மனங்களை அறிவதில் ஆண்களைவிடப் பெண்கள் கெட்டிக்காரர் – விஞ்ஞானம் சொல்கிறது!


மனங்களை அறிவதற்கு ஒரு புதிய முறையொன்றை கார்டிஃப் (வேல்ஸ்) இலுள்ள பாத் பலகலைக்கழகம் மற்றும் லண்டனிலுள்ள உளவியல் நிபுணர்கள் சேர்ந்து உருவாக்கியுள்ளார்கள். இம் முறையின்படி மற்றவர்கள் என்ன சிந்திக்கிறார்கள் என்பதை ஒருவர் அறிந்துகொள்வதை இலகுவாக்குவதே அவர்களது நோக்கம். இதன் மூலம் அவர்கள் அறிந்துகொண்டது ஆண்களை விடப் பெண்கள் மற்றவர்களது மனநிலைகளை அதிகம் உணர்ந்து கொள்கிறார்கள் என்பதே.

உளவியலில் மற்றவர்களது மனங்களை அறிந்துகொள்ளும் (mind reading) முறையை ‘மனநிலைப்படுத்தல்’ (mentalising) என்பார்கள். நாங்கள் ஒருவருடன் பேசிகொண்டிருக்கும்போது அவர் சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல் அல்லது சொல்ல விரும்பாமல் இருக்கும்போது அவரது அங்க அசைவுகள் மூலம் அவரது மனதில் இருப்பதைக் கிரகித்துவிடும் (எடை போடும்) தன்மையை மனநிலைப்படுத்தல் எனக்கூறலாம்.

பிறரது மனங்களை அறிந்துகொள்ளும் ஆற்றல் எல்லோரிடத்திலும் உண்டு எனவும் சிலருக்கு இது மற்றவர்களை விட அதிகம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த ஆற்றல் குறைவாக இருப்பவர்கள், குறிப்பாக ஆட்டிசப் பாதிப்புள்ளவர்களின் குடும்பத்திலுள்ளவர்களுக்கு இவ்வாற்றல் அதிகம் தேவைப்படுகின்றது. பேசும் ஆற்றலை இழந்தவர்களின் மனநிலைகளை உணர்வது மிகவும் சவாலான விடயமாகும். அப்படியானவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காகவே இவ்வணுகுமுறையை உளவியலாளர் விருத்தி செய்துள்ளார்கள்.

பாத் பல்கலைக்கழக உளவியலாளர்கள் உருவாக்கிய இந்த ‘மனதை அறிந்து கொள்ளும்’ பரிசோதனையை அவர்கள் பிரித்தானியாவிலுள்ள, ஆட்டிசப் பாதிப்புள்ளவர்கள், பாதிப்பில்லாதவர்கள என மொத்தம் 4,000 பேரில் செய்துபார்த்தார்கள். விளைவு? மற்றவர்கள் மனங்களில் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பெண்கள் ஆண்களைவிடத் துரிதமாக அறிந்துவிடுகிறார்கள். அதே வேளை, ஆட்டிசத்தால் பாதிக்கப்படுபவர்கள் சமூக ஊடாடல்களில் எதிர்கொள்ளும் சவால்களையும் இப் பரிசோதன உறுதிப்படுத்தியுள்ளது. இப் பரிசோதனை பற்றிய தகவல்கள் உளவியல் மதிப்பீடு (Psychological Assessment) என்னும் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.



“நாம் மற்றவர்களுடன் பேசும்போது சில வேளைகளில், அவர்கள் எம்மைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் அல்லது தவறாகப் புரிந்துகொண்டுவிட்டார்கள் என நினைக்கிறோம். அது தவறு. எமது பேச்சு அல்லது கருத்து மற்றவர்களால் எப்படிப் பதிவுசெய்யப்படுகிறது என்பது அவர்கள் எம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதையும் பொறுத்திருக்கிறது. ஆச்சரியம் தரும் வகையில் இது ஒரு சிக்கலான விடயம்” என்கிறார் இவ்வாய்ச்சியைச் செய்த குழுவின் தலைவர் டாக்டர் புனித் ஷா.

“இந்த உளவியல் நடைமுறையை அறிந்துகொள்ள, நாம் மனத்தை அறிதலையும், பச்சாத்தாபத்தையும் (empathy) வேறுபடுத்த வேண்டும். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ‘மனத்தை அறிதல்’ என்கிறோம். அதேவேளை பச்சாத்தாபம் என்பது மற்றவர்கள் எப்படியான உணர்வுநிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பற்றியது. இந்த இரண்டு நடைமுறைகளுக்கும் அதிக பேதம் இல்லைப்போலத் தெரிந்தாலும், இவ்விரண்டும் மூளையின் இருவேறு நரம்பு மண்டலங்களால் நிறைவேற்றப்படுகிறது. இந்நரம்புமண்டலங்களின் நடவடிக்கைகளை நாம் அளந்துபார்க்கும்போது பெண்கள் மனங்களை அறிவதில் ஆண்களைவிடக் கெட்டிக்காரர் எனபது புலனாகியது” என்கிறார் டாக்டர் ஷா.

இக் குழுவினால் உருவாக்கப்பட்ட கேள்விக்கொத்து, சமூக ஊடாடல்களை மேற்கொள்வதில் சவால்களை எதிர்கொள்பவர்கள், குறிப்பாக ஆட்டிசம் சமூகத்தினரது மனங்களைப் புரிந்துகொள்வதில் சிரமங்களை எத்ரிகொள்பவர்கள் போன்றவர்களுக்குப் பெரிதும் உதவியாகவிருக்குமெனெவும் குறுகிய நேரத்தில் செய்துமுடிக்கக்கூடிய இது இலவசமாகக் கிடைக்கிறது எனவும் தெரிவிக்கிறார் டாக்டர் ஷா.