• Post category:INDIA / NEWS
  • Post published:April 20, 2020
Spread the love

55 வயதுடைய மருத்துவர் சைமன், சென்ன்னையிலுள்ள பிரபலமான நியூ ஹோப் மருத்துவமனையில் ஒரு நரம்பியல் நிபுணர் . தன் வாழ்நாளில் பல நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்துக் காப்பாற்றியவர். மிகவும் மனிதாபிமானம் மிக்கவர் என அவரைச் சூழ்ந்தவர்கள் கூறுவார்கள். அவர் இறந்த போது அவரது உடலைப் புதைக்க முயன்றவர்களை நகர மக்கள் கற்களாலும் பொல்லுகளாலும் அடித்துத் துரத்தியிருக்கிறார்கள்.

“நூற்றுக்கணக்கான மக்களைக் காப்பாற்றிய மருத்துவரது உடலை இரவோடிரவாகக் கைகளினால் மண்ணில் புதைக்கவேண்டி ஏற்பட்டது. அவருக்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டிருக்கக்கூடாது” மருத்துவர் பிரதீப்.

இறந்த மருத்துவர் கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகியிருந்தார் என்ற செய்தி பரவியிருந்ததைத் தொடர்ந்து நகர மக்கள் இப்படி நடந்துகொண்டிருக்கிறார்கள். சென்னையில் இப்படி நடப்பது முதற்தடவையல்ல.

மருத்துவர் சைமனுக்கு அவர் சிகிச்சை செய்த நோயாளிகளிடமிருந்து நோய் தொற்றியிருக்கலாமெநச் சந்தேகிக்கப்படுகிறது. அவரின் குடும்பத்தாரால் கூட இறுதி மரியாதைகளைச் செய்ய முடியாது போய்விட்டது.

“அவரது உடலைப் புதைக்க முயன்ற போது மக்கள் எங்களைக் கற்களாலும் லொல்லுகளாலும் தாக்கினார்கள். உரிய மரியாதைகளின்றித் தனிமையாக அவரது இறுதிப்பயணம் இருக்கிறதே என்ற கருணைகூட இல்ல்லாமல் தமது உயிர்ப்பயத்தின் காரணமாக இப்படி மாகள் நடந்துகொண்டிருக்கிறார்கள். இறுதியில், இரவோடிரவாகக் கைகளினால் மண்ணில் குழிதோண்டி அவரது உடலைப் புதைத்தோம்” என்கிறார் அவரது நண்பர் மருத்துவர் பிரதீப்.

மருத்துவர் சைமன், சென்னை, வானரங்கத்திலுள்ள அப்போலோ நியூ ஹோப் மருத்துவமனையில் பணிபுரிந்ததோடு அதன் நிர்வாகப் பணிப்பாளாரகவும் இருந்துவந்தார். ஏப்ரல் மாத ஆரம்பத்தில் ஒரு நோயாளியிடமிருந்து இவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகிறது.

நேற்று (ஞாயிறு) மாலை 9 மணி போல், அவரது உடல் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் அவரது உடலை இறுதிக் கிரியகளுக்காக கீழ்ப்பாக்கத்திலுள்ள டிபி சத்திரம் இடுகாட்டுக்குக்கு அம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்வதற்குத் தயார் செய்யப்பட்டிருந்தது. மாநகராட்சி இதற்கான காரியங்களைச் செய்து இரண்டு அம்புலன்ஸ் சாரதிகளையும் வழங்கியிருந்தது. இறுதி மரியாதைக்காக அவரது குடும்பமும் மருத்துவ நண்பர்களும் செல்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டு காவற்துறை உதவியும் வழங்கப்பட்டிருந்தது.

தகவலறிந்த அயல் மக்கள் 100 பேர் வரையில் டிபி சத்திர இடுசாலைக்கு அருகில் கூடி உடல் அங்கு புதைக்கப்படுவதைத் தடுக்கக் காத்திருப்பதாகச் செய்தி கிடைத்ததும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக, வேளாங்காடு இடுசாலைக்கு புதையலுக்காக உடலைக் கொண்டு சென்றனர். அங்கும் வேறு பலர் கூடி, கற்களாலும், பொல்லுகளாலும் தாக்கி, புதையலைத் தடுக்க முற்பட்டுள்ளனர்.

“கிட்டத்தட்ட 6 அடிகளைக் தோண்டி முடித்திருந்தபோது 50-60 பேர் எங்களைத் தாக்க ஆரம்பித்தனர். அம்புலன்ஸ் வண்டி சேதமடைந்தது. சாரதிகள் இருவருக்குத் தலையில் காயங்கள் ஏற்பட்டன. மருத்துவர்களும், சுகாதாரப் பரிசோதகர்களும் தாக்கப்பட்டனர். மருத்துவர் சைமனின் குடும்பமும் விட்டுவைக்கப்படவில்லை. மாநகாராட்சி ஊழியர் அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டனர்” என்கிறார் மருத்துவர் பிரதீப்.

“நிலைமை மிகவும் மோசமாகப் போய்விட்டது. நாங்கள் உடலை அங்கேயே விட்டுவிட்டு ஓடித்தப்ப வேண்டி வந்துவிட்டது” என இச் சம்பவத்தின்போது அங்கிருந்த இன்னுமொரு மருத்துவரான பாக்கியராஜ் அவர்கள் கண்கலங்கியபடி கூறுகிறார்.

இறுதியில், மருத்துவர் பிரதீப், அம்புலன்ஸ் சாரதிகள் இருவரின் உதவியுடன் உடலைத் தூக்கி அம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு ஓடவேண்டி ஏற்பட்டுவிட்டது.

“பின்னர் நான் சுகாதார அமைச்சில் எனக்குத் தெரிந்தவர்களைத் தொலைபேசியில் அழைத்து அவர்கள் மூலம் காவற்துறையின் உதவியைப் பெற்று, இரவு 11 மணிபோல் புதையலைச் செய்து முடிக்கவேண்டியிருந்தது. 12 அடி ஆழமாகப் புதைக்கவேண்டியிருந்தும், எங்களால் 8 அடிகளே தோண்டக்கூடியதாகவிருந்தது. நானும் காவற்துறை அதிகாரியும், இரண்டு மருத்துவமனைப் பணியாளர்களின் உதவியுடன், கைகளால் தோண்டி புதையலை முடித்தோம்” என்கிறார் மருத்துவர் பிரதீப்.

“அவர் (சைமன்) ஒரு மருத்துவர், ஒரு மருத்துவ மனையின் நிர்வாகப் பணிப்பாளர், பல தான தருமங்களைச் செய்தவர். வசதியற்ற நோயாளிகளுக்கு இலவசமாகச் சிகிச்சையளித்து வந்த ஒருவர். அவருக்கு இப்படியான நிலைமை ஏற்பட்டிருக்கக்கூடாது” என்று அவர் குரல் தளுதளுக்கக் கூறுகிறார். (TNM News)

Print Friendly, PDF & Email