India

மனு தர்மம் விவகாரம் – தொல் திருமாவளவன் மீது வழக்குத் தாக்கல்


மதக்குழுக்களிடையே பகைமையைத் தூண்டும் விதத்தில் நடந்துகொள்வதற்காக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மீது சென்னை பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாரதீய ஜனதாக் கட்சியின் சட்டப் பிரிவின் மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் இணையவழி மூலம் பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து இவ் வழக்குப் பதிவாகியுள்ளது.

‘பெரியாரும் இந்திய அரசியலும்’ என்ற பொருளில் செப்டம்பரில் நடைபெற்ற இணையவழிக் கருத்தரங்கின்போது திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கள் பல சமூக ஊடகங்களிலும் காணொளி வடிவில் பரவலாக வலம் வந்தது. அதில் அவர் ” பெண்களைப் பற்றிச் சனாதன தர்மம் என்ன சொல்கிறது? ‘கடவுள் பெண்களை விபச்சாரிகளாகவே படைத்தார்’ என இந்து தர்மம், மனு தர்மம் ஆகியன கூறுகின்றன என அவர் அதில் கூறியிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க. ஆதரவாளர்கள், ‘இது பெண்களை இழிவுபடுத்துகிறது’ எனத் தமது கண்டனங்களைத் தெரிவித்தார்கள். அதற்கு தொல் திருமாவளவன் ” நான் பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் அதைத் தெரிவிக்கவில்லை மாறாக அவர்களின் விடுதலையை முன்வைத்தே அக் கருத்தைத் தெரிவித்திருந்தேன் ” எனப் பதிலளித்திருந்தார். இதைத் தொடர்ந்து அக்காணொளி யூ-டியூப் தளத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்டது.

வெள்ளியன்று, பா.ஜ.க. தலைவர் குஷ்பு சுந்தர் அவர்களும் கட்சித் தலைமயகத்திலிருந்து விடுத்த அறிக்கையில் பெண்களை அவமதிதமைக்காகத் திருமாவளவன் மன்னிப்புக் கோரவேண்டுமெனவும் கேட்டிருக்கிறார்.



இதற்குப் பதிலளித்த தொல் திருமாவளவன், “பெண்கள் துன்புறுத்தலுக்கும், துஷ்பிரயோகத்துக்கும் ஆளாக்கப்பட்டு வருகிறார்கள் என்பது எமக்குத் தெரியும். அதற்கு மனு தர்மமே காரணம் என எமது முன்னோர்கள் தெளிவுபடுத்தி வந்துள்ளனர். அம்பேத்காரும், பெரியாரும் மனுஸ்மிருதியைத் தீயிட்டுக் கொழுத்தினர். ஆணாதிக்கத்தையும், அடக்குமுறையையும் இந்நூல் முன்னிலைப்படுத்துவதாக இத் தலைவர்கள் குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர். அரசியல்வாதிகள் எனது கருத்துக்களைத் தமது நலன்களுக்காகப் பாவிக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

மனு தர்மத்துக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் மக்கள் ஒன்றிணைந்து தமது எதிர்ப்புக்களைத் தெரிவிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.