மதுஷ் பொலிஸ் கொலை | போதைவஸ்து கடத்தலில் பல அரசியல் புள்ளிகளுக்குத் தொடர்பு?
இன்டெர்போல் இலங்கையுடன் ஒத்துழைக்க மறுக்கலாம்?
இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட மாகந்துரே மதுஷ் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக இலங்கைக்கும் இன்டெர்போலுக்குமிடையில் விரிசல் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
துபாய் நாட்டில் ஒளித்திருந்த போதைவஸ்து வியாபாரியாகிய மதுஷைக் கைதுசெய்து இலங்கைக்கு அனுப்பும்படி இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இணங்கி இண்டெர்போல் சிவப்பு பிடியாணையை வழங்கியிருந்தது. இதன் பிரகாரம் துபாய் விரும்பினால் மதுஷை இலங்கைக்கு நாடுகடத்தலாம் என இண்டெர்போல் தெரிவித்திருந்தது.
இருப்பினும், இலங்கைக்கு அனுப்பினால் நீதிமன்றத்திற்குக் கொண்டு போகாமலேயே இலங்கைப் பொலிஸ் தன்னைக் கொன்றுவிடும் எனவும், தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டாமெனவும் மதுஷ் துபாய் பொலிஸைக் கேட்டுக்கொண்டதாகவும், இலங்கை வழங்கிய வாக்குறுதிகளின் பேரில், துபாய் அவரை நாடுகடத்தியிருந்தது எனவும் இப்போது செய்திகள் வெளிவருகின்றன. துபாய்க்கும் இலங்கைக்கும் இடையில் இருக்கும் நல்லுறவின் நிமித்தம் இம் முடிவு எடுக்கப்பட்டதெனெத் தெரிகிறது.
இந்த ஏற்பாட்டின்படி, மேலதிக சட்டமா அதிபர், உதவி பொலிஸ் சுப்பெறின்ரெண்டெண்ட் உட்பட்ட பொலிஸ் குழுவொன்று துபாய்க்குச் சென்று மதுஷைக் கைதுசெய்துகொண்டு வந்திருந்தது.
மதுஷ் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதும் தடுப்புக் காவலில் இருக்கும்போதே அவரை இலங்கைப் பொலிஸ் சுட்டுக் கொன்றுவிட்டது. இலங்கை தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றாமல் சந்தேகநபரைக் கொலைசெய்த காரணத்தால், எதிர்காலத்தில் இன்டெர்போல் இலங்கைக் குற்றவாளிகளுக்குச் சர்வதேசப் பிடியாணையை வழங்க மறுக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இலங்கை அரசியல் புள்ளிகளுடன் தொடர்பு?
இதே வேளை, இலங்கையில் போதை வஸ்து வியாபாரத்தில் பல பெரிய அரசியல் புள்ளிகள் ஈடுபட்டு வந்துள்ளனர் எனவும் வழக்கு நீதிமன்றத்துக்குப் போனால் பலரது பெயர்கள் அம்பலத்துக்கு வருமென்ற காரணத்தினால்தான் மதுஷைப் பொலிசார் சுட்டுக் கொன்றனர் என தேசிய மக்கள் கட்சி பா.உ. விஜித ஹேரத் குற்றம் சாட்டியுள்ளார்.