மருத்துவ பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அமெரிக்கா பயணம்

மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றுள்ளதாக ‘இந்தியா ருடே’ செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுவான உடற் பரிசோதனை (regular health check up) ஒன்றைச் செய்வதற்காக அவர், மனைவி லதா சகிதம் வெள்ளியன்று (18) சென்னை விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவுக்குப் பயணமானார் எனத் தெரிகிறது.

தம்பதிகள் இருவரும் அமெரிக்காவில் சில வாரங்கள் தங்கி அனைத்து பரிசோதனைகளையும் முடித்துவிட்டு ஜூலை 8 நாடு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் வெளிவரவிருக்கும் அவரது ‘அண்ணாத்தே’ படத்திற்காக அவர், கடந்த 35 நாட்களாக, தொடர்ச்சியாகப் பணி புரிந்து தனது பாகங்களை முடித்துக் கொடுத்துவிட்டு அமெரிக்கா புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. படத்தின் பணியாளர் சிலருக்கு கோவிட் தொற்று, ரஜினியின் அரசியல் பிரவேச முயற்சி எனப் பல விடயங்களால் இப் படத்தின் படப்பிடிப்பு ஒரு வருட காலமாகத் தேக்க நிலையில் இருந்தது.

சிவாவின் கதை, இயக்கத்தில் உருவாகும் ‘அண்ணாத்தே’ யில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷ்றொஃப், ஜகபதி பாபு, பிரகாஷ் ராஜ், வேலா ராமமூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். இவ் வருடம் நவம்பர் 4 அன்று படம் திரைகளுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.