News & AnalysisSri Lanka

மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பாக ஆதாரங்களைத் திரட்ட ம.உ.ஆணையாளர் அலுவலகம் தயாராகிறது

சட்ட ஆலோசகர்களுட்படப் 12 பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்

நேற்று நடைபெற்று முடிந்த ஐ.நா.மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தரும் ஆணையின் அடுத்த கட்டமாக இலங்கையின் செயற்பாடுகளைக் கண்காணிக்க சட்ட ஆலோசகர்களையும் விசாரணையாளர்களையும் நியமிக்கவுள்ளதென மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் அறிவித்திருக்கிறது.

இந்நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து செயற்படவென 12 பணியாளர்களையும் அது நியமிக்கவுள்ளது. நேற்றய தீர்மானத்தின்போது ஆணையாளர் அலுவலகத்தின் மேற்படி செயற்பாடுகளுக்காக 2.8 மில்லியன் அமெரிக்க டாலர்களை சபை ஒதுக்கியிருந்தது.

சர்வதேச குற்றவியல், நீதி, விசாரணை, வழக்குப் பதிவுகள் ஆகிய விடயங்களில் அனுபவம் வாய்ந்த சட்ட ஆலோசகர்கள் தகவல், தடயங்கள் சேகரிப்பாளர், ஆய்வாளர், மனித உரிமைகள் அதிகாரிகள், பாதிக்கப்படவர்களுக்கன ஆறுதல் சேவைகளை வழங்குபவர்கள் எனப் பலரும் இதில் அடங்குவர்.

செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 48 வது அமர்வில், இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையொன்றை ஆணையாளர் அலுவலகம் கொடுக்கவேண்டுமென இத் தீர்மானம் கூறுகிறது. அத்தோடு அதன் எழுத்து மூலமான அறிக்கை மார்ச் 2022ல் நடக்கவிருக்கும் 49 வது அமர்வின்போது சமர்ப்பிக்கப்படவேண்டும். பொறுப்புக்கூறலை மேற்கொள்வதற்கான தேர்வுகளுடன் கூடிய விரிவான அறிக்கை செட்டம்பர் 2022 இல் நடைபெறவிருக்கும் 51வது அமர்வில் சமர்ப்பிக்கப்படவேண்டுமென தீர்மானம் தெரிவிக்கிறது.

ஆணையாளர் அலுவலகத்தினால், இலங்கையில் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகச் சேகரிக்கப்படும் தடயங்களும், தகவல்களும் பிற்காலத்தில் மேற்கொள்ளப்படக்கூடிய பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள், மற்றும் பதியப்படும் வழக்குகளுக்கு ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்படலாமெனக் கூறப்படுகிறது.