India

மதுரை தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக அங்கீகரிக்க வேண்டும் – தமிழ்நாடு மாநில அமைச்சர்கள்


ஆகஸ்ட் 17, 2020: குஜராத் மாநிலம் இரண்டு தலைநகர்களைக் கொண்டிருப்பதுபோல், ஆந்திர பிரதேசம் மூன்று தலைநகர்களைக் கொண்டிருப்பது போல், தமிழ்நாடும் மதுரையை இரண்டாவது தலைநகராக வரித்துக்கொள்ள வேண்டுமென மதுரைமேற்கு அ.இ.அ.தி.மு.க. கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மதுரையைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள் இருவர் இத் தீர்மானத்தை நிறைவேற்றி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இவ் வேண்டுகோளை நிறைவேற்றவேண்டுமென அவர்கள் கேட்டுள்ளார்கள்.

தமிழ்நாடு மாநில அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் (வருமானத்துறை) தலைமை தாங்கிய கூட்டத்தில் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுஇருக்கிறது. குஜராத் மாநிலம் இரண்டு தலைநகர்களைக் கொண்டிருப்பதுபோல், ஆந்திரா மூன்று தலைநகர்களைக் கொண்டிருப்பதுபோல், தென்னாபிரிக்கா இரண்டு தலைநகர்களைக் கொண்டிருப்பதுபோல் தமிழ்நாட்டிற்கும் இரண்டு தலைநகர்கள் தேவை என அத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமாரும், செல்லூர் கே.ராஜுவும் இத் தீர்மானத்தை அங்கீகரித்திருக்கிறார்கள். “கோவில் நகரமான மதுரை இரண்டாவது தலைநகராக ஆக்கப்பட்டால், தென் மாவட்டங்கள் பொருளாதார வளர்ச்சி, கைத்தொழில் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் காணும்” என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை, சர்வதேச விமானநிலையம், சிறந்த மாநில நெடுஞ்சாலை உட்கட்டமைப்பு, வரவிருக்கும் எயிம்ஸ் மருத்துவமனை, 150 கி.மீ. தூரத்தில் இருக்கும் தூத்துக்குடி துறைமுகம் ஆகிய வசதிகள் இருப்பது மதுரைக்கு ஏற்கெனவே தலைநகர் அந்தஸ்து உள்ளது எனக் காட்டுகிறது. “சென்னை, மாநிலத்தின் தலைநகராக இருந்தாலும், மதுரையே தொடர்ந்தும் ‘அரசியல் தலைநகராக’ இருக்கிறது. உண்மையில், மதுரையை இரண்டாவது தலைநகராக ஆக்கவேண்டுமென்பதே எம்.ஜி.ஆரின் விருப்பமாகவும் இருந்தது. இக் காரணத்தாலேயே உலகத் தமிழ் மாநாடு மதுரையில் வைக்கப்பட்டது. ஜெயலலிதா, தனது அரசியல் சம்பந்தப்பட்ட முடிவுகளை மதுரையிலேயே எடுத்தார். எனவே, முதலமைச்சரும், உதவி முதலமைச்சரும் மதுரையை இரண்டாவது தலைநகராக்குவதற்குத் தேவையான காரியங்களைச் செய்யவேண்டும். மதுரையை மனதில் வைத்தே அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்” என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவிதார்.



மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன், 1981 இல், திருச்சிராப்பள்ளியை இரண்டாவது தலைநகராக்கவேண்டுமென்பதை அங்கீகரித்திருந்தார். சென்னயில் நிலவும் வரட்சியையும், தண்ணீர்ப் பஞ்சத்தையும் கருதில் கொண்டு அவர் இதை வலியுறுத்தியிருந்தார். ஆனால் அது அப்போதைய தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதியிடமிருந்து பெருத்த எதிர்ப்பைச் சம்பாதித்திருந்தது. தலைநகரை நகர்த்துவதில் எம்.ஜி.ஆருக்கு உண்மையான உத்தேசம் இல்லை அவர் வெறுமனே திசை திருப்பும் உத்தியைக் கையாளுகிறார் எனக் கருணாநிதி அப்போது தெரிவித்திருந்தார்.