போடு அழைக்கப்படும் பாலசுப்ரமணியத்துக்கு 2001 இல் ‘பத்ம ஷ்றீ’ விருதும், 2011 இல் ‘பத்ம பூஷண்’ விருதும் வழங்கப்பட்டிருந்தன. 6 தசாப்தங்களாக இசையுலகிலும், திரையுலகிலும் கோலோச்சிய அவர், சிறந்த பின்னணிப்பாடகர் என்ற தகமைக்காக 6 தடவைகள் தேசிய விருதையும், 25 ‘நந்தி’ விருதுகளையும் இதர பல பெருமைகளையும் பெற்றிருக்கிறார். அத்தோடு அவர் தொலைக்காட்சி அறிவிப்பாளர், இசை இயக்குனர், நடிகர், ஒலி மாற்றுனர், படத்தயாரிப்பாளர் என்ற பல மாற்றுப் பணிகளிலும் ஈடுபட்டவர்.

தெலுங்கு படமான சிறி சிறி சிறி மரியாத ராமண்ணா என்ற படத்தின் மூலம் அறிமுகமான திரு எஸ்.பி. பாலா தமிழில் அடிமைப் பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா பாடல் மூலம் அறிமுகமானார். சங்கராபரணம் படத்தில் அவரது கர்நாடக இசையிலமைந்த பாட்டிற்காக அவருக்கு முதலாவது தேசீய விருதும், ஏக் தூஜே கீ லியே என்ற இந்திப் படத்தில் பாடிய தேரே மேரே பீச் மெயின் பாடலுக்காக இரண்டாவது தேசிய விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தன.



பக்திப் பாடல்கள் முதல் திரையிசைப் பாடல்கள் வரை பல மொழிகளிலும், 40,000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.

கொறோணாவைரஸ் தொற்றுக் காரணமாக ஆகஸ்ட் 5, 2020 இல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி. பாலா சிகிச்சை பலனளிக்காமையால் செப்டம்பர் 25, 2020 அன்று மரணமானார்.