மன்னார் காற்றாடி மின்னாலைத் திட்டத்துக்கு எதிராக ஜே.வி.பி. போர்க்கொடி

உள்ளூர் வளங்கள் இந்தியாவுக்குத் தாரவார்க்கப்படுகிறதாம்!

தலைமன்னாரில் காற்றாடி மின்னாலைத் திட்டம்

தலைமன்னாரில் அமையவிருக்கும் காற்றாடி மின்னாலைத் திட்டத்தை இந்தியாவின் அதானி குழுமத்துக்குக் கொடுக்கும் அரசின் உத்தேசத்தை முறியடிக்க ஜே.வி.பி. கங்கணம் கட்டியுள்ளது. மதத் தலைமைகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் ஆகியவற்றைத் தம்மோடு இணைத்து இப் போராட்டத்தை முன்னெடுக்க ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது.

தலைமன்னாரில் அமையவிருக்கும் இத் திட்டத்தில் அதானி குழுமம் $1 பில்லியன் முதலீட்டைச் செய்யவுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் இந்தியாவுக்கு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை முறியடிக்கவும் ஜே.வி.பி. இப்படியான கூட்டணியொன்றுடன் இணைந்து செயற்பட்டிருந்தது. ஒப்பந்தம் முறிக்கப்பட்ட பின்னர் அம் முனையத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பு சீனாவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கோ, அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரம், தீவுப்பகுதி மின்னாலைத் திட்டம் ஆகியன சீனாவுக்கு வழங்கப்படும்போதும் ஜே.வி.பி. எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை.



இந்தியாவுக்கு எதிரான இப்போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக களுத்துறை மாவட்ட ஜே.வி.பி. பா.உ. நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய பயணத்தைத் தொடர்ந்து இலங்கையின் உடனடியான பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வாக $ 1 பில்லியன் கடனை வழங்குவதற்கு நிபந்தனையாக இலங்கையில் முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுக்க இந்தியாவுக்கு இலங்கை அனுமதியளித்திருந்தது எனக் கூறப்பட்டது. ஆனால் தரகுப் பணத்தை வாங்குவதற்காகவே பசில் ராஜபக்ச அத்திட்டங்களை அனுமதித்தார் என்பதுபோன்ற பிரச்சாரங்களை ஜே.வி.பி. இப்போது செய்துவருகிறது.

“பூகோள முக்கியத்துவம் காரணமாக, இந் நாட்டில் தமது பிரசன்னத்தை நிலைநிறுத்திக்கொள்ள இந்தியா முனைகிறது. வெளிநாட்டுச் செலாவணிப் பிரச்சினையைச் சாதகமாகப் பயன்படுத்தி அதானி குழுமத்துக்குத் தலைமன்னாரில் காற்றாலைக்கு இடம் கொடுக்கிறது. இதை நாம் நிறுத்தியேயாக வேண்டும்” என ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இத் திட்டத்திற்கான அனுமதியை அமைச்சரவை வழங்குமெனெ எதிர்பார்க்கப்படுகிறது. 1000 MW மின்வலுவைப் பிறப்பிக்கக்கூடிய காற்றாடியாலையை தலைமன்னாரில் நிறுவதற்கு அதானி குழுமம் முன்வந்துள்ளது. இதற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், இதேபோன்ற இன்னுமொரு திட்டத்தை பூனகரியிலும் நிறுவுவதற்கு அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.