‘மனிகே மகே ஹிதே’ யொஹானி டி சில்வா மீதான தமிழரின் வெறுப்பு நியாயமானதா?
சிவதாசன்
‘மனிகே மகே ஹிதே’ பாடல் மூலம் உலகப் புகழ் பெற்ற யோஹானி டிலோகா டி சில்வா மீது சில நாட்களாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டும் அதற்குப் புலம்பெயர் வாழ் தமிழர்களே காரணம் எனவும் இலங்கை ஊடகங்களில் செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.

யொஹானியின் தந்தை மேஜர் ஜெனெரல் பிரசன்னா டி சில்வா ஒரு போர்க்குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இலங்கை இராணுவத்தினர். இறுதிப் போரின்போது 55 வது படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய அவர் பொது மக்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நிகழ்த்தியதன் மூலம் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களின் படுகொலைகளுக்குக் காரணமானவர் எனக் கூறப்படுகிறது. இறுதிப் போரின்போது அட்டூழியங்களைப் புரிந்த பல படைப் பிரிவுகளில் 55 வது படைப் பிரிவு மிகவும் பிரபலமானது. வன்னியிலிருந்த மருத்துவமனையொன்றின்மீது, ஜனவரி 29 முதல் பெப்ரவரி 4 வரை தினமும் இடைவிடாமல் குண்டுத்தாக்குதல்களை நிகழ்த்தியது இந்த 55 ஆவது படைப்பிரிவு என்பதற்கான ஆதாரங்கள் ஐ.நா.விடம் இருக்கிறது.
சரி அதற்கும் அவரது மகள் யோஹானிக்கும் என்ன சம்பந்தம் என்பது சிலரது வாதம். அவர் தனது கலை, இசைத் திறமைகளின் மூலம் முன்னுக்கு வந்தவர் எனவே அவர்மீது குற்றம்சுமத்துவது தவறு எனச் சிலர் வாதாடுகிறார்கள். புலம் பெயர் தமிழர்களே இப்படியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் என்பது சிலரது குற்றச்சாட்டு.

யோஹானியின் இசைத் திறமை போற்றப்பட வேண்டியது. உலகில் அவர் பெற்றுக்குவித்து வரும் புகழ் கெளரவிக்கப்பட வேண்டியது. அவருக்கும் இனவாத அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்பது உறுதிப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் நானும் அதற்கு உடன்படுவேன். ஆனால் கிடைக்கும் செய்திகள் அப்படியாக இல்லை.
டிசம்பர் 5, 2020 இல் யோஹானி பாடி வெளியிட்ட ‘Chanuka Mora-Rawwath Dasin’ என்ற இசைக் காணொளி ஒன்று அவரது தந்தை நாட்டைக் காப்பாற்றுவதற்காக போராடப் போனது பற்றியும் பயங்கரவாதிகளை அழித்து வடக்கைத் தெற்குடன் இணைப்பதில் அவர் காட்டிய வீரப்பிரதாபங்கள் பற்றியும், புகழ்ந்து பாடுவதாக அமைகிறது. போர்க்களத்தின் இடிபாடுகளிடையே நின்று அவர் பாடுவதாக அமைந்த இப்பாடல் இப்போரினால் மரணித்த மக்களைப் பற்றி எதுவும் கூறவில்லை. “You were fighting terrorists,” , “You are my hero and I worship you with both of my hands on my head.” என அவர் தன் தந்தையைப் போற்றிப் பாடுகிறார். தந்தை போர்க்களம் சென்றபின் தனது குடும்பம் எதிர்கொண்ட தனிமை, வெறுமை பற்றியே பேசுகிறது அப் பாடல். “Dear dad, my hero; this is my tribute to you” என்று யொஹானி இந்த யூ-டியூப் காணொளியின் அடிக்குறிப்பொன்றில் குறிப்பிடுகிறார். இன்றுவரை இக்காணொளி 4.4 மில்லியன் தடவைகள் பார்க்கப்பட்டிருக்கிறது.
இப் பின்னணியில் பார்க்கும்போது யொஹானியின் இசைப் பிரபலத்துக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை எனக் கூறமுடியாது. போரின் பின்னான சமாதான காலத்தில் ஒரு வகையான இரை மீட்பு (reflections) ஆக மனித அழிவுகளைக் கண்டிக்கும் வகையில் இப் பாடல் அமைந்திருந்தால் ஓரளவு ஏற்றுக்கொண்டிருப்பேன். இது முற்றிலும் தந்தையைப் புகழ்வதாகவே அமைகிறது. தந்தையின் குண்டுகளுக்கு இரையாகிய அப்பாவித் தமிழர்களது குடும்பங்கள் யோஹானியின் இப் பாடலினால் வேதனையுறுவதைத் தவிர்க்க முடியாது. அது மனித இயல்பு.
போரில் வெற்றி பெற்ற ஒரு இனத்தின் பிரதிநிதியாக, அப்போரை வெல்வதற்குக் காரணமாகவிருந்த ஒரு வீரரின் மகளாக, ஒரு சிங்கள இனப் பெண்ணாக அவர் பெருமைப்படுவதற்கும், தன் பெருமையைப் பறைசாற்றுவதற்கும் அத்தனை உரிமைகளும் உண்டு. அதே வேளை அப் பெருமை கூடவே கொண்டுவரும் விமர்சனங்களை எதிர்கொள்ளவும் அதற்கான பதில்களைத் தரவும் அவருக்கு உரிமையும் உண்டு.
‘மனிகே மஹே ஹிதே’ இசைக் காணொளி வெளிவந்தபோது யொஹானியின் அப்பாவியான குழந்தைத் தன்மையான முகமும், பாடிய பாங்கும் கொள்ளை கொண்ட பல்லாயிரக்கணக்கான ரசிகர்களில் தமிழர்களும் அடங்குகிறார்கள். அவரது வெற்றிக்குப் பின்னால் சதீஷன் என்ற தமிழரின் பங்கும் இருக்கலாம். ஆனால் அவரது முகமே அவரை உலக மேடைகளில் ஏற்றி வருகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு இனவழிப்புப் போராட்டத்தில் தன் தந்தையின் கரங்களில் இரத்தக்கறை படியவில்லை, மாறாக வீரப்பிரதாபத்தையே அவர் முடியாகச் சூடிக்கொண்டிருக்கிறார் என்று யொஹானி நம்புவாராக இருந்தால் அவர் மீதான தமிழர்களின் விமர்சனத்தையும் ஏற்றுக்கொண்டேயாவேண்டும்.

போரின்போது யொஹானியின் தந்தை வழிநடத்திய 55 ஆவது படைப்பிரிவு செய்த அட்டூழியங்கள் பற்றிப் பேசுவதோ அல்லது அவர் ஒரு போர்க்குற்றவாளி என நிரூபிப்பதோ இக்கட்டுரையின் நோக்கமில்லை. ஆனால் அவரது போர் ஈடுபாட்டைப் புகழும் ஒருவரை அவரது இசைத் திறமைக்காகப் பாராட்டுவது பற்றி கொதிக்கும் தமிழர்களைக் குற்றம் சாட்டுவது தகுமா என்பதே எனது கேள்வி. கலை வேறு, அரசியல் வேறு என்று தத்துவம் பேசிக்கொண்டு வருபவர்கள் பிரபல அமெரிக்க எழுத்தாளர் மார்க் ருவெய்ன் அமெரிக்க இந்தியப் பூர்வகுடிகளை இகழ்ந்து பேசும் ஒருவராக இருந்தமைக்காக அவர் இன்றுவரை கண்டிக்கப்பட்டு வருவதைக் கொஞ்சம் கவனிக்கவேண்டும். அதே போலத்தான், முத்தையா முரளீதரனின் விவகாரமும்.
இலங்கை அரசு கொன்றொழித்த பல்லாயிரக்கணக்கான மக்களின் பலிபீடங்களில் நின்று அவற்றில் களமாடிய ஒருவரைப் புகழ்ந்து பாடிப் புகழ்சேர்ப்பது மட்டுமல்லாமல் உலக அரங்குகளில் அவற்றை நியாயப்படுத்தும் ஒரு war ambassador ஆக, யொஹானியை இலங்கை அரசு பாவிப்பதற்கு அவர் துணைபோவதாகவே எனக்குப் படுகிறது. இன நல்லிணக்கத்துக்காக யொஹானியின் கலை பாவிக்கப்படுமாகில் அவரைக் கொண்டாடுவதில் நான் முன்னிற்பேன்.
ஒருவரின் மனத்தின் காயங்களை மீண்டும் கிளறும் ஒரு முயற்சிக்கு கலை எனப் பெயரிட்டு அதை ஆராதிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ‘மனிக்கே மஹே ஹிதே’ அப்படியானதொரு பாடலாக இல்லாதிருக்கலாம் ஆனால் அதைப் பாடியவர் தன் எண்ணத்தைத் தூய்மைப்படுத்தும் வரை அவரைத் தமிழர்கள் கொண்டாடாமல் இருப்பதைக் குற்றம்காண முடியாது. (சில படங்கள்: தமிழ் கார்டியன்)