Uncategorized

மண்ணின் நோய் தீர்க்கும் மகத்துவம்


நமது உடல் – பாகம் 7

அகத்தியன்

‘அட சீக்’ என்ன தலைப்பு இது’ என முகம் சுளிக்கிறது தெரிகிறது. சற்றே பொறுங்கள்.

எம் உடலில் ஏற்படும் நோய்களுக்கு முக்கிய காரணம் நமது சமிபாட்டுத்தொகுதியை நாம் சமநிலையில் வைத்துக்கொள்ளாமையே என்றால் நம்புவீர்களா?

நமது கலாச்சாரங்களில் உள்ள பல நடைமுறைகளை நாகரீகம் கருதி நாம் பின்பற்றுவதில்லை. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பலருக்கு இவ்வசதிகள் கிடைப்பதில்லை.

கிராமங்களில் வாழும் பலர் மண்ணோடு இசைந்து வாழ்வதனாலேயே அவர்களால் ஆரோக்கியமாக வாழ முடிகிறது. குழந்தைகள், கர்ப்பிணிகள் மண்ணைத் தின்பதை யாரும் தடுப்பதில்லை. குழந்தைகள் மண்ணில் புரண்டு விளையாடுவதைப் பெற்றோர்கள் நிறுத்துவதில்லை. சவர்க்காரம் இல்லாதபோது குளங்களில் சேற்றைப் பூசிக் குளிக்கிறார்கள். மிருகங்களும் சேற்றில் குளிப்பதை மிகவும் விரும்புகின்றன.

இதற்கெல்லாம் காரணம் நுண்ணுயிரிகள் (microbes. நமது பிறப்பிலிருந்தே அவை எம்மோடு கூட வருபவை. ஒருவரது உடலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகையான, பல மில்லியன்கள் தொகையான நுண்ணியிரிகள் வாழ்கின்றன. மூக்கு, காது வாய், தொப்புள், தலைமுடி, தோல், குடல், குதம் என்று சகல உறுப்புகளிலும் அவை வாழ்கின்றன. அவற்றின் இருப்பினால்தான் எம்மால் ஆரோக்கியமாக வாழ முடிகிறது.இந்நுண்ணுயிர்களை எமது உடலில் யார் வைத்தார்கள்?

எமது உடலில் முதன் முதல் நுண்ணுயிர்களை எமக்குத் தந்து இவ்வுலகில் ஆரோக்கியமான வாழ்வை ஆரம்பித்து வைத்தது தாய். அதன் பிறகு எமக்குத் தொடர்ந்தும் தேவையான நுண்ணுயிர்களைத் தந்து வளர்த்தெடுப்பது மண். எனவேதான் மண்ணையும் தாய்க்கு ஒப்பிடுகிறார்கள்.

ஒரு குழந்தை பிறக்கும்போது அதன் உடலில் முதலாவதாகத் தொற்றிக்கொள்வன அவளது பிறப்புறுப்பில் வாழ்ந்துகொண்டிருந்த நுண்ணுயிரிகள். தொப்புள் கொடியும் ஒருவகையில் இதில் சிறு பங்கை ஏற்கிறது. இந்நுண்ணுயிகள் ஏற்கெனவே தாயின் உடலில் பலகாலம் வாழ்ந்தவையாதலால் அவற்றால் குழந்தைக்கு தீங்கேதும் ஏற்படுவதில்லை.

குழந்தை பிறந்து சில மாதங்களில் மண்ணில் விளையாடும்போதும், மண்ணைத் தின்னும்போதும் மேலும் பல நுண்ணுயிரிகள் அதன் உடலில் தொற்றிக்கொள்கின்றன. இவையெல்லாவற்றுக்கும் பழகிக்கொண்ட தாய்க்கு எப்படி அவை ஆபத்தை விளைவிப்பதில்லையோ அதே போன்று குழந்தைகளும் படிப்படியாக இந்நுண்ணுயிர்களின் சூழலில் ஆரோக்கியமான இசைபடு வாழ்வுக்குப் பழகிக்கொள்கின்றன.

இதேபோன்றுதான் நமது வீட்டு விலங்குகளும். ஆடுகள், மாடுகள் எல்லாம் தமது சூழலிலுள்ள அத்தனை நுண்ணுயிர்களையும் தம்மகத்தே கொண்டு இசைபட வாழ்கின்றன.

இவையெல்லாம் அருவருப்பாக இருப்பினும் எமது கலாச்சாரம் இவற்றைப் புனிதமாக்கி வைத்திருந்தது. மாட்டுச் சாணத்தால் மெழுகிய தரையில் குழந்தை தவழ்வது ஒன்றும் ஆரோக்கியமற்ற விடயமல்ல. ஆனாலும் இதை இழிவான பழக்கங்களாக நினைப்பவர்கள் பலருமுண்டு. “வெளிநாட்டாரும் செய்கிறார்கள்” அல்லது “ஆய்வுகள் கூறுகின்றன” என்றால் அதை நம்புவதற்குப் பலருமிருப்பார்கள். நம்ம வீட்டுத் தோட்ட மல்லிகைக்கு எப்போதுமே மணம் குறைவுதான்.பசு புல்லைத் தின்கிறது. அப் புல்லின் கடினமான வெளித்தோலைச் சமிபாடடையச் செய்வது பசுவின் குடலிலுள்ள பக்டீரியா எனப் படித்திருக்கிறோம். அப்படியானால் அப்பசுவின் குடலுக்குள் பக்டீரியாவை யார் கொண்டுபோய் வைத்தது என ஆசிரியரைப் பார்த்து எவரும் கேட்டதாக நான் கேள்விப்படவில்லை.

இதே கேள்வி மனிதருட்படப் பல விலங்கினங்களுக்கும் உண்டு. எமது சமிபாட்டுத் தொகுதி சீராகச் செயற்பட பக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிரிகளின் உதவி தேவை. மனித உடலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகையான, பல பில்லியன்கள் நுண்ணுயிரிகள் (gut bacteria flora) வாழ்கின்றன. பிறக்கும்போது தாயின் தொப்புள் கொடி, உடற் திரவங்கள், பிறப்புறுப்பு ஆகியவற்றில் வாழும் நுண்ணியிர்கள் தாயிலிருந்து குழந்தைக்குத் தாவிக்கொள்கின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள். சில கலாச்சாரங்களில் சேறு பூசிக் குளிப்பது மிக நீண்டகாலமாகக் பின்பற்றப்பட்டு வரும் பழக்கம்.

கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள், வளரும்போது அவர்களது வாழிடங்களில் வாழும் நுண்ணியுர்களும் அக் குழந்தைகளின் உடற்துவாரங்கள் வழியாகச் சென்று குடல், மூக்குக் குழி, காதுக்குழிகள், பிறப்புறுப்புகள், பல்லிடுக்குகள், குடல், தொப்புள் குழி, தோல் ஆகிய பகுதிகளில் தங்கி வாழ்கின்றன. மண்ணை வேண்டுமென்றே உண்ணும் குழந்தைகளிலும், தற்செயலாக உடற்துவாரங்கள் மூலம் உட்புகும் அழுக்குகள் மூலமும் பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிரிகள் உடலுக்குள் செல்வதுமுண்டு. இதே போலவே ஆடு, மாடு போன்ற இதர உயிரினங்களும் தமது தாயிலிருந்தும், வாழும் சூழிடம், உணவு போன்றவற்றின் மூலமும், உறவாடும் இதர விலங்குகள் மூலமும் இந்நுண்ணுயிர்த் தொற்றுக்கு ஆளாகின்றன.

இப்படியாக ஆயிரக்கணக்கான விதம் விதமான நுண்ணுயிரிகள் தாம் வாழிடத்தில் வதியும் இதர உயிர்களுடன் ஒற்றுமையாக ஒருவரையொருவர் அழித்துக்கொள்ளாமல் வாழ்வதன் மூலம் இயற்கைச் சமநிநிலையை பேணி வாழ்கின்றன.

நுண்ணுயிரிகள் வாழும் மனிதர்களின் குடல்களில் அவை மனிதரது உடற்தொழிற்பாட்டுக்குத் தமது உதவிகளைச் செய்கின்ற அதே வேளை உடலும் அவை ஆரோக்கியமாக வாழ்வதற்கு இடமளிக்கின்றது.கர்ப்பிணிகள் மண்ணைத் தின்னும் பழக்கம்

உலகின் பல கலாச்சாரங்களில் கர்ப்பிணிப்பெண்கள் மண்ணைத் தின்பது வழக்கமாக உள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு இய்றகையாக எழும் மசக்கை எனப்படும் வாந்தி அல்லது குமட்டலைத் தீர்க்க மண்ணைச் சப்பிடுகிறார்கள் எனப்படுகிறது. நவீன நகரங்களில் வாழும் கர்ப்பிணிப்பெண்கள் உண்ணும் மண் பெரும்பாலும் நச்சுப் பதார்த்தங்கள் கலந்திருக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்குமாதலால் பல மருத்துவர்கள் கர்ப்பிணிகள் மண் உண்பதைத் தவிர்க்கும்படி கூறுகிறார்கள்.

சமநிலை பாதிப்பு

நவீன வாழ்முறைகளைப் பின்பற்றி, நகரங்களில் வாழும் மக்களிடையே பாவனைக்குள்ளாகிவரும் கிருமிநாசினிகள், நோய் தீர்ப்பதற்காக மருத்துவர்களால் வழங்கப்படும் ‘அண்டிபயோட்டிக்ஸ்’ எனப்படும் மருந்துகள், தீமை தரும் நுண்ணியிர்களை மட்டுமல்லாது நன்மை தரும் நுண்ணுயிர்களையும் சேர்த்தே கொன்றுவிடுவதுமுண்டு. எனவே நீண்ட கால ‘அண்டிபயோட்டிக்ஸ்’ பாவனையை மருத்துவர்கள் சிபார்சு செய்வதில்லை. சமையலறைகளின் தளபாடங்கள், பாத்திரங்கள் மீது இயற்கையாக வளரும் நுண்ணுயிர்களை நவீன கிருமிநாசினிகள் கொன்றுவிடுவதால் எமக்குப் போதுமான நட்புள்ள நுண்ணுயிரிகள் அருகி விடுகின்றன.

இப்படியான நட்புள்ள நுண்ணுயிரிகள், வாய் முதல் குதம் வரையிலும், இதர உடற் துவாரங்களிலும் மறைந்து வாழ்கின்றன. இவற்றிநால் ஏர்படும் பல நன்மைகளில் முக்கியமானது நாம் சாப்பிடும் தாவர உணவைச் சமிபாடடையச் செய்வது. இதனால் மலச் சிக்கல், சமிபாட்டுக் கோளாறு போன்ற பீடைகள் ஏற்படுவது தவிர்க்கப்படுகின்றன.

உடற் பருமனும் நுண்ணுயிர்களும்

ஒருவரது உடற்பருமன் அதிகரிப்பதற்கு பரம்பரைக் காரணங்களுட்படப் பல்வேறு காரணங்கள் இருப்பினும், குடலில் வளரும் நுண்ணுயிர்களும் இதற்கான ஒரு காரணமென ஆய்வுகள் கூறுகின்றன. நுண்ணுயிர் வளர்ப்பை, உடற்பருமனைக் குறைக்கும் சிகிச்சைகளில் ஒன்றாகப் பாவிக்க முடியுமா எனப் பல ஆராய்ச்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடல் நுண்ணுயிர் மாற்று (Fecal Microbia Transplant (FMT)) என்பது இச் சிகிச்சை முறைக்குப் பெயர்.மலக் குளிசை

இச் சிகிச்சையின்போது, ஆரோக்கியமான ஒருவரது குதத்திலிருந்து பெறப்படும் மலத்தின் ஒரு சிறு பங்கு உடற் பருமன் அதிகமுள்ளவரது குடலுக்குள் (குதத்தினூடு) புகுத்தப்படுகிறது. இவற்றைச் சற்று நாகரீகமச் செய்வதற்கான புதிய அணுகுமுறைகளும் தற்போது அறிமுகமாகியுள்ளன. மலக் குளிசை (poop pill) மற்றும் நுண்ணுயிர்க் குளிசைகள் (probiotics) ஆகியனவும் இவ்வாறு குடல் நுண்ணுயிர் (microbiome) வளர்ப்பிற்கு உதவுகின்றன.

நுண்ணுயிருக்கும் உடலுக்கும் என்ன சம்பந்தம்?

குடல் நுண்ணுயிர் என்னும்போது அது ஒருவரின் சமிபாட்டுத் தொகுதியில் நெடுங்காலமாக வாழும் பல்வகை நுண்ணுயிரினங்களின் தொகுப்பைக் குறிக்கிறது. ஒருவரது உடலிலிலுள்ள கலங்களின் எண்ணிக்கையைவிட அவை அதிகம். எமது உடலின் சமிபாடு, நோய்த் தடுப்பு, மூளையின் ஆரோக்கியம் ஆகியவற்றின் தொழிற்பாடு சீராக இயங்க இந் நுண்ணுயிர்கள் பெரிதும் உதவுகின்றன.

ஒருவரது உடற்பருமனை நிர்வகிக்கும் உடலின் தொழிற்பாட்டில் நுண்ணுயிர்கள் பெரும்பங்கு வகிக்கின்றன என்ற சந்தேகம் நீண்டநாட்களாக மருத்துவ சமூகத்தில் இருந்துவருகிறது. ஆனால் அதை நிரூபிக்க முடியாமல் விஞ்ஞானிகள் திண்டாடி வருகின்றனர்.

அமெரிக்காவிலுள்ள் மாயோ கிளினிக்கில் அதிகமான உடற்பருமனைக் கொண்ட 26 பேருக்கு பருமனைக் குறைப்பதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டதோடு, அவர்களது சமிபாட்டுத் தொகுதியிலுள்ள நுண்ணுயிரிகளையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்தார்கள். இச் சிகிச்சையின் முடிவில், சிகிச்சை மூலம் உடற்பருமன் குறைக்கப்பட்ட 9 பேர்களது சமிபாட்டுத் தொகுதிகளிலும் காணப்பட்ட நுண்ணுயிரிகள் ஏனைய 17 பேரிலும் காணப்பட்ட நுண்ணுயிரிகளை விட வேறுபாடாக இருந்தன.

உடற் பருமன் குறையாமல் இருந்த 17 பேரின் சமிபாட்டுத் தொகுதியில் காணப்பட்ட நுண்ணுயிரிகளில் மாச்சத்தை (carbohydrate) சமிபாடடையச் செய்யும் பக்டீரியாக்கள் அதிகமாகக் காணப்பட்டன. ஒப்பீட்டளவில், உடற்பருமன் குறைக்கப்பட்டவர்களில் இப் பக்டீரியாவின் எண்ணிக்கை குறைவாக இருந்த அதே வேளை, ஃபாஸ்கோலார்க்ட்டோபக்டீரியம் (Phascolarctobacterium) இருந்தது அவதானிக்கப்பட்டது.எனவே எங்கள் குடலிலில் வாழும் சில வகையான பக்டீரியாக்களே நாம் மெலிதாக இருக்கிறோமா அல்லது பருமனாக இருக்கிறோமா என்பதைத் தீர்மானிக்கின்றன என இவ்வாராய்ச்சி ஓரளவு நிரூபித்தது.

ஒருவருடைய மலத்தின் சிறுபகுதியை இன்னொருவருக்குச் செலுத்துவதன் மூலம் இப் பக்டீரியாக்களை வளர்த்தெடுக்க முடியுமா?

மேற்கண்ட பரிசோதனையின் பின்னர் இப் பரிசோதனையை எலிகளில் செய்தார்கள். உடற்பருமனைக் குறைக்கக்கூடிய எலிகளின் குடல்களில் இருந்து சிறு பகுதி மலத்தை எடுத்து பருமனான எலிகளின் குடலுக்குள் செலுத்தி ஆராய்ந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தவாறே அவ்வெலிகளின் உடற்பருமன் குறைந்ததை அவர்களால் அவதானிக்க முடிந்தது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இச்செயற்பாடு மனித குலத்துக்குப் புதிதான ஒன்றல்ல. ஆயிரமாயிரம் வருடங்கள் பழமையான இச் சிகிச்சைமுறையை ஒரு கலாச்சாரப் பழக்கமெனக்கூறி நவீன மருத்துவம் புறந்தள்ளியிருந்தது. குடல்களில் ஏற்படும் நோய்களுக்குத் தீர்வாக இவ்வகையான சிகிச்சைமுறைகளை மனித குலம் பாவித்து வந்துள்ளது. தற்போது FMT என அழைக்கப்படும் இந் நடைமுறை உடற்பருமனைக் குறைக்கும் ஒரு சிகிச்சை முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.Probiotics

இதே வேளை, தேவைக்குமதிகமாக எடுக்கப்படும் அண்டிபயோட்டிக்ஸ் என்னும் மருந்து ஒருவரது நோய்க்குக் காரணமான நுண்ணுயிரிகளை அழிப்பதுடன், அவரது சமிபாட்டுத் தொகுதியில் வாழும் இதர நட்பான நுண்ணுயிரிகளையும் சேர்ந்தே அழித்துவிடுகிறது. அதே போல கிருமிநாசினிகளைக் கையாள்பவர்களது உடல்களில் வாழும் நுண்ணுரிகளும் சிலவேளைகளில் கொன்றொழிக்கப்படுகின்றன. இவற்றை நிவர்த்தி செய்வதற்காக சில மருத்துவர்கள் probiotics எனப்படும் பக்டீரியாக்கள் கொண்ட குளிசைகளை எடுக்கும்படி பரிந்துரைக்கிறார்கள்.

இயற்கை உணவுகள்

தமிழர்களின் கலாச்சார உணவுகளில் பல இப்படியான ‘probiotics’ நுண்ணியிரிகளைக் கொண்டுள்ளன. அநேகமான புளிக்க வைத்த உணவு வகைகள், பழஞ்சோறு, காடி போன்றவற்றில் போதுமான நுண்ணுயிரிகள் உள்ளன. இருப்பினும் எல்லா உணவுகளும் எல்லா நோய்களுக்கும் சிகிச்சைகளாக மாட்டா. எப்போதும் உங்கள் மருத்துவருடன் ஆலோசித்து உங்கள் வாழ்க்கைமுறைகளையும், மருந்து முறைகளையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

இதர சிகிச்சைகள்

உடற் பருமனைக் குறைக்க தற்போது இச் சிகிச்சைமுறை பாவிக்கப்பட்டாலும், இதன் பிரயோகங்கள் அளப்பரியன என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். குடல் நுண்ணுயிர்களை விரும்பியவாறு மாற்றியமைப்பதன் மூலம், ஆட்டிசம், பார்க்கின்ஸன்ஸ், கொலாயிட்டிஸ் போன்ற வியாதிகளைத் தீர்க்க முடியுமா எனப் பல ஆராய்ச்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் தீர்க்கமுடியுமென விஞ்ஞானிகள் கருதும் நோய்களின் பட்டியல்:

 • Arthritis
 • Asthma
 • Autism
 • Chronic Fatigue Syndrome
 • Clostridium Difficile Infection
 • Colitis
 • Crohn’s Disease
 • Eczema
 • Fibromyalgia
 • IBS (Irritable Bowel Syndrome)
 • Insulin Resistance
 • Metabolic Syndrome
 • Mood Disorders
 • Multiple Sclerosis
 • Obesity
 • Parkinson’s Disease
 • Psoriasis

இதைப்பற்றிய விளக்கம் பாகம் 2 இல் தொடரும்….