EnvironmentNewsSri Lanka

மரம் வெட்டும் உபகரணங்களின் இறக்குமதிக்குத் தடை | சிறீலங்கா

ஜனாதிபதி சிறீசேன

மரம் வெட்டும் இயந்திர வாள்கள் போன்ற உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு சிறீலங்கா அரசு விரைவில் தடைவிதிக்கப் போவதாக அறிவித்துள்ளது. சூழல் பாதுகாப்பு காரணங்களுக்காக இன் நடவடிக்கையை எடுக்கவிருப்பதாக ஜனாதிபதி சிறீசேன இன்று அறிவித்துள்ளார்.

“மக்கள் விரும்பினால் மரத் தளபாடங்களை இறக்குமதி செய்துகொள்ளலாம். ஆனால் காடுகளை அழித்து தளபாடங்களை இனிமேல் செய்துவிட முடியாது” என அவர் மேலும் கூறினார்.

வில்பத்து வன அழிப்பு

பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற ‘உலக சூழல் நாள் 2019’ வைபவத்தில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டு பேசும்போது ” வளி மாசடைதலைக் குறைக்க வேண்டுமானால் தக்கவைக்கக்கூடிய காடுகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். நாம் இந்நடைமுறையைத் தொடர்ந்து 10 வருடங்களுக்குக் கடைப்பிடிப்போமானால் காட்டின் அடர்த்தி தற்போதுள்ள 28% த்திலிருந்து 32% த்துக்கு அதிகரித்துவிடும்.

சில மாதங்களுக்கு முன்னர் நான் குருனாகலையில் ஒரு மரணச் சடங்கிற்குச் சென்றிருந்தேன். வறுமையான தோற்றத்தோடு ஒரு வயோதிபர் என்னை அணுகி ‘ஐயா, நீங்கள் தானே சுற்றுச் சூழல் அமைச்சர்?’ என்று கேட்டார். ஆம் என்றேன். தொடர்ந்தும் அவர் ‘நீங்கள் காடுகளையும், சூழலையும் பாதுகாக்கக் கடுமையாக உழைக்கிறீர்கள், இல்லையா? என்றார். ‘ஆமாம், என்னுடைய அனுமதியின்றி ஒருவரும் காடுகளை வெட்டிக்கொள்ள முடியாது’ என்றேன். அதற்கு அவர் ‘ நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான மரங்களை இயந்திர வாள்களினால் அறுத்து விழுத்துவது சாதாரண விடயமாச்சே. இப்படி மரங்களை வெட்டுவதை நீங்கள் நிறுத்த விரும்பினால் இவ் விடயத்தில் நீங்கள் ஏதாவது செய்தாக வேண்டும்’ என்றார். இப் பெருமகனின் ஆலோசனையின் பின்னர் தான் நான் ‘இயந்திர வாள்களைப் பாவிக்க விரும்புபவர்கள் அரச அதிபர்களிடம் பதிந்து  அதற்கான உத்தரவுப் பத்திரத்தை முன்கூட்டியே பெறவேண்டுமெனக் கட்டளை பிறப்பித்தேன். இதன் நீட்சியாகவே இயந்திர வாள்களின் இறக்குமதியைத் தடைசெய்யவும் அதே வேளை மரப்பண்ட உற்பத்தி நிலையங்களைக் கட்டுப்படுத்தவும் உத்தேசித்துள்ளேன்.

சிறீலங்காவின் அழிக்கப்படும் வனங்கள்

காடுகள் அழிக்கப்படும் விவகாரம் குறித்து சுற்றுச் சூழல் அமைச்சோ, வனத் திணைக்களமோ, மத்திய சூழல் அதிகாரசபையோ என்னிடம் எதையும் தெரிவிக்கவில்லை. இவ் வயோதிபர் தான் எனக்கு முதன் முதலில் தெரிவித்தார். இயந்திர வாள்களின் பதிவு தொடங்கப்பட்டதும் நாடு முழுவதும் மூன்றே வாரங்களில் 82,000 வாள்கள் பதிவு செய்யப்பட்டன.

ஜனாதிபதியாகப் பதவியேற்றதிலிருந்து நான் வாரத்துக்கு இரு தடவைகள் உலங்கு வானூர்தியில் நாட்டின் வனங்களைப் பார்த்து வருவதுண்டு. அகன்ற பச்சைப் பசேலென்ற வனங்களும், ஆறுகளின் நீல வர்ண நீரும், நீல வானமும் எங்கள் நாட்டைச் சொர்க்கமாக வைத்திருக்கின்றன. கடந்த வாரம் நான் இந்தியா சென்றிருந்தபோது டெல்ஹியில் பிரதமர் மோடியுடன் உலங்கு வானூர்தியில்  சென்ற போது வரண்ட, மஞ்சள் நிற மண்ணையே பார்க்க முடிந்தது. புது டெல்ஹியில் வெப்பநிலை 47 பாகை செண்டிகிரேட் அதே வேளை கொழும்பில் 30 பாகை. புது டெல்ஹியில் வளிச் சுத்தம் 113 துணிக்கைகள், லாஹூர், பாகிஸ்தானில் 114, வாஷிங்டனில் 8, கொழும்பில் 32. கொழும்பை நாம் வாஷிங்டன் அளவிற்குக் கொண்டுவர வேண்டும். ” என ஜனாதிபதி சிறீசேன தன் பேச்சின் போது தெரிவித்தார்.