மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் (OHCHR) இலங்கை மீதான தகவல் சேகரிப்பை ஆரம்பித்தது
மார்ச் 23, 2021 அன்று, ஐ.நா.மனிதக உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான 46/1 இன் பிரகாரம், இலங்கையின் பொறுப்புக்கூறலை முன்னகர்த்தும் நோக்குடன், அது இழைக்கும் மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்களுக்கான ஆதாரங்களைச் சேகரித்து, பகுத்தாய்ந்து சபைக்குச் சமர்ப்பிப்பதற்கான பணிகளை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் ஆரம்பித்துள்ளது.

இப்படிச் சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு அடுத்து வரும் காலங்களில் பொது வழக்காடு மன்றங்களிலோ அல்லது அங்கத்துவ நாடுகளின் சட்ட அங்கங்களிலோ, பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கமுடியுமென ஆணையர் அலுவலகம் கருதுகிறது.
இதற்கான ஆணையை ஆணையாளர் அலுவலகத்துக்கு தீர்மானம் 46/1 வழங்கியிருந்தது மட்டுமல்லாது இப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காகவும், ஆணையாளர் அலுவலகத்தின் செயற்பாடுகளைப் பலப்படுத்துவதற்காகவும் மேலதிக நிதி ஒதுக்கீட்டையும் அங்கத்துவ நாடுகள் செய்திருந்தன.
அத்தோடு, எதிர்வரும் 48 ஆவது அமர்வில் ஒரு வாய்வழி அறிக்கையையும், 49 ஆவது அமர்வில் எழுத்து மூலமான அறிக்கையையும் சமர்ப்பிக்கும்படி மனித உரிமைகள் ஆணையம் ஆணையாளர் மிஷெல் பக்கெலெக்கு பணித்திருந்தது. இப் பணிப்பின் பிரகாரம் ஆணையாளர் அலுவலகம் தனது பணிகளை ஆரம்பித்துள்ளது.
இதற்கென நியமிக்கப்பட்ட குழு, ‘இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம்’ (Sri Lanka accountability project) என்ற பெயரில் ஜெனிவாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. (செய்தி மூலம்: கொலொம்பொ கசெட்)