மன்னாரை மக்கோ ஆக்கப்போகும் கஞ்சா அமைச்சர்
மாயமான்
மன்னார் தீவை ஒரு பொழுதுபோக்குத் தளமாக மாற்றி அமெரிக்க டாலர்களினால் அபிசேகம் செய்யப்படும் ஒரு புண்ணிய பூமியாக ஆக்கவேண்டுமென்பது கஞ்சா அம்மையாரின் கனவு. சும்மா சொல்லக்கூடாது ரணில் சரியான ஆளைத்தான் பிடிச்சு வைச்சிருக்கு.
இலண்டன் நாயகி டாயானா கமகே அம்மையார் சமீபத்தில் சுற்றுலா இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இலங்கையை ஒரு கஞ்சா உற்பத்தி / ஏற்றுமதி நாடாக ஆக்கவேண்டுமென்பது அவருடைய நெடுநாட் கனவு. மன்னாருக்கும் கேரளாக் கஞ்சாவுக்கும் உறவு இருப்பதை அவர் எப்படியோ முகர்ந்து பிடித்திருக்கவேண்டும். தற்போது அவரது கண் மன்னார் தீவு மீது விழுந்திருக்கிறது.
மன்னார் தீவில் அதானி குழுமம் 500 மில்லியன் டாலர் செலவில் காற்றாடி மின்சார உற்பத்தி செய்யவிருக்கிறது. இதனால் அங்க வந்து இந்தியன் குந்தப்போறான் என்று அம்மையார் நினைத்திருக்கலாம். அல்லது அம்மையார் தலையணைக்குள் விமல் வீரவன்ச போன்றவர்கள் மந்திரங்களை ஏவியிருக்கலாம். மன்னாரைத் தான் மக்கோ ஆக்குகிறேன் என்று அம்மையார் இப்போது ஆலாய்ப் பறக்கிறார். அதானிக்கு வழங்கப்படும் காணிக்கு அடுத்தாற்போல் இந்த சூதாட்டக் களம் அமையவிருக்கிறதென அம்மையார் சொல்லியிருக்கிறார். (மக்கோ என்பது சீனாவின் கரையோர நகரம். ஆசியாவின் ‘லாஸ் வேகாஸ்’ என வர்ணிக்கப்படும் இது ஹொங்க் கொங்கைப் போல சுயாதீன வர்த்தக வலையமாக்கப்பட்ட சூதாட்டம் போன்ற கேளிக்கை மையங்கள் மற்றும் பெருவணிக கடைத்தெருக்கள் நிறைந்த இடம். சுற்றுலாவாசிகள், பெரும்பாலும் இந்தியர்கள் இங்கு படையெடுக்கிறார்கள்)
கேளிக்கைகளுக்குப் பேர் போன அம்மையாருக்கு முன்னர் பின்னர் மன்னாரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மன்னாரில் இலுமனைட் கனிமவளம் கொட்டிக்கிடக்கிறது. ஏற்கெனவே கனிமங்களுக்காக ஆறுகளையும் கடல்களையும் தோண்டிக்கொண்டிருக்கும் சீனாவை அதானிக்கு அருகில் குடியமர்த்துவதில் அம்மைக்கு அலாதிப் பிரியம். அம்மைக்கு விரைவில் இலவச சீன உல்லாசப்பயணத்துக்கான அழைப்பு வரலாம்.
பாவம் மன்னார் மக்கள். சுனாமி என்றாலென்ன சுதந்திரப் போரென்றாலென்ன அடி வாங்குவது அவர்கள் தான். இரண்டுமே அங்கிருந்த ஆம்பிளைகளை அள்ளிக்கொண்டு போனதற்குப் பிறகு விட்டு வைத்த பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் தங்கள் குஞ்சு குருமான்களை வளர்த்தெடுத்து ஆளாக்குவதற்குள் அங்கு சூதாட்ட நிலையங்களுக்கு அம்மை திட்டம் தீட்டிவிட்டது.
அம்மையின் இந்த அறிவிப்பிற்கு எங்கள் மாட்சிமை தங்கிய மன்னார் சிற்றரசர் அடைக்கலநாதர் இதுவரை வாய்திறந்ததாகத் தெரியவில்லை. அவர் எப்போ திறந்தவர் என்று நீங்கள் கேட்கலாம். சம்பந்தர் ஐயாவைப் பதவிநீக்குவதில் ஆள் படி பிசி போல. ஆனால் அங்குள்ள பெண்தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பலர் அம்மையின் அறிக்கைக்குப் பலத்த கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். மன்னார் மாவட்டத்தில் அதானிக்கு காணிவழங்குவதிலிருந்து, இல்மனைட் கனிம அகழ்வு வரை அனைத்து விடயங்களையும் இப்பெண்கள் எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பியிருக்கிறார்கள்.
மன்னார் மாவட்டத்தில் இந்து, கத்தோலிக்கம், இஸ்லாம் ஆகிய மூன்று மார்க்கத்து மக்களும் வாழ்கிறார்கள். அவர்கள் எவரையும் ஆலோசிக்காது இத்திட்டங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அம்மையின் இந்த சூதாட்ட வலயத்துக்கும் இங்கு காணி வழங்கப்படவுள்ளது. தமிழ் மக்களின் கலாச்சாரத்தை அழிப்பதற்கான முதன்மையான வேலைத்திட்டம் இது என்பது இம்மாவட்ட மக்களின் குற்றச்சாட்டு.
மன்னார் மீன்பிடி மட்டுமல்லாது நெல்வயல் வளங்களையும் கொண்ட பிராந்தியம். அதைப்பற்றி தமிழ் அரசியல்வாதிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை. அவர்களின் கால்கள் மன்னார் மண்ணில் படுவதற்கும் வாய்ப்பேயில்லை. மிதந்தால் கடல் ஊர்ந்தால் கார் என்பது அவர்கள் வாழ்க்கை. எனவே வழக்கம்போல பெண்கள் தான் போராடவேண்டும்.
அம்மையின் திட்டம் வெற்றி பெற்றால் மன்னார் மக்கோவாகிவிடும். மன்னார் வயல்களில் நெல்களுக்குப் பதிலாக கஞ்சா பயிரிடப்படும். அதன் நடுவே அம்மை அமெரிக்கத் தூதுவருக்குப் பார்ட்டி வைத்துப் படமெடுப்பார். பார்த்து மகிழ்வோம். எல்லாம் அம்மானின் தவறு.