Spread the love
சிவதாசன்

ஜனவரி 8, 2020

ஈரானின் ஏவுகணைகளோடு மத்திய கிழக்கில் குண்டுச் சத்தம் நின்று விட்டது போல் ஒரு நிசப்தம்; அதைவிட வெள்ளை மாளிகையில் துரும்பரின் வீட்டிலும் நிசப்தம்.

யார் வென்றார்கள் எனச் சொல்ல முடியாவிட்டாலும் யார் வாலைச் சுருட்டியிருக்கிறார்கள் – கொஞ்ச நாளைக்காயினும் – என்று தெரிகிறது.

இன்று காலை வெள்ளை மாளிகையில் ஊடக சந்திப்பு நடந்தது. வானொலியில் துரும்பர் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க முடிந்தது. ஜனாதிபதியைத் திடீரென்று மாற்றிவிட்டீர்களா என்ற சந்தேகம். அத்தனை பவ்வியம். அந்தாள் ஜனாதிபதியாக வந்ததிலிருந்து இன்று தான் எழுதிக் கொடுத்ததை, அதே தொனியில், இடைக்கிடையே தனது வழக்கமான சேட்டைகளை விடாமல், அப்படியே வாசித்தார். அடாடா டா என்ன பவ்வியம். வாலைச் சுருட்டும்போதுதான் இப்படியான பவ்வியம் வருவதை ரொம் & ஜெரி கார்ட்டூனில் பார்த்திருக்கிறேன்.

1979 இலிருந்து ஈரானின் போக்கை வெறுப்பவன் நான். மதத்தை அரியணையில் ஏத்தி வைத்திருக்கும் எல்லோர் மீதானதுமான அதே கோபம் தான். அவர்கள் கைகளில் அணுவாயுதமும் கிடைத்துவிட்டால்? எனவே அமெரிக்காவின் பொருளாதாரத் தணிக்கைகள் பற்றி அலட்டுவதற்கு எதுவுமில்லை. ஆனால் சொலைமானி விடயத்தில் துரும்பர் அவசரப்பட்டுவிட்டார்.

சொலைமானி, துரும்பர் சொல்வதுபோல் கொலைமானியாகவே இருக்கட்டும். அவர் இல்லாது போனால் மத்திய கிழக்கு முழுவதும் மட்டுமல்ல வெள்ளை மாளிகையிலும் சில தசாப்தங்களில் கறுப்புக் கொடிகள் பறந்திருக்கும். ஐசிஸ் என்ற பூதத்தை உருவாக்கியதில் எப்படி அமெரிக்காவிற்குப் பங்கிருக்கிறதோ அதேயளவு பங்கு அப் பூதத்தை மீண்டும் போத்தலுக்குள் அடைத்ததில் சொலைமானிக்கும் இருக்கிறது. இது அலுவல் முடிந்ததும் ஆளைக் கொல்லும் பாணி.

சொலைமானி உயிருடன் இருந்திருந்தால் அமெரிக்கா விரைவில் மத்திய கிழக்கை விட்டு வெளியேறவேண்டி வரும் என்றார்கள். அரபு வசந்தத்தைச் சிரிய எல்லையில் நிறுத்தியது சொலைமானிதான். அத்தோடு மத்திய கிழக்கில் அமெரிக்க வசந்தமும் நிறுத்தப்பட்டுவிட்டது. சிரியாவில் ரஸ்யாவும் ஈரானும், குறிப்பாக சொலைமானியும், அசாட்டை உயிரோடு வைத்திருக்கிறார்கள்.

ஈரான் மீது அப் பிராந்தியத்தில் இரண்டு பேருக்குக் கடுப்பு. ஒன்று இஸ்ரேல் மற்றது சவூதி அரேபியா. அமெரிக்கா எரிபொருளில் தன்நிறைவு பெற்றதும் மத்திய கிழக்கிற்கு டாட்டா காட்டப் போகிறது (அதுவே துரும்பரினது தேர்தல் பிரகடனமும்) எனத் தெரிந்ததும், தமது பாதுகாப்பிற்காக அமெரிக்காவை அங்கேயே வைத்திருக்க இந்த இரண்டு நாடுகளும் பகீரத முயற்சி செய்கின்றன. வெள்ளை மாளிகையில் மருமகனை வைத்துக் கொள்வதும் ஒருவகையில் பலன் தருவதே. சொலைமானியின் மீதான ஏவுகணை யாரால் ஏவப்பட்டது என்பதில் எனக்கு இன்னும் சந்தேகமே.

ட்றோண்களின் மூலம் அமெரிக்க காலாட் படைகளின் படையெடுப்பு எதுவுமில்லாது அப்பாவி உயிர்களைப் பறிக்கும் வித்தையை ஆரம்பித்து வைத்தவர், சமாதானம் எதுவும் செய்யாமலேயே சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்றவர் , பராக் ஒபாமா. ஆப்கானிஸ்தானில் அவர் தொடக்கி வைத்த ஒப்பாரிகளும் சாபங்களும் இன்னும் அதன் மலைகளிடையே எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன. ஒபாமாவோடு ஒப்பிடும்போது துரும்பர் ஒரு காந்தி.

Related:  ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு அனுப்ப மறுப்பு

ஈராக்கில் ஷியா பெரும்பான்மையைச் சுனி சிறுபான்மையினரான சதாம் ஹூசேன் இரும்புப் பிடியுடன் ஆண்ட காலத்தை முடித்து வைத்தவுடன் அது சக ஷியா நாடான ஈரானுடன் ஒற்றுமையாவது இயல்பு. பிரித்தானியர் பிரிப்பதற்கு முதல் மத்திய கிழக்கு மணலில் கோடுகள் வரையப்படவில்லை. அது ஓடிக்கொண்டிருந்த நாடு. சொலைமானி ஈராக் ஷியா குலத்துக்கு ஒரு விடி வெள்ளி. ஈராக் – ஈரான் உறவு சுமுகமாவது அமெரிக்கப் படைகளுக்கு ஆபத்து என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் சொலைமானியின் கொலையால் அதை விரைவாக்கியதில்தான் மாற்றுக் கருத்துண்டு.

பொருளாதாரத் தடை என்பது ஒரு ஆயுதமேந்தாத போர். எதிரியை உள்ளேயும் (சொந்த மக்களால்) வெளியேயும் தாக்க வல்ல போர். ஈராக், சூடான், வெனிசுவேலா, கியூபா போன்ற நாடுகள் தம்மிடமுள்ள வளத்தை விற்றுக் குழந்தைகளுக்கு உணவு கூட வாங்க முடியாமல் வாடி வதங்குகின்றன. உடன்பாடில்லா விட்டாலும், ஆட்சி மாற்றத்துக்கு அது ஒரு வழி. இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்தால் ஈரானில் உள்நாட்டுப் போர் வெடித்திருக்கும். சொலைமானியின் கொலையால் ஈரானின் ஆட்சியாளரைக் காப்பாற்றியிருக்கிறது அமெரிக்கா.

சொலைமானியின் கொலையும், ஈரானின் பதில் நடவடிக்கையும், விரும்பியோ விரும்பாமலோ, நேரடி விளைவுகளை விடப் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

  1. ஈரான், தனது ஏவுகணைகளின் தாக்கு எல்லை, திறன், துல்லியம், பலம் ஆகியவற்றை வெற்றிகரமாகப் பரீட்சித்திருக்கிறது. தேவையேற்படின் அவற்றில் அணுக்குண்டு (nuclear warhead) ஐப் பொருத்துவதுதான் அடுத்த கட்டம்.
  2. அமெரிக்காவை வெளியே அனுப்பினால் நான் உன்னைப் பாதுகாப்பேன் என ஈராக்கிற்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.
  3. ஈரானின் ஆட்சியினர் மீதான மக்களின் அதிருப்தியைப் பின் தள்ளியது மட்டுமல்லாது இனி வரப்போகும் கடுமையான பொருளாதாரத் தடையையும் எதிர்கொள்ளும் மனத் துணிவை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.
  4. ஈரானுக்கு உலக நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
  5. ஏற்கெனவே ஆட்டம் கண்டு வந்த ‘நேட்டோ’ நாடுகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
  6. துரும்பரையே ஆட்டம் காண வைத்திருக்கிறது.
  7. துரும்பரின் ஆதரவுத் தளமான தீவிர வலதுசாரிகளுக்கு எரிச்சலை உண்டுபண்ணியிருக்கிறது. (சொலைமானி கொலையை அவர்கள் இஸ்ரேல் ஆதரவாகவே பார்க்கிறார்கள்)
  8. அமெரிக்கா எண்ணையில் தன்னிறைவு பெற்றிருந்தாலும் உலகம் இன்னும் மத்திய கிழக்கு எண்ணையில்தான் தங்கியிருக்கிறது. எனவே மத்திய கிழக்கு ஸ்திரத்தை இழப்பது பல உலகநாடுகளுக்கு அமெரிக்கா மீது கடுப்பை ஏற்படுத்துவது இயல்பு.
  9. உலகிலேயே சிறப்பாக அமெரிக்க கணனித் தொழிற்பாடுகளைக் குழப்பவல்லவர்கள் (hacking) ஈரானியர்கள் என்ற பெயருண்டு. அமெரிக்க வங்கித் துறையில் இவர்கள் காட்டிய கைங்கரியம் வங்கித் துறையின் அடிவயிற்றில் புளியைக் கரைத்துள்ளது என்பது உள்வீட்டுக்காரருக்கு நன்றாகவே தெரியும். ஈரானியர் அதில் இறங்கினால் அமெரிக்காவிற்கு ஈரான் பொருளாதாரத் தடை விதித்ததற்குச் சமமாகவே இருக்கும்.
  10. ஜனாதிபதி துரும்பர் மீதான impeachment ஐ இது துரிதப்படுத்துமா என்பதிலும் எனக்கு ஒரு கண் இருக்கிறது. செனட் சபையில் பெரும்பான்மை இருந்தாலும் துரும்பரின் பகையாளிகளான establishment republicans துரும்பருக்கு எதிரான சதியொன்றுக்கு இதைப் பாவித்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக சிறீலங்காவின் அறிக்கை இருக்கிறது. அது மிக நெருங்கிய நட்பைப் பேணி வருவதை உதாரணம் காட்டி, இரு தரப்பையும் அமைதியாக இருக்கும்படி கேட்டிருந்தது. சாதாரணமாகத் துடியாட்டம் மிகுந்த துரும்பர் அடங்கிப் போனதுக்கும் இக் கோரிக்கைக்கும் சம்பந்தம் உண்டென்று சிறீலங்காவிலிருந்து இன்னுமொரு அறிக்கை வந்தால் அதை நம்புவது நல்லது.

Print Friendly, PDF & Email