HealthLIFE

மன வலியும் மன வலிமையும்!

மன வலியும், மன வலிமையும்

Dr.Bala

இன்று எம் சமூகத்தில் பல்வேறு துயர நிகழ்வுகள் மனத்துயரங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமையால் நிகழ்கிறது. இவற்றிற்கு பல சமூக காரணிகளும் தனிநபர் குறைபாடுகளும் காரணங்களாக உள்ளன. அதனை முகம் கொடுப்போர் தாம் அனுபவிக்கும் வேதனைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் தம்மையும் தம் உயிரான பிள்ளைகளையும் மாய்த்துக் கொள்கின்றனர். இத் துயர நிகழ்வுகளின் மன வலிகளைக் தாங்கி வாழத் தேவையான மனவலிமையை எங்கிருந்து பெறுவது? துயரங்களை ஏற்படுத்தும் காரணிகளை மாற்றுவது அரசும் சமூகமும் மேற்கொள்ள வேண்டிய பெருங்காரியம். மனவலிமையை பெற்றுக் கொள்வதும் வாழ்வைத் தொடர்வதும் இயலுமான காரியம். முயற்சி செய்து பார்ப்போம்.
 
அனைத்து உயிரினங்களின் வாழ்க்கையிலும் இழப்பு, இறப்பு, முதுமையடைதல், நோய்வாய்படுதல் என்பன உயிரினங்கள் தோன்றிய காலம் தொட்டு நிகழ்கிறது. உயிர் வாழ்தலை உறுதிப்படுத்தும் பொருட்டு பரிணாமரீதியாக இவற்றை முகம் கொடுப்பதற்கான வல்லமையும் எமக்கு வாய்க்கப் பெற்றிருக்கிறது. அதனை சரிவர பேணி வளர்க்காமையே துயரங்களை தாங்கிக் கொள்ளமுடியாது தவறான முடிவுகளுக்கு பலரை இட்டுச் செல்கிறது. பால்ய பருவங்களில் ஏற்பட்ட அனுபவங்கள் கண்ட சம்பவங்கள் பார்த்த படித்த கதையுரையாடல்கள் எம்மை பலவீனபடுத்தி விட்டிருக்கக் கூடும். இதனைப் புரிந்து கொண்டால் எம்மால் மனவலினமயை இழக்காதிருக்கும் வகையில் சிந்தனைகளை மாற்றிக் கொள்ள முடியும்.
 
மனிதருடைய துயரங்களுக்கு மூன்று காரணிகள் உண்டு.
உடலில் ஏற்படும் மாற்றங்கள்,
இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் விளைவுகள்,
நாம் உருவாக்கிக் கொண்ட சமூக உறவகளால் ஏற்படும் பாதிப்புகள்.
முதல் இரண்டு காரணிகளாலும் ஏற்படும் துயரங்களை எதிர் கொள்வதில் நாம் பக்குவப்பட்டிருக்கிறோம். நாம் உருவாக்கிக் கொண்ட சமூக உறவுகள் ஏற்படுத்தும் பாதிப்புகளைச் சீர்செய்வதிலும் துயரங்களை கடந்து செல்வதிலும் பெரும் இன்னல்களையும் இழப்புகளையும் எதிர்நோக்க நேரிடுகிறது. முயற்சிகளும் தோல்வியடைவதால் ஏற்படும் இயலாமை எம்மை நோகடித்து துயர முடிவுகளுக்கே இட்டுச் செல்கிறது. போராட்டம் தானே வாழ்க்கை என்பார்கள். எனினும் தாங்கொணாத் துயரங்களைத் தாங்குவது எப்படி? தையரியமாக இருக்க வேண்டுமென எவ்வளவு முயன்றாலும் எம்மையும் மீறி எங்கிருந்தோ வரும் துயரம் சிலரை அடித்துக் கொண்டு போய்விடுகிறது. எனினும் பலரால் இதுவும் கடந்து போகும் என்று உறுதியாக காலூன்றி நிற்கவும் முடிகிறது. இவர்களால் இது எவ்வாறு சாத்தியமாகிறது?
 
துயரமான நினைவுகள் பற்றிய தவறான சிந்தனைகளினால் மனம் மேலும் வலிமை இழக்கிறது. இத்துயரம் மீளமுடியாத நிரந்தரமானது என்றும் இதனால் வாழ்வின் எல்லா அம்சங்களும் துயரம் நிறைந்ததாக மாறிவிட்டதென்றும்
இத்துயர நிகழ்விற்கு தாங்களும் காரணமென்றும் மீண்டும் மீண்டும் ஏற்படும் தவறான சிந்தனைளால் மனம்  வலுவிழந்து போகிறது. எத்தகைய துயரமும் ஆறும் தன்மையுள்ளது, வாழ்வின் ஏனைய பல விடயங்களில் இன்னும் நம்பிக்கையும் மகிழ்வும் அளிக்கும் தருணங்கள் நிறைந்துள்ளது, இந்துயர நிகழ்வு உங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட காரணிகள் காரணமானவை என்ற தெளிவான சிந்தனைய ஏற்படுத்திக்கொள்ளும் போது மன வலிமையை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
 
எமது துயர உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிப்பதன் மூலம் அதன் தாக்கங்களை குறைத்துக் கொள்ள முடியும். துயரம் இரண்டு முறைகளில் மனதைப் பாதிக்கிறது. ஏற்பட்ட இழப்பு,அபகரிப்பு, துரோகம், புறக்கணிப்பு, அநியாயம் போன்றவை நேரடியாக ஏற்படுத்தும் துயரம் ஒரு புறமும் அதன் நிழல் போன்று நான் மிகவும் துயருற்று இருக்கிறேன் என்பதை நினைத்து துயரடைதல், நான் மிகவும் வேதனையுடனும் கவலையுடனும் இருக்கிறேன் என்பதை எண்ணி மேலும வேதனையடைதல், கவலையடைதல் போண்ற சிந்தனைகள் மறுபுறமும் மனவலிமையை சீர்குலைக்கிறது. எமது உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வது இந்த இருவகையிலும் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து துயரங்களிலிருந்து மீள்வதற்கு உதவும்.
 
பல சமயங்களில் துயர நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்கள் உறவுகள் இருப்பினும் தனித்து விடப்படுகின்றனர். என்ன ஆறுதல் சொல்வது என்ற குழம்புவதாலும், ஆதரவளிக்கும் நிலையில் தாம் இல்லை என்று கருதுவதாலும் உறவினர்களும் நண்பர்களும் இவர்களைச் சந்திப்பதைத்  தவிர்க்கின்றனர். இது பாதிக்கப்பட்டவர்களை  மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கிறது. உதவி செய்ய முடியாத போதும் இவர்களுடன் நம்பிக்கை அளிக்கும் வகையில் உரையாடுவது  ஆறுதல் அளிக்கும். வீழ்ந்து விடாமல் தாங்கிக் கொள்ள நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கை ஏற்படுத்தல்   மிகுந்த மனவலிமையை அளிக்கக்கூடும்.
 
 
பலருக்கு கடவுள் நம்பிக்கையும் மனவலியை குறைத்துக் கொள்ள உதவுகிறது. தாங்கள் தனிமையில் இருக்கும் உணர்வை குறைத்துக் கொள்ளவும் ஏதோ ஒரு வகையில் கடவுள் உதவுவார் என்ற நம்பிக்கையில் உயிர் வாழும் வலிமையை பெறவும் உதவுகிறது.
 
துயரமான நிகழ்வுகள் பொருளாதார ரீதியாக ஏற்படுத்தும் தாக்கங்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போன்று பாரிய துயரங்களுக்குள் வீழ்த்துகிறது. அத்தருணங்களில் தேவையான பொருளாதார தேவைகளைப் பெற்றுக் கொள்ள அரசும் சமூகமும் ஆவன செய்தவன் மூலமே நம்பிக்கையளிக்கும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
 
துயரமான ஒவ்வொரு நிகழ்வின் பின்னும் அதிலிருந்து மீள துயருறும் காலம் என்ற இடைவெளியின் தேவையொன்றுள்ளது. உறவுகளின் இழப்பின் பின் இந்த ஆற்றுகைபடுத்தும் இடைவெளியின் தேவையினை பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். தாங்கமுடியாத துயரங்களோடு வாழ வேண்டி வரும் போது அத்தகைய இடைவெளி பெருமளவு உதவும்.
 
துயரத்தின் தாக்கங்கள் நாம் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சுமையோடு மனதை ஆட்கொள்ளக் கூடும். அதனை ஏற்றுக்கொள்வதும் அத்தகைய தருணங்களில் இடைவெளி எடுத்துக்கொள்வதும் அழுகை வரும் பட்சத்தில் அழுகைக்கான நேரமென அதனை ஏற்றுக் கொள்வதும் அவசியமானவையே. அது குறித்து கவலையடையத் தேவையில்லை. ஆற்றுகைப்படுத்தும் படிக்கற்களாக அத்தருணங்களும் அமையும்.
 
மனவலிமையை அதிகரித்து கொள்வது உடல் வலிமையை அதிகரித்துக் கொள்வதற்கு ஒப்பானது. படிப்படியாகவே தொடர்ச்சியான முயற்சியின் மூலம் மன வலிகளைத் தாங்கிக் கொள்வதற்கான பக்குவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். சுய நம்பிக்கையை இழக்காமல் இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையுடன் துயரங்களைத் தாங்கும் மனவலிமையை பெற்றுக் கொள்வோம். பெற்றுக் கொள்ள உதவுவோம்.