World

மத்திய கிழக்கு: லெபனானில் ‘பேஜர்களை’ வெடிக்க வைத்தது இஸ்ரேல். 9 பேர் மரணம் , 2800 பேர் காயம்!

இன்று, செப். 18, கிடைத்த செய்தியின்படி கீழே குறிப்பிட்ட பேஜர் குண்டு வெடிப்புகள் இஸ்ரேலிய உளவுப்பிரிவான மொஸாட்டினால் மேற்கொள்ளப்பட்டது எனவும் ஐந்து மாதங்களுக்கு முன்னரே ரெல் அவிவிலுள்ள மோட்டோறோலா நிறுவனத்தில் வைத்து பேஜர்களில் தலா 20 கிராம் பென்ரா எரிதிறிற்றோல் ரெட்றா நைட்றேட் என்னும் வெடி மருந்து அடைக்கப்பட்டு லெபனானுக்கு அனுப்பி வைக்கப்பாடது எனவும் இஸ்ரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. இப்பேஜர்களை பொதுவாக மருத்துவர்கள், தாதிகள் போன்ற மருத்துவ மனை நிர்வாகத்தினரே பாவித்தனரெனவும் கூறப்படுகிறது.

இப்பேஜர்களினால் விமானப் பயணிகள் , விமானங்கள் பாதிக்கப்படலாம் என்ற காரணத்தால் இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த பல விமானச்சேவைகளைப் பல ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியுள்ளன.


****

காசா போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துவரும் லெபனானைத் தளமாகக் கொண்ட ஹெஸ்பொல்லா என்ற இராணுவ அமைப்பைச் சேர்ந்த 9 பேர் இஸ்ரேலின் புதிய உத்தியான எலெக்ட்றோனிக் போர்முறைக்கு இலக்காகி மரணமடைந்ததுடன் மேலும் 2800 பேர் காயமடைந்துமுள்ளனர்.

ஒரு வருடத்திற்கு முன்னர் காச்ச்வில் போர் ஆரம்பித்த நாளிலிருந்து ஹெஸ்புல்லா போராளிகள் தமக்கிடையேயான தொடர்பாடல்களுக்கு கைத்தொலைபேசிகளைப் பாவிப்பதை நிறுத்திவிட்டு தாமே நிர்வகிக்கும் பேஜர்களைப் பயன்படுத்தி வந்தனர். சமீபத்தில் ஈரானில் வைத்து இஸ்ரேலினால் கொலைசெய்யப்பட்ட ஹமாஸ் தளபதி ஒருவரும் கைத்தொலைபேசி வெடிப்பின் மூலமே கொல்லப்பட்டிருந்தார். இந்த தடவையும் லெபனானுக்கான ஈரானிய தூதர் மொஜ்ராபா அமானியும் இவ்வெடிப்பில் காயப்பட்டுள்ளார் என ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஏக காலத்தில் இப் பேஜர்களுக்கு அனுப்பப்படும் ஒத்திசை சமிக்ஞையினால் (synchronized signal) இவ்வெடிப்புகள் நடந்திருக்கலாமென நம்பப்படுகிறது. லெபனான் நேரம் மாலை 6:00 மணிக்கு இவ்வெடிப்புக்கான சமிக்ஞை அனுப்பப்பட்டிருக்கிறது. ஹெஸ்பொல்லா உறுப்பினர் ஒருவரின் 10 வயது மகளும், இரு மகன்களும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.

கைத்தொலைபேசிகளில் பாவிக்கப்படும் லிதியம் பற்றறிகளைப் போல பேஜர்களிலும் பாவிக்கப்படும் இவ்வகை பற்றறிகள் சூடேறுவதால் வெடித்து பாவனையாளரைக் காயப்படுத்துவது வழக்கமெனினும் அவற்றை ஏக காலத்தில் சூடேறச் செய்வதற்கு ஏற்ற வகையில் அங்கு மென்பொருள் மூலம் கட்டளை அனுப்பப்பட்டிருக்கவேண்டும் என சில நிபுணர்களும், பேஜர்கள் தயாரிக்கப்படும்போதே அதற்குள் மெல்லியதொரு வெடியை வைத்து தயாரிக்கப்பட்டு பின்னர் ஒத்திசையும் சமிக்ஜை மூலம் அவை வெடிக்கப்பட்டிருக்கலாம் எனச் சில நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இவ்வெடிப்புகள் லெபனானில் மட்டுமல்லாது சிரியா போன்ற நாடுகளிலும் நடந்திருப்பது ஹெஸ்பொல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு நாடுகளில் வதியும் நபர்களுடன் இரகசிய தொடர்பாடல்களை மேற்கொண்டுவருகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.

பேஜர்களில் இரு திசை உரையாடல்களை மேற்கொள்ளும் தகவல் தொழில்நுட்பம் 1990-2000 ஆண்டு காலங்களில் பாவிக்கப்பட்டது. காசா போர் தொடங்கிய காலத்திலிருந்து இஸ்ரேலின் ஒட்டுக்கேட்கும் தொல்லையிலிருந்து தப்பிப்பதற்காக ஹெஸ்பொல்லா பேஜர்களைப் பாவிக்கத் தொடங்கியிருந்தது. ஆனால் கைத்தொலைபேசியில் பாவிக்கப்படும் தகவற் திரிபு (encryption) தொழில்நுட்பம் அக்காலத்தில் பாவனையில் இருக்கவில்லை. இதனால் பேஜர்களில் மூன்றாவது தரப்பினால் உள்ளீடு செய்யப்படும் தகவல்கள் எவ்வித திரிபுமல்லாமல் சேரவேண்டிய இடத்தை அடைகிறது. இதன் மூலம் மூன்றாம் தரப்பினால் அனுப்பப்படும் கட்டளைகளை பேஜர்கள் செய்து முடிக்கின்றன.

தற்போது வெடிப்புக்குள்ளான பேஜர்களை ஹெஸ்பொல்லா மோட்டோறோலா நிறுவனத்திடமிருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வாங்கியிருந்தனர் என அமெரிக்கப் பத்திரிகையான வால்ஸ்றீட் ஜேர்ணல் தெரிவித்துள்ளது. இருப்பினும் இது மோட்டோறோலா தயாரிப்பல்ல எனவும் தாய்வானில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட் அபொல்லோ ஏ.ஆர்-924’ ரக பேஜர்கள் எனவும் இன்னுமொரு தரப்பு கூறுகிறது. இச்சம்பவத்தின் பின்னர் மோட்டோறோலா பங்குச்சந்தை வெகுவாக வீழ்ச்சியடைந்த காரணத்தால் வேண்டுமென்றே தகவல்களில் குழப்பங்களை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு.