மனித உரிமைகள் ஆணையர் அலுவலக தகவல் சேகரிக்கும் குழு இலங்கை வர அனுமதி மறுப்பு
தொழில்நுட்பத்தைப் பாவித்து தகவல் சேகரிப்பு, ஆய்வுகள மேற்கொள்ள ஆணையர் அலுவலகம் தயாராகிறது
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானம் 46/1 இற்கிணங்க ஆணையர் அலுவலகத்தின் தகவல் சேகரிக்கும் குழு இலங்கை வருவதற்கு ஜூலை 18, 2022 அன்று இலங்கை அரசு அனுமதிதர மறுத்துவிட்டதாக ஆணையர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
போரில் பாதிக்கப்பட்டவர்களௌக்கும் அவர்களது உறவினருக்கும் தேவையான நீதியையும் நிவாரணங்களையும் வழங்குவதற்கு இவ் விசாரணைகளும் தடயங்களும் அவசியமெனவும் அவற்றைச் சேகரிக்க ஐ.நா. தீர்மானம் 46/1 இன் 6 ஆவது கட்டளை அனுமதி தருகிறது எனவும் ஆணையர் அலுவலகம் கூறுகிறது. இதன் நிமித்தம் குழுவொன்று நியமிக்கப்பட்டு ஜூளை 8 அன்று இலங்கை அரசிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் இலங்கை அரசு ஜூலி 18 அன்று அதற்கான அனுமதியை மறுத்துவிட்டது. அப்போது ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக இருந்தார். ஆனாலும் இலங்கை அரசின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என ஆணையர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
இத் தடயச் சேகரிபு போர்க்குற்றங்கள் என்ற போர்வையில் இலங்கையின் பாதுகாப்பு படைகளைத் தண்டிக்க உதவலாம் என்ற காரணத்துக்காக இலங்க அரசு அதற்கான அனுமதியை மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
இருப்பினும் ஆணையர் அலுவலகம் ஏற்கெனவே சேகரித்து வைத்திருக்கும் தடயங்களைப் பகுப்பாய்ந்து வைத்திருப்பதுடன் இதர அமைப்புக்களிடம் பெறப்பட்ட தகவல்களையும் இணைத்து செயற்படு திட்டமொன்றைத் தீட்டியிருக்கிறது. இதுவரை இரண்டு அமைப்புகள் கொடுத்த தகவல்களை ஆணையர் அலுவலகம் தனது தகவல் களஞ்சியத்தில் இணைத்திருக்கிறது. மேலும் பல அமைப்புகளது தகவல்களைச் சேகரிக்கப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறும் வகையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகம் ஆகியவற்றின் பின்னால் அரச அதிகாரிகள் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்க எந்த அரசாங்கமும் முன்வரவில்லை என்பதனால் இவ் விசாரணைகளை மேற்கொள்வதற்கான அதிகாரத்தை 46/1 தீர்மானம் மூலம் ஐ.நா.மனித உரிமைகள் சபை ஆணையர் அலுவலகத்துக்கு வழங்கியிருந்தது. அத்தோடு இந் நடவடிக்கையை மேற்கொள்வதற்குத் தேவையான பண உதவியும் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய இலங்கைக்கு தடயம் சேகரிக்கும் ஒரு குழுவை அனுப்புவதற்கு ஆணையர் அலுவலகம் அரசாங்கத்தின் அனுமதியைக் கோரியிருந்தது.
இந் நிலையில் ஆணையர் அலுவலகம் தொழில்நுட்பத்தைப் பாவித்து (e-delivery platform) தொடர்ந்தும் தகவல்களையும், தடயங்களையும் சேகரித்து தனது களஞ்சியத்தில் தொடர்ந்தும் இணைத்து வருகிறது. இத் தொழில்நுட்பத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களைச் சரிபார்த்தல், ஒப்பீடு செய்தல், ஒழுங்கமைத்தல், தேடுதல், எண்ணற்ற தகவல்களை விரைவாக ஆராய்தல், தகவல்களை மின்னியல் வடிவங்களில் சேகரித்தல் போன்ற விடயங்கள் சாத்தியமாகும் எனவும் இவற்றைப் பாவித்து இலங்கை அரசின் பொறுப்புக்கூறலை நிர்ப்பந்திக்க முடியுமெனவும் ஆணையர் அலுப்வலகம் நம்புகிறது.
இத் தகவற் சேகரிப்பு நடைமுறை பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டிருக்குமெனவும், தவறுகளை இழைத்த அனைத்து தரப்புகளையும், அவரவர் செயற்பட்ட இடங்கள், அவரவர் சார்ந்திருந்த அமைப்புகள், பாலியல் வேற்பட்டுகள், வயது வேறுபாடுகள் ஆகியவற்றை அனுசரித்தும் செயற்படுத்தப்படுமெனவும் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.