Spread the love

நியூ யோர்க் மாநிலத்திலுள்ள 5,000 மருந்தகங்களில், கோவிட்-19 நோய்க்கான பரிசோதனைகளைச் செய்ய முடியும். இதற்கான விசேட உத்தரவை பிறப்பிக்கவுள்ளதாக அம் மாநிலத்தின் ஆளுனர் அண்ட்றூ கூமோ நேற்று (சனி) அறிவித்துள்ளார்.

பொதுமக்களிடமிருந்து பரிசோதனைக்கான மாதிரிகளைப் (samples) பெற, பெரிய நிறுவன மருந்தகங்களுக்கு மட்டுமே இதுவரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதைச் சகல மருந்தகங்களுக்கும் விஸ்தரிக்க ஆளுனர் முடிவெடுத்துள்ளார். இப் பரிசோதனையின்போது, ஒருவருக்கு கோவிட்-19 தொற்று இருக்கிறதா என்பது பற்றிய முடிவுகளை மட்டுமே வழங்குவதற்கு அனுமதியளிக்கப்படும். சில பரிசோதனைகளிந் மூலம், தொற்றுக் கண்டவரின் உடலிலுள்ள எதிர்ப்பொருட்களையும் (antibodies) பரிசோதிக்க முடியும். அதற்கான உத்தரவை இப்போது ஆளுனர் வழங்கவில்லை.

அமெரிக்க நோய்த் தொற்று, இறப்பு எண்ணிக்கையில் நியூ யோர்க் மாநிலமே இப்போது முன்னணியில் இருக்கிறது. இறுதியாகக் கிடைத்த புள்ளி விபரங்களின்படி மாநில ரீதியாக, 282,000 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்களும், 16,599 மரணங்களும் ஏற்பட்டுள்ளன. இதில் பெரும்பங்கு நியூ யோர்க் நகரத்திலேயே இடம் பெற்றிருக்கிறது. அங்கு உறுதிபடுத்தப்பட்ட தொற்றுக்கள் 155,000 , இறப்புக்கள் 11,817, குணமடைந்தவர்கள் 18,018 என அறியப்படுகிறது. அமெரிக்காவில் மொத்தம் 959,000 தொற்றுக்களும், 54,161 இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

இந் நிலையில், ஆளுனர் கூமோவின் இவ்வறிவித்தல் நோய்க்கட்டுப்பாட்டில் பாரிய திருப்பங்களைக் கொண்டுவருமென எதிர்பார்க்கப்படுகிறது. நாடு தழுவிய ரீதியில், இயல்பு வாழ்வுக்குத் திரும்பவேண்டுமென்ற அழுத்தம் வணிக நிறுவனங்களிடமிருந்து மட்டுமல்ல பொது மக்களிடமிருந்தும் எழத் தொடங்கியுள்ளது. இப் பரிசோதனை விரிவாக்கம் மக்களிடமிருக்கும் அச்சம், பதட்டம் போன்றவற்றிலிருந்து வெளிவர உதவிசெய்யலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறியப்படுகிறது.

நியூ யோர்க் மாநிலத்திலுள்ள 300 ஆய்வுகூடங்களில் தற்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருந்தகங்களில் சேகரிக்கப்படும் மாதிரிகள் இவ்வாய்வு கூடங்களிலேயே பரிசோதிக்கப்படும். அதற்காக இவ்வாய்வுகூடங்களுக்கு போதுமான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என ஆளுனர் கூமோ தெரிவித்தார்.

இவ்வாய்வுகூடங்களில் தற்போது நாளொன்றுக்கு 20,000 பரிசோதனைகள் செய்யப்பட்டு வர்கின்றன. இதை இரட்டிப்பாக்குவதற்கான வகையில் புதிய உபகரணங்களும், பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. யார் யாருக்குப் பரிசோதனைகள் செய்யப்படவேண்டுமென்பது தற்போது கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இதை விரிவாக்கி, அவசர சிகிச்சை வழங்குபவர்கள், சுகாதார பணியாளர்கள், முக்கிய சேவையாளர்கள் ஆகியோருக்கு பரிசோதனைகளுக்கான முன்னிடம் கொடுக்கபடுமென ஆளுனர் மேலும் தெரிவித்துள்ளார். இப்படியானவர்களது பரிசோதனைகளில் எதிர்ப்பொருட் பரிசோதனைகளயும் சேர்ப்பதற்கு அவர் உத்தேசித்துள்ளார்.

Print Friendly, PDF & Email
Related:  கோவிட்-19 ஐக் கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி ட்றம்ப் தரும் யோசனை - பரிசோதனைகளைக் குறைக்கும்படி உத்தரவு!