மத்திய கிழக்கு: பாலஸ்தீனியர்களைக் காதலிக்கும் வெளிநாட்டவர்கள் இஸ்ரேலிய இராணுவத்துக்கு அறிவிக்க வேண்டும்!
இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனியரைக் காதலிக்கும் / கல்யாணம் செய்துகொள்ள விரும்பும் / சேர்ந்து வாழ விரும்பும் அனைத்து வெளிநாட்டவர்களும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்கவேண்டுமென அரசு அறிவிக்கவிருக்கிறது. வெளிநாட்டவர்கள் மேற்கண்ட காரணங்களுக்காகத் தமது விசாவை நீடிக்க விரும்பினால் முழு விபரங்களையும் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்கவேண்டுமென இவ்வறிக்கை மூலம் கட்டளை பிறப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது.
இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் இருக்கும் பாலஸ்தீனிய பிரதேசங்களில் வாழும் பாலஸ்தீனிய மக்களை மட்டுமே குறிவைத்து உருவாக்கப்பட்ட இச்சட்டம் பாலஸ்தீனிய சிவில் விவகாரங்கள் திணைக்களத்தினால் கடந்த பெப்ரவரி மாதம் வரையப்பட்டிருந்தாலும் இதற்கெதிராகப் பல சட்டச் சவால்கள் எழுந்தமையால் தாமதப்பட்டிருந்தது.
இக்கட்டளையின்படி, பாலஸ்தீன பூர்வீகத்தைக் கொண்ட வெளிநாட்டவர்களுட்பட அனைத்து வெளிநாட்டவர்களும் பாலஸ்தீனியர் ஒருவரை உத்தியோகபூர்வமாகத் திருமணம் செய்திருந்தால் நாட்டுக்குள் நுழையும்போது விசாவைப் பெறமுடியாது. மாறாக, நுழைவுக்கு 45 நாட்களுக்கு முன்னரே விசாவுக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்றிருக்கவேண்டும். அதே வேளை நாட்டுக்குள் நுழைந்த ஒருவர் உள்நாட்டில் ஒருவர் மீது காதல் கொண்டால் ‘அந்நாளிலிருந்து’ 30 நாட்களுக்குள் இத்திணைக்கள அதிகாரிக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும். ‘ஆரம்ப நாள்’ என்பது இக் கட்டளையின்படி ‘பதியாத்திருமணம்’ (engagement) செய்த நாளாக’ அல்லது திருமண நாளாக, அல்லது சேர்ந்து வாழ ஆரம்பித்த நாளாக இருக்க வேண்டும். இப்படி வாழ ஆரம்பித்த தம்பதியினர் வாழ ஆரம்பித்து 90 நாட்களுக்குள் தமது இணைப்பை உத்திஒயோகபூர்வமாக்க வேண்டும். தவறினால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.
இக் கட்டளைகள் பாலஸ்தீனிய பிரதேசங்களில் குடியேறிய இஸ்ரேலியர்கள் மீது பிரயோகப்படுத்தப்பட மாட்டாது. (ரைம்ஸ் ஒஃப் இஸ்ரேல்).