News & AnalysisWorld

மத்திய கிழக்கு | காசா பிரதேசத்தில் இஸ்ரேலிய தாக்குதலுக்கு 24 பேர் பலி

இஸ்ரேலிய குண்டுவீச்சு விமானங்கள் பாலஸ்தீனிய காசா பிரதேசத்தின்மீது நேற்று இரவு முழுவதும் நடத்திய விமானக் குண்டுவீச்சின்போது 9 குழந்தைகள் உட்பட 24 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பதிலுக்கு காசா தீவிரவாதிகள் ஜெருசலேம் புனித நகர் மீது ஏவிய 200 இற்கும் மேற்பட்ட ஏவுகணைகளினால் சில இஸ்ரேலியர்கள் காயமடைந்திருப்பதாக இஸ்ரேலிய அரசு குறிப்பிட்டுள்ளது.

கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம் ஆகிய மும்மதங்களும் உரிமை கொண்டாடும் ஜெருசலேம் நகரிலுள்ள அல் அக்சா மசூதியைச் சுற்றி வாழ்ந்துவரும் பாலஸ்தினர்களைக் கட்டாயமாக அப்புறப்படுத்திவிட்டு அவ்விடத்தில் யூதர்களைக் குடியேற்ற இஸ்ரேலிய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு ஆதரவு தருவதற்காக கடும்போக்காலர்களான பல்லாயிரக்கணக்கான யூதர்கள் ஜெருசலேத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து சில நாட்களாக இஸ்ரேலிய பாலஸ்தீநியர்களுக்கும் யூதர்களுக்குமிடையே மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

அல் அக்சா மசூதியில் ரமழான் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்களின் மீது இஸ்ரேலிய படைகள் அத்துமீறி உட்புகுந்து தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் பாலஸ்தீனர்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இஸ்ரேலிய – யூத ஆர்ப்பாட்டக்காரர்களிடையே ஏற்பட்ட மோதல்களின்போது நூற்றுக்கு மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர். இதே வேளை அங்குள்ள பாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேலுக்கு எதிரான ஏவுகணைத் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

பாலஸ்தீன ஹமாஸ் விடுதலை இயக்கம் பொதுவாக புனித ஜெருச்லேம் நகர் மீது தாக்குதல்களை மேற்கொள்வதில்லை. ஏழு வருடங்களுக்கு முன்னர் தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு இதுவே அவர்களால் மேற்கொள்ளப்பட்ட முதல் தாக்குதல் எனப்படுகிறது.

காசாவில், 3 குழந்தைகள் உட்பட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இஸ்ரேலிய இராணுவத்தின் அறிக்கையில், ஒரு தளபதி உட்பட, 15 பாலஸ்தீன தீவிரவாதிகளைக் கொன்றிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

மேற்குக் கரைப் பிரதேசத்தில் வாழும் பாலஸ்தீனர்கள் மத்தியிலும் ஆர்ப்பாட்டங்கள்பரவி வருவதாகத் தெரிய வருகிறது. இஸ்ரேலிய இராணுவத்தினர் பொதுமக்கள் மீது ரப்பரினாலான துப்பாக்கி ரவைகளைப் பாவிப்பதாக இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகள் அமைதி காக்கும்படி இரு தரப்பினரிடமும் கேட்டிருந்தாலும் அதையும் மீறி அல் அக்சா மசூதியினுள் சென்று இஸ்ரேலியர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இஸ்லாம் மதத்தின் மூந்றாவது அதி முக்கிய புனித தலமான அல் அக்சாவினுள், அதுவும் ரமழான் பெருநாட்களின்போது தாக்குதல்களை நடத்தியது உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்களைக் கடும் கோபத்துக்குள்ளாக்கியுள்ளது.

தற்போது அல் அக்சா மசூதி இருக்குமிடத்தில் முன்னர் இருந்த யூதர்களின் புனித தலத்தை (Temple Mount) இடித்துவிட்டுத்தான் அதில் முஸ்லிம்கள் மசூதியைக் கட்டினார்கள் என்பது கடும்போக்காள யூதர்களின் வாதம். எனவே முழு ஜெருசலேமும் யூதர்களுக்கே சொந்தமானது என தீவிர யூதமத ஆதரவாளர்கள் வருடா வருடம் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். வரலாற்றுப் புகழ் பெற்ற ஜெருசலேம் நகரைத தலைநகராக்க அல் அக்சா மசூதியும் அதைச் சுற்றி வாழும் பாலஸ்தீனயர்களும் தடையாக இருப்பதால் அவர்களை அப்புறப்படுத்தும்படி கோரி இஸ்ரேலிய அரசு நீதி மன்றத்தில் வழக்குப் பதிந்திருந்தது. கடந்த வாரம் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்பட்ட அதன் தீர்ப்பை நீதிமன்றம் பின்போட்டிருந்தது. இதன் காரணமாகவே யூதர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியிருந்தார்கள்.

1967 ஆம் ஆண்டு போரின்போது இஸ்ரேல் ஜெருசலேம் நகரை, ஜோர்தான் நாட்டின் கட்டுப்பாட்டிலிருந்து பறித்துக்கொண்டது. அங்கு படிப்படியாக யூதர்களைக் குடியேற்ற இஸ்ரேலிய அரசு முயன்று வருகின்றது.