NewsSri Lankaஅறிவித்தல்கள்

‘மதக மங்கள’ | மறைந்த மங்கள சமரவீரவுக்கு இறுதி மரியாதை

மறைந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் இறுதி வழியனுப்புதலுக்கான மதச்சடங்குகள் மற்றும் உறவினர் நண்பர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்தும் நிகழ்வுகள் இம் மாதம் 23 முதல் 26 வரை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோணாத் தொற்றுக்கு இலக்காகி நோய்வாய்ப்பட்டிருந்து ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி அகால மரணமடைந்த அன்னாரின் உடல், கோவிட் சுகாதாரக் கட்டுப்பாடுகளுக்கமைய உடனேயே தகனம் செய்யப்பட்டிருந்தது. அப்போது நிலவிய நாட்டின் பொது முடக்கம் காரணமாக பொதுமக்கள் பங்குபற்றும் மதச் சடங்குகள், நிகழ்வுகள் நடைபெறவில்லை. அவர் சார்ந்த பெளத்த மத நடைமுறைகளின்படி 3 மாதங்களுக்குப் பிறகு உரிய வழியனுப்புதலைச் செய்ய அவரது உறவினர்களும் நண்பர்களும் தீர்மானித்துள்ளனர்.

“அவரது அகால மரணத்தால் ஏற்பட்ட வடுக்களைதப் பலரும் தாங்கி நிற்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும். அவரைப் பற்றி சமூக வலைத் தளங்களிலும், ஊடகங்களிலும், கவிதைகளாலும், கட்டுரைகளாலும், சித்திரங்களாலும், இலங்கையிலிருந்து மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமிருந்தும் அனுதாபச் செய்திகள் வெளியாகியிருந்தன. அவரை வெவ்வேறு வழிகளில் அறிந்துவைத்திருக்கும் அனைவரும் தம் இறுதி மரியாதையத் தெரிவிக்க ‘மதக மங்கள’ என்ற இந்த நிகழ்வு இடம் தரும்” என இந் நிகழ்வை ஒழுங்கு செய்த சமரவீர அறக்கட்டளை அறிவித்திருக்கிறது.

நவம்பர் 20, சனியன்று மாலை 7 மணி முதல் 8 மணிவரை, மாத்தறை விகாரையில், வண. கல்கந்த தம்மானந்த தேரரினால் நடத்தப்படும் வழிபாடுகளுடன் ‘மதக மங்கள’ ஆரம்பிக்கவுள்ளது. இதற்கு எவரும் சமூகமளிக்கலாம். இதைத் தொடர்ந்து செவ்வாய் (23), கொழும்பில், வண. தம்மானந்த தேரரின் தலைமையில், மாலை 7 மணிக்கு இன்னுமொரு வழிபாட்டு வைபவம் இடம் பெறும். இந் நிகழ்வு முகநூல், யூ-ரியூப் மூலமாக ஒளிபரப்பப்படும்.

நவம்பர் 24 (புதன்) அன்று நடைபெறும் பிரத்தியேக நிகழ்வில், மங்கள சமரவீரவின் குடும்பத்தினர் பெளத்த பிக்குக்களுக்கு சம்பிரதாயப்படி தானங்களை வழங்குவார்கள்.

25 ஆம் திகதி (வியாழன்) அன்று பெளத்தலோக மாவத்தை, கொழும்பு 08 இலுள்ள ஜயரத்ன மரணச் சடங்கு நிலையத்தில், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, பொதுமக்கள் மரியாதை செலுத்துவதற்காக அன்னாரது அஸ்தி பார்வைக்கு வைக்கப்படும்.

வெள்ளி (26) அன்று, அவரது குடும்பம் உள்ளிட்ட சிறு தொகையானோருடன், அவரது அஸ்தி வாகன ஊர்வலமாக மாத்தறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு ஓலந்தா டச்சு சந்தைக் கட்டிடத்தில் மங்களவின் முயற்சியால் புதுப்பிக்கப்பட்ட சமூக நிலையத்தில், மாலை 2 முதல் 4 மணி வரை பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்படும். 4 மணியளவில் புத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத நடைமுறைகளின்படி கிரியைகள் செய்யப்பட்டபின் அவரது அஸ்தி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மாத்தறையிலுள்ள சமரவீர குடும்பத்தின் அடக்க பூமியில் அடக்கம் செய்யப்படும்.

இந் நிகழ்வில் பங்குபற்ற விரும்புபவர்கள் கோவிட் பாதுகாப்பு வரைமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக சமரவீர அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு தனி மனிதனும் மரியாதையுடன் வாழக்கூடிய, சமரசமானதும், சமாதானமானதும் செழிப்பானதுமான இலங்கை நாட்டை உருவாக்குவதற்காக மங்கள கண்ட கனவுகளையும், எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் விளக்கமாகப் புலப்படுத்தி அவரது நினைவுகளை நிரந்தரமாக்கும் வகையில் அடுத்து வரும் சில வாரங்களில் ஒரு இணையத்தள்மொன்றை உருவாக்கவுள்ளதாகவும், அவரது நினைவுகளைப் பிரதிபலிக்கும் தகவல்களை வைத்திருப்பவர்கள் தயவு செய்து தந்து உதவுமாறும் நண்பர்களையும், பொதுமக்களையும் கேட்டுக்கொள்வதாக சமரவீர அறக்கட்டளை கோரிக்கை விடுத்திருக்கிறது.